Chennai Sea Bridge | 7.6 கி.மீ... கடல்மேல் ஒரு பாலம்... சென்னைக்கு விரைவில் வருகிறதா பாம்பன் மாடல்?
சென்னை துறைமுகம் முதல் மணலி சாலை-திருவொற்றியூர் சந்திப்பு வரை ‘கடல் பாலம்’அமைக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
துறைமுகத்திற்கு கண்டெய்னர்கள் அதிகளவில் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க சென்னை துறைமுகம் முதல் மணலி சாலை-திருவொற்றியூர் சந்திப்பு வரை ‘கடல் பாலம்’அமைக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து அவரிடம் கோரிக்கை விடுத்தார்.
கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது இத்திட்டத்தை விரைவில் தொடங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் மாநில அரசு அடிக்கடி கடிதங்கள் எழுதுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளாகவே துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலின் காரணமாக அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எண்ணூர்- மணலி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னை துறைமுகத்தின் எண் 1 (ஜீரோ கேட்) லிருந்து எண்ணூர் விரைவுச்சாலை இரண்டுபுறமும் சர்வீஸ் சாலைகளாகக் கொண்டு தேசிய நெடுஞ்சாலைத் துறையால் மேம்படுத்தப்பட்டுள்ளது. இவ்வழியே சுங்க கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. மக்கள் அடர்த்தி மற்றும் கடலுக்கு அருகில் உள்ளதால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய முடியாத சூழல் உள்ளது.
இதையடுத்து போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகள் ஆகியவற்றை தவிர்க்கவும், கண்டெய்னர் ட்ரக் ஒட்டுநர்களுக்கு ஏற்றவகையிலான சாலைகளை அமைக்கவும் மாநில போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை துறைமுகம் முதல் மணலி சாலை-திருவொற்றியூர் சந்திப்பு வரை ‘கடல் பாலம்’அமைக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது
சென்னை துறைமுக வளர்ச்சிக்கும், பெருகி வரும் நகர போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 2-அடுக்கு உயர்மட்ட சாலை பணியினை தொடங்க வேண்டியதின் அவசியம் குறித்து மத்திய அமைச்சரிடம் எ.வ.வேலு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது
மக்கள் தொகை அடர்த்தியின் காரணமாக பொது மக்கள் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு அருகிலுள்ள புறநகர் பகுதிகளில் வசித்து வருகிறார்கள். அன்றாட தேவைகளுக்கும், வேலைவாய்ப்புகளுக்கும், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு இந்த பகுதிகளில் உள்ள மக்கள் செல்ல வேண்டியது அவசியமாகிறது. இதனால், நகர பகுதிகளில் அமைந்துள்ள சென்னா சமுத்திரம், நெமிலி, வானகரம், சூரப்பட்டு மற்றும் பரனூர் ஆகிய 5 சுங்கசாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே இந்த சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.