பட்டா மாறுதல் ; கிராம நிர்வாக அலுவலர்களின் முறைகேடு , பொதுமக்களை ஏமாற்றும் அதிகாரிகள்
பட்டா மாறுதல் கோரும் விண்ணப்பங்களை நிராகரிப்பதில், வருவாய் துறை அதிகாரிகளின் புதிய அணுகு முறை பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இ - சேவை மூலம் பட்டா விண்ணப்பம்
வீடு , மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர் , அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இ - சேவை மையங்கள் வாயிலாக பொதுமக்கள் பதிவு செய்கின்றனர். இந்த விண்ணப்பங்கள் , நேரடி பெயர் மாற்றம் என்றால் கிராம நிர்வாக அலுவலருக்கும் , உட்பிரிவு உருவாக்க வேண்டியிருந்தால் நில அளவையாளருக்கும் அனுப்பப்படும்.
வசூல் வேட்டையில் அதிகாரிகள்
குறிப்பிட்ட அவகாசத்துக்குள் பரிசீலனை முடித்து , பட்டா மாறுதல் செய்ய வேண்டும். இதில் தகுதியில்லை என்பது உறுதியாகும் விண்ணப்பங்களை மட்டுமே, கிராம நிர்வாக அலுவலர்கள் நிராகரிக்க வேண்டும். ஆனால் தங்களிடம் உள்ள நிராகரிக்கும் அதிகாரத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் தவறாக பயன்படுத்தி , வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. தகுதி , இணைப்பு ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யாமல் , பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக , பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விண்ணப்பதாரர்கள் கூறியதாவது ;
பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் பரிசீலனையில் வரிசை முறையை கடைப்பிடிக்க வேண்டும். இதன்படி வரிசையில் முதலில் இருக்கும் விண்ணப்பத்தின் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழிமுறையால் , தங்களுக்கு விருப்பப்பட்ட விண்ணப்பங்களை முதலில் முடித்து கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.
ஆனால், கிராம நிர்வாக அலுவலர்கள், இதில் பின்னால் இருக்கும் சில விண்ணப்பங்களை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் , வரிசையில் முதலில் இருக்கும் விண்ணப்பங்களை உரிய காரணம் இன்றி நிராகரிக்கின்றனர்.
இதுகுறித்து , கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டால், புதிதாக விண்ணப்பம் பதிவு செய்யுங்கள். முதலில் உங்களுடையதை முடித்து கொடுக்கிறேன் என்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் தவறான நோக்கத்துக்கு வரிசை முறை கட்டுப்பாட்டை சிதைக்கின்றனர்.
இதனால் தகுதியுள்ள பொது மக்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பட்டா மாறுதல் விஷயத்தில் தவறுகளை தடுக்க, வருவாய் துறை கண்காணிப்பு புதிய மையத்தை துவக்கி உள்ளது.
இந்த மையம் வந்த பின்னும், கிராம நிர்வாக அலுவலர்களின் அணுகுமுறை மாறவில்லை. தவறிழைக்கும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி கூறியதாவது ;
வரிசை முறையில் தகுதியான விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிட்டு இருக்கிறோம். தவறு செய்யும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இவ்வாறு அவர்கள் கூறினர்.





















