கோவை: இரும்பு கம்பிகள் ஏற்றி வந்த லாரி மோதி விபத்து - 43 ஆடுகள் உயிரிழப்பு
எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் சென்ற ஆடுகள் மீது மோதி விபத்துள்ளானது. இந்த விபத்தில் 43 ஆடுகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
கோவை அருகே சாலையில் சென்ற ஆடுகள் மீது இரும்பு கம்பிகள் ஏற்றி வந்த லாரி மோதி விபத்து 43 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனக்கு சொந்தமான 400 ஆடுகளை இன்று அதிகாலை கேரளாவில் இருந்து நாகராஜ், ஆறுமுகம், முத்து ஆகிய மூன்று பேர் மூலம் கோவை சூலூர் நோக்கி சாலையில் அழைத்து வந்துள்ளனர். வேளந்தாவளம் வழுக்கல் வளைவு அருகே வந்த போது, எதிரே சூலூரில் இருந்து இரும்பு கம்பி லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் சென்ற ஆடுகள் மீது மோதி விபத்துள்ளானது. இந்த விபத்தில் 43 ஆடுகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும் 15 ஆடுகள் காயமடைந்தன. மற்ற ஆடுகள் பயத்தில் சாலை அருகே இருந்த காட்டுக்குள் இறங்கியதால் உயிர் தப்பின. இந்த விபத்தில் ஆடுகளை ஓட்டி வந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை. இந்த விபத்து தொடர்பாக கந்தேகவுண்டன்சாவடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லாரி ஓட்டுநரான கேரளா மாநிலம் ஒத்தப்பாலத்தை சேர்ந்த முகமது ரம்மி என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டுப்பன்றியால் ஒருவர் உயிரிழப்பு
இதேபோல கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இன்று காலை இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது திருவள்ளுவர் நகரை அடுத்த நர்சரி பகுதியில் காட்டு பன்றி ஒன்று மலையில் இருந்து கீழே இறங்கி சாலையைக் கடந்து உள்ளது. அப்போது இவரது வாகனத்தின் மீது உரசி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த நாகராக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் வனத் துறை மற்றும் தடாகம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத் துறையினர் மற்றும் காவல் துறையினர் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் மற்றும் வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனத்துறையினர் காட்டு பன்றியை தேடும் பணியை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்