தேவையின்றி வலம் வந்தவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய ஆரணி காவல்துறை!
ஆரணியில் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்காமல் விதிமுறைகளை மீறி வெளியே சுற்றி திரிந்த வாகன ஓட்டிகளுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கியது காவல்துறை.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை அதிக அளவில் பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. காலை மளிகை கடை, பால் கடை அத்தியாவசிய பொருட்கள் கடைகள் மட்டும் திறக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதை மீறி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி சாலை, மார்கெட் வீதி, சத்தியமூர்த்தி கடை வீதிகளில் வாகன ஓட்டிகள் தேவையின்றி சுற்றி திரிந்தனர். பல முறை காவல் துறையினர் வாகன ஓட்டிகளை எச்சரித்தும் அதிக அளவில் சுற்றி திரிகின்றனர்.
இதனை அறிந்த டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையிலான நகர காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் பழைய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். தேவையின்றி வெளியே சுற்றி திரியும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
மேலும் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றி திரிந்த இளைஞர்களை டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தோப்புக்கரணம் போட வைத்து இனிமேல் நாங்கள் சாலைகளில் சுற்றி திரிய மாட்டோம் என உறுதி மொழி ஏற்க வைத்து நூதன முறையில் தண்டனை வழங்கினார். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியில் வரவேண்டுமே தவிர வேறு எந்த தேவைக்காகவும் பொதுமக்கள் வெளியே வர கூடாது என்று டிஎஸ்பி கோட்டீஸ்வரன் எச்சரித்து வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க காந்தி மார்க்கெட்டில் அதிக அளவில் மக்கள் கூட்டம் குவிந்ததால் கொரோனா தொற்று அதிக அளவில் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட நகராட்சி நிர்வாகம் காய்கறி மார்க்கெட்டை தற்காலிகமாக பெரிய மைதானத்திற்கு மாற்றினார்கள்.
இன்னிலையில், அங்கும் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டுவருகிறது.
மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொது மக்கள் மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமலும் கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கி செல்வதால் அங்கேயும் டி.எஸ்.பி தலைமையில் ஒளி பெருக்கி மூலம் மாஸ்க் அணிய வேண்டும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தினமும் அறிவுறுத்தி வருகின்ற நிலையில் தற்போது தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறனர். கடந்த முதலாவது அலையின் போது ஊரடங்கை மீறி வலம் வந்த பலருக்கு போலீசார் நூதன தண்டனைகளை வழங்கினர். அது அவர்களை கட்டுப்படுத்தவும் செய்தது. தீவிரம் காட்டும் இந்த இரண்டாவது அலையில் பொதுமக்கள் பயமின்றி வெளியே வளம் வருகின்றனர்.
அவர்கள் மீது கறார் காட்ட வேண்டாம் என அரசு தெரிவித்ததால், போலீசாரும் அவர்களை எச்சரித்து அனுப்புவது மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற நூதன தண்டனைகள் வழங்கினால் தான் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் திருந்துவார்கள்.