இன்று முதல் நடமாடும் மளிகை விற்பனை தொடக்கம்
சென்னையில் மளிகை கடை வியாபாரிகள் மற்றும் நடமாடும் வாகனங்கள் மூலம் வீதி வீதியாக சென்று விற்பனை செய்ய 2,197 கடைக்காரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் குறித்த தகவல்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மளிகை பொருட்களை நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தள்ளுவண்டி வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டத்தை தொடர்ந்து வீடுகளுக்கு சென்று மளிகை பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதித்துள்ளது.
அதன்படி, சென்னையில் மளிகை கடை வியாபாரிகள் மற்றும் நடமாடும் வாகனங்கள் மூலம் வீதி வீதியாக சென்று விற்பனை செய்ய 2,197 கடைக்காரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் குறித்த தகவல்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மற்றும் தொலைபேசி ஆர்டர்களின் மூலமும் மளிகை பொருட்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொது முடக்க காலத்தில் மக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை அவர்களின் பகுதிகளுக்கே நேரில் சென்று வழங்க வழிவகை செய்துள்ளது பெருநகர சென்னை மாநகராட்சி.
— Greater Chennai Corporation (@chennaicorp) May 30, 2021
விற்பனை பற்றிய விவரங்களுக்கு https://t.co/76YS8RRv4R என்ற இணையதளப் பக்கத்திற்கு செல்லவும். pic.twitter.com/Q6RQAC27oj
முன்னதாக, 'ஊரடங்கு வரும் 31-5-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.
எனினும், பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும்.
தமிழகத்தில் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு
மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பளை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7-00 மணி முதல் மாலை 6-00 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.
இது தவிர, பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.