Diwali Case : "ஓவர் குஷி"யில் நேரக்கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்த நபர்கள்..! 163 வழக்குகள் பதிவு..
சென்னையில் நேரக் கட்டுப்பாடு விதிகளை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் பட்டாசுகளை வெடித்து மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் பல்வேறு இடங்களில் தீபாவளி பட்டாசு வெடித்தபோது தீ விபத்துகள் நடந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் 280 இடங்களில் பட்டாசு தொடர்பான விபத்துகள் ஏற்பட்டுள்ளன. எனினும், தீபாவளி பட்டாசு தொடர்பான தீ விபத்துகளில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் 2 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். சென்னை அசோக் நகரில் உள்ள மருந்து நிறுவனக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அசோக் நகர் 2வது அவென்யூவில் உள்ள தனியார் மருந்து நிறுவனக் கடையில் இன்று காலை புகை வெளியானதை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர்.
தகவல் அறிந்ததும் அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைத்தனர். உச்ச நீதிமன்றம் அறிவித்தபடி நேற்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அதாவது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருந்தனர்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசுகள் வெடித்தாலோ, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடித்தாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் சென்னையில் நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வடித்ததாக 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று பட்டாசு வெடி விபத்துக்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனையில் சுகாதார பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர்.