கழிவு நீர், குடிநீராக மாறும் அதிசயம்! இது நடப்பது காஞ்சியில்தான் - எப்படி தெரியுமா..?
Kanchipuram: "காஞ்சிபுரம் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 360 லட்சம் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கப்பட உள்ளது"

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 68 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 360 லட்சம் லிட்டர் கழிவுநீர் நன்னீராக மாற்ற முடியும்.
காஞ்சிபுரம் மாநகராட்சி
சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம் மாநகராட்சி, கோயில்கள் நிறைந்த நகரமாகவும், நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து, செல்லக்கூடிய நகரமாகவும் காஞ்சிபுரம் இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், குடியேறுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சியை பொருத்தவரை, தற்போது 51 வார்டுகள் இருக்கின்றன. மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளடக்கி, விரிவடைய உள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் வசிக்கும் பொது மக்களுக்கு, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டிய கட்டாயம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை திட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 40 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடியிருப்பு மற்றும் வணிகம் என மொத்தம் 21,000 சாக்கடை இணைப்புகள் செயல்பட்டு வருகின்றன. செவிலிமேடு, ஓரிக்கை, திருக்காலிமேடு, நத்தப்பேட்டை போன்ற பகுதிகளில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன்மூலம் 15,000 புதிய இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளன. இதற்காக உலக வங்கி 300 கோடி ரூபாய் நிதி வழங்கியிருந்தது. அதேபோன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், 68 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
செயல்படாத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் சேகரிக்கும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, நத்தப்பேட்டை ஏரியில் விடுவதற்கு திருகாலிமேடு பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம், பல ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர், நேரடியாக நத்தப்பேட்டை ஏரிகள் கலக்கிறது.
இதனால் ஏரி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை, நிலத்தடி நீர் மிக மோசமாக பாதிப்படைந்து இருக்கிறது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுதன. இந்த ஏரி நீரால் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டதாக மாநகராட்சி மீது அடுக்கடுக்கான புகார்கள் இருந்தன. இதனால்தான் இப்பகுதியில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டிய கட்டாயம், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ஏற்பட்டது.
புதிய சுத்திகரிப்பு நிலையம்
சீக்குவன்சிங் பேட்ச் ரியாக்டர் Sequencing batch reactors (SBR) என்ற தொழில்நுட்பத்தின் படி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட உள்ளது. இது புதிய தொழில்நுட்பம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மிக குறைந்த இடத்திலேயே அமைய உள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் நாள் ஒன்றுக்கு, 360 லட்சம் லிட்டர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் அமைய உள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன ? Key Features of Water Treatment Plant
கழிவுநீர் சுத்திகரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும், நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும், நீர் மறுபயன்பாடு குறையும், உள்ளிட்ட நன்மைகள் ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
5 ஆண்டுகள் வரை தண்டர் விடப்பட்டு, ஒப்பந்ததாரர் மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பராமரிக்க வகையில், ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கழிவுநீர் சுத்திகரித்து கிடைக்கும் தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதேபோன்று தேவை ஏற்படும் பட்சத்தில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.




















