Lockdown Violation | சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதால், நேற்று ஒருநாளில் 159 வாகனங்கள் பறிமுதல்..!
சென்னையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதற்காக நேற்று ஒரே நாளில் 159 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மே மாதம் 10-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. முழு ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்று மாநில அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் பயனாக, கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் 35 ஆயிரம் என்ற அளவில் இருந்த கொரோனா தினசரி பாதிப்பாக இருந்தது. நேற்றைய நிலவரப்படி 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் ஊரடங்கு தளர்வுகளின் புதிய விதியின்படி, மாநிலம் முழுவதும் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்ற மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “ கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், தமிழக அரசு 21.6.2021 காலை முதல் 12.7.2021 காலை வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.
இதன்படி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், முறையான தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகள் செக்டார்களாக வகைப்படுத்தி உரிய சாலை தடுப்புகள் மற்றும் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து இ-பதிவு வைத்திராத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை காவல் குழுவினர் நேற்று மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில் சென்னையில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 152 இருசக்கர வாகனங்கள் மற்றும் 7 ஆட்டோக்கள் என மொத்தம் 159 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 860 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 24 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்றைத் தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.