ஆட்டோக்களில் புத்தகங்களை வாசித்துக்கொண்டே பயணிக்கலாம் ; கோவை போலீஸின் அசத்தல் முயற்சி
ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் வகையிலும், குற்றங்களை குறைக்கும் வகையிலும் "லைப்ரரி ஆன் வீல்ஸ்" என்ற பெயரில் ஆட்டோ நூலகம் துவக்கப்பட்டுள்ளது.
கோவையில் முதல்முறையாக ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் வகையிலும், குற்றங்களை குறைக்கும் வகையிலும் "லைப்ரரி ஆன் வீல்ஸ்" என்ற பெயரில் ஆட்டோ நூலகத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் தாக்கத்தால் நாளுக்கு நாள் புத்தக வாசிப்பு திறன் என்பது குறைந்து வருகிறது. அந்த வகையில் புத்தக வாசிப்பை மேம்படுத்துவதற்காகவும், காவலர்களின் மன இறுக்கத்தை போக்கும் வகையிலும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் காவல் நிலையங்களில் நூலகங்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இது காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இன்று தனியார் அறக்கட்டளை மூலம் ஆட்டோ நூலகம் மற்றும் பொதுமக்கள் புத்தகம் அன்பளிப்பாக வழங்க பெட்டி ஆகியவற்றை துவக்கி வைத்தார். துடியலூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சையது என்பவரது ஆட்டோவில், பயணிகளுக்கு பயன்படும் வகையில் தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள், தினசரி நாளிதழ்கள், சானிடைசர் மற்றும் சாக்கெட்லெட் பெட்டியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை துவக்கி வைத்து பின்பு காவல் ஆணையர் பாலகிருஷ்ணனன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவை மாநகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடி வருகின்றன. ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஒய்வு நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும், பயணிகள் பயணத்தின் போது நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும் மினி நூலகம் அமைக்கப்படுகிறது. மாநகரில் உள்ள எல்லா ஆட்டோக்களிலும் மினி நூலகம் செயல்படுத்தப்படும். சையத் என்பவரின் ஆட்டோவில் கலாம் பவுண்டேசன் சார்பில் மினி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பயணம் இனிதாகவும், சுகமாகவும் இருக்கும் வகையில் மினி நூலகம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
புத்தகங்கள் மனிதர்களிடம் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க பங்களிப்பு அளிக்கின்றன. நூலகங்களில் நூல்கள் உள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் வீடுகளில் புத்தகம் வைத்துள்ளனர். வாய்ப்பு கிடைக்கும் போது வாசிக்க வேண்டும் என்பதற்கான தெருக்களில் வீதிதோறும் நூலகங்கள் மற்றும் ஆட்டோக்களில் மினி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் படிப்பதன் மூலம் அறிவை வளர்க்க முடியும். புத்தகங்கள் அறிவை கூர்மை செய்யும் ஆயுதம். புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், மக்கள் அமைதியாக வாழ்க்கை வாழவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வாசிப்பு குற்றங்களை குறைக்க உதவும். ஆட்டோக்களில் தன்னம்பிக்கை மற்றும் பெண்கள் தொடர்பான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.
வீதிதோறும் நூலகங்களில் குழந்தைகள் கற்பனைத்திறனை வளர்க்கும் வகையில் கதை புத்தகங்கள் வைத்துக் கொண்டுள்ளோம். இதனால் குழந்தைகள் பயனடைவார்கள். மாலை நேரங்களில் தேவையற்ற விஷயங்களில் நேரத்தை செலவிடுவதையும், மொபைல் போன் பயன்பாட்டை குறைக்கவும் புத்தகங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். கால்டாக்ஸிகளில் இது போல நூலகம் தொடங்க முயற்சி செய்யப்படும். மாதம் தோறும் இந்த புத்தகங்கள் மாற்றப்படும். இந்த முன்னெடுப்பு குற்றங்களை குறைக்கவும் உதவும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்