Chennai Egmore : அடுத்து 3 ஆண்டுகளில் நவீனமாக மாறும் எழும்பூர் ரயில் நிலையம்... ரூ. 734.91 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் தொடக்கம்...
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பலதரப்பட்ட போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைத்து நகரங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளை ரயில்வே அமைச்சகம் முடுக்கிவிட்டுள்ளது. தற்போது 40 ரயில் நிலையங்களில் நவீன வசதிகளை ஏற்படுத்துவதற்காக மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 14 ரயில் நிலையங்களை மறுசீரமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இவற்றுக்கான பணிகள் அடுத்த 5 மாதங்களில் தொடங்கும். நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்வதன் மூலம், வேலை வாய்ப்பு அதிகரிப்பதுடன் மேம்பட்ட பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு, அது பொருளாதாரத்தில் பல மடங்கு சிறந்த விளைவுகளை உருவாக்கும்.
எழும்பூரில் பணிகள் தொடக்கம்
அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், காட்பாடி, மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மொத்தம் 14 ரயில் நிலையங்களை மேம்படுத்த ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூபாய் 734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, ஹதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளானது 3 ஆண்டுகளில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The pace of construction of redevelopment of Chennai Egmore railway station is picking up. Our sincere thanks to the news agencies for covering the progress of the work. We intend to develop a world class station in less than 3 years. #IndianRailways #projects pic.twitter.com/RYxZXDJgV4
— DRM Chennai (@DrmChennai) December 24, 2022
அம்சங்கள்
எழும்பூர் ரயில் நிலையத்தில் வசதியான காத்திருப்பு அறைகள், உணவகங்கள், குழந்தைகள் விளையாடும் இடங்கள், உள்ளூர் பொருட்களை விற்பனை செய்வதற்கான விற்பனை மையங்கள் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்த மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், புதிய கட்டடம், பார்சல் அலுவலகம், நடை மேம்பாலம், காத்திருப்பு அரங்கம், அடுக்குமாடி வாகன காப்பகம் அமைய உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 11 இடங்களில் ஆழ்துளை கருவிகள் மூலம் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுமை கட்டமைப்பு தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அமைக்கப்படும். பயணிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அம்சங்களை கொண்டதாக இந்த ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.