ஜி.எஸ்.டி சாலையில் நெரிசலுக்கு தீர்வு! கருங்குழி - பூஞ்சேரி புது ரூட் ! தென்மாவட்ட மக்களுக்கு குறைந்தது தலைவலி !
karunguzhi to poonjeri: " ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கருங்குழி முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி வரை புதிய நான்கு வழி சாலை அமைக்கப்பட உள்ளது"

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, கருங்குழி - திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம் பூஞ்சேரிக்கு இடையே 28 கிலோமீட்டர் தூரத்திற்கு, 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை இ.சி.ஆர்., மற்றும் ஜி.எஸ்.டி ஆகிய சாலைகளில் இணைப்பு சாலையாக இருக்கும்.
வாழ்வு தரும் சென்னை
சென்னை பலதரப்பட்ட மக்களுக்கு வாழ்வு தரும் நகரமாக இருந்து வருகிறது. தென் மாவட்டங்களில் பெரிய அளவில் வேலை வாய்ப்பு இல்லாததால், தென் மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளை சேர்ந்த மக்கள் வேலை தேடி சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல்
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமென்றால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை (ஜி.எஸ்.டி சாலை) மட்டுமே பிரதான சாலையாக இருந்த வருகிறது. இந்த சாலையில் நாளுக்கான வாகன நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும், சென்று வருகின்றன. வரும் காலங்களில் இது பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவே பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. இதனால் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நெரிசலுக்கான பிரச்சனை என்ன ? Reason Behind GST Road Traffic
சென்னை திருவான்மியூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் வாகனங்கள் தென் மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமென்றால், சென்னை நகருக்குள் சென்று சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அடைய வேண்டிய சூழல் உள்ளது. அந்த சாலை வழியாக செங்கல்பட்டு சுங்கச்சாவடியை கடப்பதே மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது.
இந்த சூழல் காரணமாக எரிபொருள் வீணாகிறது, நேரம் வீணாகுவது மற்றும் வாகன நெரிசல் அதிகரிப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே இதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை எழுந்தன.
கருங்குழி - மகாபலிபுரம் பூஞ்சேரி சாலை
இதைக் கருத்தில் கொண்டு, மாநில நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழி பகுதியில் இருந்து மாமல்லபுரம் பூஞ்சேரி வரை 4 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதிய விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக சுமார் 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாலை திருக்கழுக்குன்றத்திற்கு, வெளியே அமையும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. தற்போது திருக்கழுக்குன்றம் உள்ளே செல்லும் வகையில், சாலை அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்பட உள்ளது.
சுமார் 28 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளன. கருங்குழி, கக்கிலப்பேட்டை, பூதூர், வல்லிபுரம், திருக்கழுக்குன்றம் வழியாக பூஞ்சேரி சந்திப்பை அடையும். பூஞ்சேரி சந்திப்பை இந்த சாலை அடைவதால், ஒரே நேரத்தில் பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இரண்டு சாலைகளையும் இதன் மூலம் அணுக முடியும்.
கணக்கெடுப்பு பணிகள்
இப்பணி தொடர்பாக தனியார் நிறுவனங்கள் வாயிலாக, வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு மற்றும் வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திருக்கழுக்குன்றம் வழியாக இந்த திட்டம் செயல்படுத்த சாத்தியக்கூறுகள் இருந்தால், நிதி வழங்கவும் நிதித்துறை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறப்பு அம்சங்கள் என்ன ? - Key Features of Karunguzhi to Poonjeri Road
இந்த சாலை சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையாக இருக்கும்.
தென் மாவட்டத்திற்கு செல்பவர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக, இந்த 4 வழிச்சாலையை பயன்படுத்தி, எளிதாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை அடைய முடியும். இதன் மூலம் பயணம் நேரம் கணிசமான குறையும்.
சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களிலும் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















