வண்டு கடித்தாலும் மனித உயிர் போகும்; யாருக்கெல்லாம்? எப்படி? ஏன்? எச்சரிக்கும் மருத்துவர்
கதண்டு வண்டு கடித்து சிறுவன் பலியான நிகழ்வில் கதண்டு, மஞ்சள் நிறக் குளவி Yellow jacketed sting என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மரங்களின் கிளைகளில் கூடுகட்டி வாழும்.

ஒரு சிறு வண்டு தீண்டி மனிதனின் உயிர் போகுமா?
ஆம்.. அந்த வண்டுக்கடிக்கு எதிரான ஒவ்வாமை நமது உடலில் இருப்பின் தீவிர ஒவ்வாமை நிலை ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறி உள்ளதாவது:
எறும்புக்கடி கூட கொல்லும்!
வண்டுக்கடி மாத்திரமன்று நாம் அற்பமென எண்ணும் எறும்புக் கடி கூட அரிதினும் அரிதாக மரணத்தில் கொண்டுய்க்கும் நிலையும் மருத்துவ ஆய்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கதண்டு வண்டு கடித்து சிறுவன் பலியான நிகழ்வில் கதண்டு, மஞ்சள் நிறக் குளவி Yellow jacketed sting என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மரங்களின் கிளைகளில் கூடுகட்டி வாழும். இது கடுமையான முன்கோபி.
மேலும் தனது இருப்புக்கோ தனது ஆளுகைக்கு உட்பட்ட இடத்துக்குள்ளோ வேறேதேனும் விலங்குகள் மனிதர்கள் நுழைந்தால் கடுமையான ஆக்ரோஷத்துடன் கூட்டம் கூட்டமாக மீண்டும் மீண்டும் துரத்தி துரத்தி கொட்டும் தன்மை கொண்டது.
குழந்தைகள் முதல் முதியோர் வரை
நான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில், சுகாதார நிலையத்தை ஒட்டிய கிராமப்புறப் பகுதியில் கிடா வெட்டு விருந்துக்கு குழுமியிருந்த கூட்டத்தின் மீது அங்கு சமைக்கும் போது எழும்பிய புகையினால்- சீற்றம் கொண்டு கதண்டு வண்டுகள் சாரை சாரையாக இன்னார் எவரெனப் பார்க்காமல் குழந்தைகள் முதல் முதியோர் வரை கொட்டித் தீர்த்தன.
அவசர சிகிச்சைக்காக கையில் இருந்த எபிநெஃப்ரின் எனும் அட்ரினலின் ஊசிகளை எடுத்துக் கொண்டு அங்கு விரைந்து இயன்ற அளவு வேகமாக செயல்பட்டு யாருக்கெல்லாம் தீவிர ஒவ்வாமை நிகழ்வு ஏற்பட்டதோ அவர்களுக்கு ஊசியை செலுத்தி விட்டோம். துரிதமாக செயல்பட்டதால் மரண சம்பங்கள் நிகழவில்லை.
அங்கேயே ஒரு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூச்சு ஏங்கி ஏங்கி விடத் தொடங்கியது. எனினும் அந்த நிகழ்வு, சுகாதார நிலையத்துக்கு அருகில் நடந்ததாலும் உடனே குழந்தையை அழைத்து வந்தமையாலும் அதன் உயிர் அன்று காப்பாற்றப்பட்டது.
கதண்டின் கொடுக்கில் மாஸ்டோபேரான் (MASTOPARAN) மற்றும் பாஸ்போலைப்பேஸ் ஏ 1 ( PHOSPHOLIPASE A 1) ஆகிய விஷப்பொருட்கள் உள்ளன. கதண்டுக் குளவி கொட்டும்போது இந்த விஷத்தை நமது தோலுக்குள் செலுத்தி விடுகிறது.
என்னென்ன நடக்கும்?
குறிப்பிட்ட இந்த பொருட்களுக்கு நமது உடலில் ஒவ்வாமை இல்லாவிடில்,
கடித்த இடத்தில் சிவப்பாக மாறும்.
