ஆட்டிசம் நிலையாளரான மகனுடன் தவிக்கும் ஆதரவற்ற தாய்.. உதவிக்கரம் நீட்டும் மாவட்ட நிர்வாகம்.!
சென்னை அருகே ஆட்டிச நிலையால் அவதிப்படும் சிறுவன். செய்வது அறியாமல் தவிக்கும் தனித்து வாழும் தாய், உதவிக்கரம் நீட்டுமா மாவட்ட நிர்வாகம்?
சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சோனியா. இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணமாகி பிரபு என்ற மகன் உள்ளார். சோனியா காதல் திருமணம் செய்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே சோனியா மற்றும் அவருடைய கணவர் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். சோனியாவின் மகன் பிரபு, பிறந்ததிலிருந்தே நோய்வாய்ப்பட்டு வந்துள்ளார். அதே போல மற்ற குழந்தைகளை காட்டிலும் விளையாட்டு உள்ளிட்ட குழந்தைகள் செய்யும் விஷயங்களில் பின்தங்கியுள்ளார். அதேபோல பிரபுவிற்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்துள்ளது.
அதேபோல பிரபு ஆட்டிச நிலையால் அவதிப்பட்டு வருகிறார். இது ஏற்பட்டால் உரையாடலிலும், சமூகத்தில் மற்றவர்களுடனும் கலந்து பழகுவதிலும் பெரும் பாதிப்புகள் உருவாகும். அந்த குழந்தைகள் செய்ததையே மீண்டும் மீண்டும் செய்வார்கள். இவர்கள் தன்னையறியாமல் இதை செய்யும் நிலைக்கு ஆளாவார்கள்.
கணவன் இல்லாமல் தன்னுடைய வயதான தாய் மற்றும் தந்தையுடன் சோனியா வசித்து வருகிறார். பெருங்களத்தூர் அருகே தனியார் மருந்து கடையில் பணிபுரியும் சோனியா, மாதம் வெறும் எட்டாயிரம் ரூபாய் மட்டுமே சம்பாதிப்பதாகவும் அதில் பாதி பணம் வீட்டின் வாடகைக்காக செலவழிந்து விடுவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். அதேபோல வேறு வீடு பார்த்துக் கொண்டு செல்லலாம் என்று பார்த்தால் கூட ஆட்டிச நிலை குழந்தை இருப்பதால், வாடகை வீட்டில் கூட இடம் தருவதில்லை என கண்ணீர் மல்க நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
மாற்றுத்திறனாளியாக இருக்கும் தன்னுடைய மகனுக்கு ஆதார் கார்டு கூட இல்லை, அதைப் பெறுவதற்கு பல முறை முயற்சி செய்தும் இதுவரை பல காரணங்களைக் கூறி தட்டிக் கழிக்கிறார்கள் என குற்றம் சாட்டினார். ஒரு வேலை வாங்க வேண்டும் என அதற்கு முயற்சி செய்தால் கூட குழந்தையை அழைத்துக் கொண்டு செல்வதற்கு ஆட்டோ உள்ளிட்டவை தேவைப்படுவதால், அலுவகத்திற்கு குழந்தை பிரபுவை அழைத்து செல்ல நாள் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வரை செலவழிந்து விடுவதாகவும் வறுமையில் இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பதாகவும் தெரிவித்தார்
தான் வேலைக்குச் செல்லும் நேரத்தில் வயதான தன்னுடைய தாய் தான் பிரபுவிற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்கிறார் என்றார், சோனியாவின் தந்தைக்கு வயது அதிகமாகி விட்டதால் அவராலும் வேலைக்கு செல்ல முடியவில்லை எனவே மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்த பெரும் சிரமம் இந்த காலத்தில் இருக்கும் பொழுது, இந்த சிறப்பு குழந்தையை எப்படி கவனிக்க முடியும் என கவலையுடன் தெரிவிக்கிறார்.அதே போல குழந்தையை கவனிப்பதற்காக சிறப்பு பள்ளிகளில் சேர்க்கலாம் என்று பார்த்தால் கூட மாதம் 5,000 ரூபாய் வரை கேட்கிறார்கள். அதற்கு என்ன செய்வது என தெரியவில்லை இதற்கு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்