"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
விடுதலை படத்தில் இடம்பெற்றுள்ள தத்துவம் இல்லாத தலைவன் என்ற வசனம் குறிப்பிடுவது நடிகர் விஜய்யா? அல்லது சீமானையுமா? என்று விவாதம் எழுந்துள்ளது.
தமிழ்நாடு வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு போட்டியாக நடிகர் விஜய்யும் இந்த முறை களத்தில் இறங்கியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தத்துவம் இல்லா தலைவன்:
சட்டமன்ற தேர்தலில் நெருங்கும் சூழலில், அடுத்தாண்டு முதல் ஏராளமான அரசியல் நகர்வுகளையும், எதிர்பாராத திருப்பங்களையும் எதிர்பார்க்கலாம். இந்த நிலையில், வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான விடுதலை 2ம் பாகத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியானது. அந்த ட்ரெயிலரின் இறுதியில் தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டுமே உருவாக்க முடியும். வளர்ச்சியை கிடையாது என்று விஜய் சேதுபதி பேசுவது போல இருக்கும்.
வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் யாரை குறிப்பிட்டுள்ளது என்று நேற்று முதல் சமூக வலைதளங்களில் பெரிய மோதலே நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வரும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
கருணாநிதிக்கு புகழாரம்:
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தவெக-வின் முதல் அரசியல் மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளையும், செயல் திட்டங்களையும் அறிவித்தார். அவரது கொள்கை அறிவிப்புக்கு பிறகு சில கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், சில கட்சிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
குறிப்பாக, விஜய்க்கு தொடக்க காலம் முதலே ஆதரவு தெரிவித்து வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மிக கடுமையாக விஜய்யை விமர்சித்து வருகிறார். இந்த சூழலில், விடுதலை 2ம் பாக ட்ரெயிலரில் “என்னை மாதிரி படிக்காத ஒருத்தரு தண்டவாளத்துல தலை வச்சு படுத்ததாலதான்.. உன்னை மாதிரி ஒருத்தன் படிச்சுட்டு வந்துருக்க” என்ற வசனம் மூலமாக கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
சீமானா? விஜய்யா?
கருணாநிதிக்கு எதிராகவும், தி.மு.க.வுக்கு எதிராகவும் தீவிரமாக செயல்படுபவர் சீமான். அதேசமயம், தற்போது தனது ரசிகர்கள் பலத்தை நம்பி அரசியல் களத்திற்கு வந்திருப்பவர் விஜய். இதனால், தத்துவம் இல்லாத தலைவர் என்ற வசனம் குறிப்பிடுவதா சீமானையா? விஜய்யையா? என்று சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.
நாம் தமிழர் தொண்டர்களும், சீமான் ஆதரவாளர்களும் அதில் குறிப்பிட்டிருப்பது விஜய்யையே என்று கூறி த.வெ.க.வினரை மிக கடுமையாக தாக்கி வருகின்றனர். மேலும், தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டுமே உருவாக்க முடியும் என்று விஜய்யையே குறிப்பிட்டிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்:
ஆனால், தமிழக வெற்றி கழகத்தினர் தத்துவம் இல்லாத தலைவர் சீமானே என்று சாடி வருகின்றனர். அதாவது, சீமானின் பல்வேறு முரண்பட்ட பேச்சுக்கள், பெரியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பற்றிய அவரது கருத்துக்களை மேற்கோள் காட்டி சீமானை விமர்சித்து வருகின்றனர். இதனால், சீமானே தத்துவம் இல்லாத தலைவர் என்று தவெக ஆதரவாளர்களும், விஜய் ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் தத்துவம் இல்லாத தலைவர் உதயநிதி ஸ்டாலின் என்று துணை முதலமைச்சரை விமர்சித்து வருகின்றனர். அவரும் நடிகராக இருந்து தன்னை மக்கள் மத்தியில் பிரபலமாக்கி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸ் தளத்தில் பெரும் விவாதத்தை தற்போது இந்த தத்துவம் இல்லாத தலைவன் யார்? என்ற தலைப்பு ஏற்படுத்தியுள்ளது. வெற்றி மாறன் சீமானுடன் நெருக்கமான நட்பு கொண்டவர் என்பதால் அவர் விஜய்யையே குறிப்பிட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.