கோவை ஆழியாறு அணையில் 23 காட்டு யானைகள் முகாம் ; சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில், தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.வழக்கமாக இரவு நேரங்களில் அதிகமாக உலா வரும் காட்டு யானைகள் தற்போது பகல் நேரங்களிலும் உலா வருகின்றன.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் பின்புறம் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியாக உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்து வந்த 23 யானைகள் கொண்ட காட்டு யானை கூட்டம் ஆழியாறு அணையின் பின்புற பகுதியில் முகாமிட்டுள்ளது. யானை குட்டிகளுடன் உள்ளதால் ஆக்ரோஷமாக காணப்படுகிறது.
மேலும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளான நவமலை, சின்னார்பதி ஆகிய இடங்களுக்கு யானைக் கூட்டம் வராமல் தடுக்க வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். மேலும் யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நவமலை வழியாக செல்லும் மின்சார ஊழியர்கள் வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும் எனவும், அப்பகுதியில் உள்ள மக்கள் கவனமாக இருக்குமாறும் வனத்துறையினர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். அணையின் கரையோரம் யானை கூட்டம் தென்படுவதால் வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் காட்டு யானைகளை துன்புறுத்தக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
காரை வழிமறித்த காட்டு யானைகள்
இதேபோல கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை வெள்ளிங்கிரி மலைக்கு பக்தர்கள் காரில் சென்றுள்ளனர். அப்போது முதல் வளைவில் காட்டு யானைகள் சத்தம் கேட்டதால், கார் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தி உள்ளார். அப்போது திடீரென அந்த சாலையில் 2 ஆண் யானைகள் வந்து நின்றது. நீண்ட நேரமாக அதே பகுதியில் நின்ற யானைகள், பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் நுழைந்தது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போளுவாம்பட்டி வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். மேலும் யானை ஊருக்குள் வராமல் இருக்க பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். பூண்டி சாலையில் இரண்டு காட்டு யானைகள் கம்பீரமாக நிற்கும் காட்சிகளை காரில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான மேட்டுப்பாளையம், பெரியநாய்க்கன்பாளையம், போளுவாம்பட்டி, ஆழியாறு உள்ளிட்ட பகுதிகளில், தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக வழக்கமாக இரவு நேரங்களில் அதிகமாக உலா வரும் காட்டு யானைகள் தற்போது பகல் நேரங்களிலும் உலாவி வருவது குறிப்பிடத்தக்கது.