கோவை அருகே லாரி மீது இடிந்து விழுந்த சுவர்; எரிவாயு கசிவால் பரபரப்பு
மழை காரணமாக திடீரென அதிகாலை 4 மணியளவில் அங்கிருந்த சுற்றுச் சுவர் ஒன்று இடிந்து எரிவாயு லோடுடன் இருந்த லாரிகள் மீது விழுந்தது. இதில் எரிவாயு வால்வுகள் உடைந்தன.
கோவை திருமலையாம்பாளையம் அருகே சமையல் எரிவாயுவுடன் நின்றிருந்த லாரி மீது சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றிக் கொண்டு கோவை கணபதியில் உள்ள எரிவாயு நிறுவனத்திற்கு ஒரு லாரி வந்தது. கொச்சி-சேலம் புறவழிச்சாலை வழியாக வந்த அந்த லாரி நேற்று நள்ளிரவில் கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள லாரி நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது அப்பகுதியில் கனமழை பெய்துள்ளது. இந்த நிலையில் மழை காரணமாக திடீரென அதிகாலை 4 மணியளவில் அங்கிருந்த சுற்றுச் சுவர் ஒன்று இடிந்து எரிவாயு லோடுடன் இருந்த லாரிகள் மீது விழுந்தது.
இதில் எரிவாயு வால்வுகள் உடைந்தன. இதனால் லாரியில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டது. லாரியில் இருந்து எரிவாயு கசிந்து வெளியேறியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில், லாரியில் ஏற்பட்ட கசிவை நிறுத்த எரிவாயு ஊழியர்கள் விரைந்தனர். மேலும் அங்கு தீயணைப்பு துறையினரும் குவிக்கப்பட்டனர். லாரிகளை சுற்றி சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவு வரை காவல் துறையினர் தீக்குச்சி, செல்போன், டார்ச் லைட் போன்றவற்றை பயன்படுத்தாமல் இருக்க அறிவுறுத்தி கண்காணித்து வந்தனர். மேலும் பாலக்காடு சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்று பாதையில் மாற்றி விடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இரண்டு வால்வுகள் அடைக்கப்பட்ட நிலையில் மூன்றாவது வால்வை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.