செங்கல்பட்டு : ஜேஷ்டாதேவி, மூத்த தேவி, மூதேவி... கண்டெடுக்கப்பட்டது 11-ஆம் நூற்றாண்டின் சோழர் கால சிலை..!
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே 11-ஆ ம் நூற்றாண்டு சேர்ந்த சோழர் கால சிலை கண்டெடுக்கப்பட்டது.
தவ்வை ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக பலகாலங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஆய்வாளர்கள் தாய்த் தெய்வ வழிபாட்டில் இந்த தவ்வை வழிபாடு இருந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சாக்தத்தில் இவள் வழிபாடு முக்கிய இடத்தில் இருந்துள்ளது. ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக வழிபடப்பட்டு பிறகு தனியாகப் பிரிக்கப்பட்டாள். சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றினை நவாபரணம் என்று அழைக்கின்றனர். இந்த ஆபரணங்களில் இரண்டாவது ஆபரணமாகத் தவ்வை இருக்கிறார்.
பல்லவர்களின் ஆட்சிக் காலமான 8-ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார். பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக் குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது. மூதேவி ( தவ்வை ) குறித்த தகவல் சங்க இலக்கியங்களிலும், திருவள்ளுவர், அவ்வையார் போன்ற பெரும்புலவர்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
பழமையான இச்சிலை குறித்து தொல்லியல் துறையினர் உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் எண்ணமாக உள்ளது.