(Source: ECI/ABP News/ABP Majha)
கொரோனாவை வென்ற 95 வயது முதியவர் - கைதட்டி வழி அனுப்பிய மருத்துவர்கள்
கொரோனா தொற்றில் இருந்து 95 வயது முதியவர் மீண்டு இருப்பது, அத்தொற்று பாதிப்பில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கோவையில் 95 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு பூரண குணமடைந்து, அத்தொற்றில் இருந்து மீள முடியும் என பலருக்கும் நம்பிக்கையூட்டியுள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை பரவல் நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்புகள், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது அலையின் வீரியம் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல கொரோனா தொற்று பாதிப்பினால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீள முடியாமல் இளம் வயதினரும் அதிகமாக உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த 95 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு பூரண குணமடைந்துள்ளார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. 95 வயதானவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு சமீபவத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து செல்வபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செய்த மருத்துவப் பரிசோதனையில் பழனிசாமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அம்மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ குழுவினர், அவருக்கு சிகிச்சை அளித்தனர். நோய் தொற்றினால் துவண்டு போகாத முதியவர், தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சையை ஏற்றுக் கொண்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். இதன் பலனாகவும் அவரின் மனத் தைரியத்தின் காரணமாகவும் கொரோனா நோயுடனான போராட்டத்தில் வெற்றி பெற்று பூரண குணமடைந்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து பழனிசாமி வீடு திரும்பினார். பழனிசாமி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வெளியேறும் போது, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கைதட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டால் பலரும் மனமுடைந்து விடுகின்றனர். மன தைரியத்தை இழப்பதால் உடல் பாதிப்புகளும் அதிகரிக்கின்றன. கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தாலும், குணமடைய மன ரீதியாக தைரியமும், நம்பிக்கையும் முக்கியம். அந்த வகையில் 95 வயது முதியவர் பழனிசாமி நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதனால் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இது போல மற்றவர்களும் மன தைரியத்துடன் இருக்க வேண்டும். அதேசமயம் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிவதோடு, தனி மனித இடைவெளியை கடைபிடித்தால் கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்” எனத் தெரிவித்தனர்.
கொரோனா தொற்றில் இருந்து 95 வயது முதியவர் மீண்டு இருப்பது, அத்தொற்று பாதிப்பில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.