(Source: ECI/ABP News/ABP Majha)
அரவக்குறிச்சி : கார் மோதி கல்லூரி பேராசிரியை உயிரிழப்பு
கரூர் அரவக்குறிச்சி அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது கார் மோதிய விபத்தில், கல்லூரி பேராசிரியை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தூர்
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், சாலையில் போக்குவரத்து எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. இருந்தபோதிலும் அத்தியாவசிய தேவைக்காக தமிழக அரசு ஒரு சில வாகனங்களுக்கு சில தளர்வுகள் உடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள இ - பதிவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் வழங்கியபிறகு அவர்கள் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது கார் மோதிய விபத்தில், கல்லூரி பேராசிரியை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர் (காரை ஓட்டி வந்தவர்) மற்றும் அவரது மகன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு தசைநார் டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 45) இவர் பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி (வயது 41) இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகன் வேது (வயது 9) . தனது கணவர் கணேஷ் மற்றும் வேது மகனுடன் பெங்களூரில் இருந்து சொந்த ஊரான விருதுநகர் வந்து தங்கியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று கணேஷ், ராமலட்சுமி, வேது ஆகிய 3 பேரும் விருதுநகரில் இருந்து பெங்களூருக்கு கார் மூலம் புறப்பட்டனர். காரை ஓட்டி வந்தவர் கணேஷ் இவர்கள் வந்த கார் கரூர் மாவட்டம், அருகே உள்ள ஆண்டிபட்டிகோட்டை தேசிய நெடுஞ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அப்போது நிலை தடுமாறி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு மீது மோதி எதிர்ப்புறம் உள்ள சாலையில் உருண்டு சென்று பலத்த சேதமடைந்தது. இதில் காரில் இடிபாடுகளில் சிக்கிய ராமலட்சுமி சம்பவ இடத்திலேயே பலியானார். கணேஷ் மற்றும் அவரது மகன் வேது படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்த சாலை விபத்து குறித்து தகவல் தெரிந்த உடன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த அரவக்குறிச்சி போலீஸார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்தில் பலியான பேராசிரியர் ராமலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஊரடங்கு காலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இழப்பு மற்ற இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்நிகழ்வு கரூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் ,அரவக்குறிச்சி போலீஸார் இந்த சம்பவம் ஓட்டுனரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.