வீக்கம் தோன்றும்.
நன்றாக வலிக்கும்.
பிறகு சில மணிநேரங்களில் வலி குறையும்.
சில நாட்களில் வீக்கம் குறைந்து குணமாகும்.
அதுவே மேற்கூறிய விஷப் பொருட்களுக்கு நமது உடலில் ஒவ்வாமை இருந்தால் ( இதை நாம் முன்கூட்டியே அறிய முடியாது) நமது உடலில் அனாஃபிலாக்சிஸ் எனும் தீவிர ஒவ்வாமை நிகழ்வு ஏற்படும்.
இதனால் மூச்சுக் குழாய் மற்றும் சுவாசப் பாதை திடீரென சுருங்கிக் கொள்ளும். இதனால் கடும் மூச்சுத் திணறல், இருமல், விழுங்குவதில் சிரமம், வியர்த்தல், தலை சுற்றல், ரத்த அழுத்தம் குறைந்து போதல், குமட்டல், வாந்தி, கொஞ்ச நேரத்தில் கவனிக்காது விட்டால் மரணம் சம்பவிக்கும்.
சில நொடிகளில் செலுத்தினால்
அனாஃபிலாக்சிஸ் நேரும் போது உடனடியாக அதற்குரிய மாற்று மருந்தாக இருக்கும் அட்ரினலின்/ எப்பிநெப்ரின் மருந்தை அடுத்த சில நொடிகளில் செலுத்தினால் உயிரைக் காப்பாற்ற முடியும். ஆனால் நோயாளி - மருத்துவமனையை விட்டு தூரமாக இருந்தால் இந்த சிகிச்சை கிடைக்காமல் மரணமடைய வாய்ப்பு அதிகம்.
மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில், இது போன்று வண்டுக்கடி அலர்ஜி இருப்பவர்கள் தங்கள் கைகளில் எப்பிபென் (EPIPEN) எனும் எபிநெஃப்ரின் கொண்ட மருந்துப் பேனாவை கையில் வைத்துக் கொள்ளவார்கள்.
இங்கு அட்ரினலின் அல்லது எபினெப்ரின் மருந்து கொண்டு அவசர நிலைக்கு நோயரே பயன்படுத்திக் கொள்ளும் பேனா உபயோகத்தில் இல்லை. அதற்குக் காரணம் இங்கு இது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமையால் நுகர்வு குறைவாக இருக்கும் காரணத்தால் அந்த மருந்தை பேனா வடிவில் எந்த நிறுவனமும் உற்பத்தி செய்வதில்லை.
எனினும் அரசாங்கம் இது குறித்து முயற்சி எடுத்து எபிபென் பேனா எளிமையான விலையில் பொதுமக்களுக்கு இன்சுலின் பேனா வடிவத்தில் கிடைக்கச் செய்ய ஆவண செய்ய வேண்டும். இது போன்ற நிகழ்வுகளில் அலர்ஜி இருக்கும் ஒருவர் உயிரைக் காக்க உதவும்.
சரி கதண்டு கடிக்கு வருவோம்..
ஒருவரது உடலில் இந்தக் கதண்டுக் கடிக்கு அலர்ஜி இல்லாமலே இருந்தாலும் கூட ஒரே நேரத்தில் 1500 வண்டுகளிடம் கொட்டு வாங்கினால் அந்த விஷத்தன்மையின் காரணமாக மரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
கதண்டுக் குளவி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
முதலில் கடித்த இடத்தில் உள்ள கொடுக்கைப் பிடுங்கி எரிய வேண்டும்
அடுத்து கடித்த இடத்தை நன்றாக சோப் போட்டு சுத்தமாகக் கழுவ வேண்டும். பிறகு கடித்த இடத்தில் ஐஸ் கட்டி வைத்து அழுத்தலாம்.
மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு டெட்டானஸ் தடுப்பூசி பெற்றுக் கொண்டு அதற்குப் பிறகு வீக்கம்/ வலி/ அரிப்பு உள்ளிட்டவற்றுக்கு மருந்து லோசன் ஆகியவற்றைப் பரிந்துரை பெற்று பூசிக் கொள்ளலாம்.
ஒருவேளை கதண்டு கடித்தவுடன் அந்த நபருக்கு மூச்சுத் திணறல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுப் பகுதியில் தொண்டைப் பகுதியில் நெரிப்பது போலத் தோன்றினால் உடனே 108 க்கு கால் செய்ய வேண்டும்.
உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
அங்கு எபிநெஃப்ரின்/ அட்ரினலின் + ஸ்டீராய்டு மருந்துகள் போட்டு உயிர் காப்பாற்றப்பட வேண்டும்.
ஒருவேளை மருத்துவமனை அருகில் இல்லாத நிலையில் கடிபட்டவர் மூச்சுப் பேச்சு இல்லாமல் சுவாசமும் நாடித் துடிப்புமற்று இருந்தால் உடனே சிபிஆர் எனப்படும் இதய சுவாச மீட்பு முயற்சியில் இறங்க வேண்டும்.
மருத்துவ உதவி கிடைக்கும் வரை சிபிஆர் தொடர்ப்பட வேண்டும். எல்லா கதண்டுக் கடியும் உயிருக்கு ஆபத்தாக முடிவதில்லை. ஆனால் அந்த கதண்டு விஷத்துக்கு எதிராக உள்ளார்ந்த அலர்ஜி இருப்பவர்களுக்கு தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு மரணம் சம்பவிக்கிறது. கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருப்போம்.
கதண்டுகள் வாழும் பகுதிகளை விட்டு விலகி இருப்பது நல்லது. வெயில் காலங்களில் கதண்டுகள் எப்போதையும் விட ஆக்ரோஷமாக இருக்கும். காட்டுப்பகுதிக்குள் செல்லும்போது அடர் பளிச்சென்று இருக்கும் நிறத்தில் ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
தேவைப்பட்டால் விஷப்பூச்சி/ கொசுக்கடிக்கு எதிரான களிம்புகள் / பூச்சுகள்/ ஸ்ப்ரேக்களை அடித்துக் கொண்டு செல்வது நல்லது. வெறும் காலில் வனப்பகுதிக்குள் செல்வதைத் தவிர்க்கலாம். .கதண்டுக் கூட்டம் கொட்ட வரும் போது வெறும் காலில் ஓடி காலில் காயம் ஏற்பட்டு விழுந்து விட வாய்ப்புள்ளது.
ஒரு சில கதண்டுகள் நம்மைச் சுற்றுப் போட்டு விட்டால் , இயன்ற அளவு அமைதியாக அப்படியே கீழே படுத்து விடுவது நல்லது. அதை அடிக்க எத்தனிக்கும் போது அதன் பார்வை நம் மீது தொடர்ந்து இருக்கும். கூடவே ஆக்ரோஷமும் அதிகமாகும்.
சரண்டர் ஆகி விடுவது அதாவது கீழே படுத்துக் கொண்டு கால்களை மடக்கி வயிற்றுக்கு கொண்டு வந்து முகத்தையும் உள்ளே வைத்து சுருட்டி மூடிக் கொள்வது எப்போதுமே நம்மை பாதுகாக்கும் நல்ல பொசிசன்.
கடிபட்டு விட்டாலும் முடிந்தவரை கொடுக்குகளை விரைவாகப் பிடுங்கி எரிவது , தீவிர ஒவ்வாமை நிகழ்வைத் தடுக்கும் செயல் கதண்டு வண்டுகள் மகரந்தச் சேர்க்கைக்கு முக்கியமானவை. அவற்றால் பல வனங்கள் வளம் பெறுகின்றன. எனினும் அவற்றின் எல்லைக்குள் நாம் செல்லும்போது அதீத கவனம் அவசியம், எச்சரிக்கை உணர்வும் அவசியம்.’’
இவ்வாறு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.






















