Cargo Ship Service: சென்னை முதல் புதுச்சேரி வரை... நாளை தொடங்குகிறது சரக்கு கப்பல் சேவை...!
சென்னை முதல் புதுச்சேரி வரை நாளை முதல் சரக்கு கப்பல் சேவை தொடங்குகிறது. இதன்மூலம் பயண நேரம், செலவு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை முதல் புதுச்சேரி வரை நாளை முதல் சரக்கு கப்பல் சேவை தொடங்குகிறது. இதன்மூலம் பயண நேரம், செலவு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பொதுவாக சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் கனரக வாகனங்கள் சாலை வழியை பயன்படுத்துவதால் பல நேரங்களில் குறித்த நேரத்தில் சரக்குகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றடைவதில் பின்னடைவு ஏற்படுகிறது. என்னதான் மத்திய, மாநில அரசுகள் சாலை விரிவாக்கம், புதிய சாலைகள், பாலங்கள் அமைத்தாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.
குறிப்பாக தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் இருந்து சென்னைக்கு உதிரி பாகங்கள் வருவதற்கும், சென்னையில் தயாரிக்கப்படும் பொருட்கள் பிற இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதால் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.
இந்த பிரச்சினையை சரிசெய்யும் பொருட்டு சென்னை முதல் புதுச்சேரி இடையே வாரம் இருமுறை சரக்கு கப்பல் நாளை (பிப்ரவரி 27) முதல் இயக்கப்பட உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் சென்னை துறைமுக அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி துறைமுகம் சரக்குகளை வருவாயைப் பகிர்ந்து கொள்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
அதனை தொடர்ந்து சரக்கு கப்பல் இயக்குவதற்காக துறைமுக அமைப்பு, சரக்குகளை கையாளும் இயந்திரம் போன்றவை வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சுமார் 67 மீட்டர் நீளமுள்ள சரக்கு கப்பல் வாரத்தில் 2 முறை சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் மாதத்திற்கு 600 TEU ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சேவைகள் பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கார்பன் வெளியேற்றத்தையும் குறைக்கும் என கூறப்படுகிறது. இந்த சரக்கு சேவை மூலம் 25% பணம் மிச்சமாகும் என்றும், பயண நேரம் 12 மணி நேரம் ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது.