A Raja : விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பிய எம்.பி., ஆ.ராசா.. வீடியோ..
கோவை அருகே விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட ஆ.ராசா, தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் நேற்று நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட அன்னூர், கணேசபுரம், கருவலூர், அவிநாசி, உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். காலை அன்னூர் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், மாலையில் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது "மணிப்பூர் விவகாரத்தில் பாஜக அரசு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும், மத்திய அரசால் மாநிலங்கள் பழி வாங்கப்படுவதாகவும்" குற்றம்சாட்டினார். மேலும் மக்களை வாட்டி வதைக்கும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வராமல் இருக்க பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அவினாசி தெக்கலூர் அருகே விபத்தில் சிக்கிய இளைஞரை தனது காரில் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நீலகிரி எம்.பி. ஆ.ராசாhttps://t.co/wupaoCzH82 | #Coimbatore #DMK #ARaja #MPRaja #Accident pic.twitter.com/VbW2KSvoJL
— ABP Nadu (@abpnadu) August 16, 2023
இதனைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு சென்னை செல்வதற்காக அவிநாசியில் இருந்து சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை வழியாக கோவை விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் சுங்கச்சாவடியை ஆ.ராசாவின் கார் கடந்து செல்லும் போது, சாலையில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற திருப்பூரைச் சேர்ந்த தமிழ்செல்வன் (22) என்ற இளைஞர் முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளார். இதில் தமிழ்செல்வனுக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.
இதனைப் பார்த்த ஆ.ராசா உடனடியாக தனது ஆதரவாளர்களுடன் காரை நிறுத்தி இறங்கி வந்தார். அப்போது அந்த இளைஞருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க ஆ.ராசா ஏற்பாடு செய்தார். பின்னர் தனது காரில் தன்னுடன் பயனித்த மருத்துவர் கோகுலை, அந்த இளைஞருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, ஆ.ராசா கோவை விமான நிலையம் சென்று விமானம் மூலம் சென்னை சென்றார்.
இதனிடையே நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்வனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளைஞருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சை குறித்து மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அவர் விசாரித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் விபத்தில் சிக்கிய இளைஞரை உடனடியாக மீட்டு தன்னுடைய ஆதரவாளர்களை மருத்துவமனைக்கு உடன் அனுப்பி சிகிச்சை விவரம் குறித்து தனக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.