கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு; மேலும் இருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
முகமது அசாருதீன் மற்றும் முகமது இட்ரிஸ் ஆகியோர் மீது என்.ஐ.ஏ. துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 2022 ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட போது காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகள், சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் இவ்வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜமேசா முபின் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் என்.ஐ.ஏ. தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து ஜமேசா மூபினின் தீவிரவாத செயலுக்கு உதவியதாக முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ்கான், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி ஆகிய 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் கோவை உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது இத்ரீஸ், இலங்கை குண்டு வெடிப்பு வழக்கில் கேரள சிறையில் இருந்த அசாரூதின், போத்தனூர் திருமலை நகரை சேர்ந்த தாஹா நசீர் (27) ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இதுவரை இவ்வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 11 பேர் மீது நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் முகமது அசாருதீன் மற்றும் முகமது இட்ரிஸ் ஆகியோர் மீது நேற்று என்.ஐ.ஏ. துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், அசாருதீன் சிறையில் இருந்த போது, தன்னை சந்தித்த மூன்று பேரை சதி திட்டத்தில் ஈடுபட தூண்டியதாகவும், இதனால் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட உமர் பாரூக் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அமீராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், பொது நிர்வாகம், காவல் துறை, நீதித்துறை போன்றவற்றை குறி வைத்து தாக்க திட்டமிட்டதாகவும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.