ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ADMK Generalbody Meeting: அதிமுக பொதுக்குழுவை கூட்டம் வரும் டிசம்பர் 15ம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தலைமையிலான கள ஆய்வுக் கூட்டத்தில் அடி, தடி மற்றும் தள்ளு முள்ளு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம்:
அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(il)-ன்படி, வருகின்ற 15.12.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன விவாதிக்கப்படும்?
வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, கட்சியை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மேற்கொள்ளப்படும் ஆய்வுக் கூட்டங்களில் நிர்வாகிகள் இடையே தொடர்ந்து அடிதடி மற்றும் தள்ளுமுள்ளு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதுபொதுவெளியில் கட்சி மீதான அபிப்ராயத்தை மாற்றியுள்ளது. இந்நிலையில் தான், அதிமுக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.