Work From Home Tips | ஆரோக்கியத்தில் கவனம்.. வொர்க் ஃப்ரம் ஹோம் ஊழியர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போது நாம் ஆரோக்கியம் தொடர்பான பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கொரோனா ஆடும் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. நிறுவனங்கள் முடிந்தவரை ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமென அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இணையவழியில் வேலை செய்ய ஏதுவான ஊழியர்கள் பலர் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகின்றனர். கடந்த வருடம் தொடங்கிய வொர்க் ஃப்ரம் ஹோம் பலருக்கு இன்றும் நீடித்து வருகிறது. வழக்கமாக அலுவலகம் சென்று வேலை பார்ப்பதற்கும், வீட்டில் இருந்த படியே அலுவலக வேலை பார்ப்பதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. குறிப்பாக வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போது நாம் ஆரோக்கியம் தொடர்பான பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
புத்துணர்ச்சியோடு தொடங்குங்கள்:
அலுவலகம் என்றால் காலையில் குளித்து முடித்து, ஃபிரஷான ஆடைகளை அணிந்து கிளம்பிவிடுவோம். ஆனால் வீட்டில் இருந்து வேலை என்றால் பலர் தூக்கத்தில் இருந்து எழுந்து நேராக கம்ப்யூட்டர் முன் அமர்வார்கள். வழக்கமான பழக்கத்தை மாற்றாமல் வேலை நேரத்துக்கு முன்பாகவே குளித்துவிட்டு, சவுகரியமான ஆடைகளை அணிந்துகொண்டு நமது வேலையை புத்துணர்ச்சியோடு தொடங்கலாம்.
உங்களுக்கான இடம்:
வீட்டில் இருந்து வேலை என்றாலே அது கம்ப்யூட்டர் தொடர்பான வேலையாகவே இருக்கும். அலுவலக சூழலை பொருத்தவரை சரியான மேசை, நாற்காலி என்ற உரிய செட்டப்புடன் இருக்கும். ஆனால் வீட்டில் இருந்து வேலை என்றவுடன் கிடைக்கும் இடத்தில் லேப்டாப்பை வைத்து பயன்படுத்துவார்கள். ஆனால் வேலைக்கான இடம் மிக முக்கியம். சரியான மேசை, நாற்காலி என்று நம் வேலைக்கான இடத்தை சவுகரியமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் குறைந்தது 8 மணி நேரம் அமர்ந்து வேலை பார்க்கும் போது உடலுக்கு சவுகரியம் மிக முக்கியம். அசவுகரியாக அமர்ந்து வேலை பார்ப்பதால் நாள்போக்கில் முதுகுவலி, கழுத்து வலி போன்ற உடல் பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
சின்ன சின்ன வொர்க் அவுட்:
அலுவலக வேலையை விட வீட்டில் இருந்து வேலை என்றால் உடல் உழைப்பு மேலும் குறைந்துவிடும். படுக்கையில் இருந்து எழுந்து நேராக வேலையில் அமருபவர்களும் உண்டு. இருக்கும் இடத்திற்கே டீ, காபி, உணவும் வந்துவிடுவதால் உடல் உழைப்பு ஜீரோவாக இருக்கும். எனவே அவ்வப்போது ஒரு சின்ன நடை, சின்ன வொர்க் அவுட் முக்கிய முக்கியம். வீட்டுக்குள் ஒரு நடை நடந்து கைகால்களை தூக்குதல், முன்னும் பின்னும் குனிந்து உடலை ஆசுவாசப்படுத்துதல் முக்கியம். குறிப்பிட்ட நேர இடைவெளிக்கு ஒருமுறை உடலை ஸ்ரெட்ச் செய்துகொள்ள வேண்டும். இதனால் முதுகுவலி, கழுத்துவலி போன்ற பிரச்னைகள் ஏற்படாது. அதேபோல் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் கண்களையும் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை 20 நொடிகள் கூர்ந்து பார்க்க வேண்டும். இந்த பயிற்சி உங்கள் கண்களுக்கு ஓய்வு அளித்து புத்துணர்ச்சி பெற வைக்கிறது.
நேரத்திற்கு சாப்பாடு:
வீட்டில் இருந்தாலும் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். வேலைப்பளுவை காரணமாக காட்டி, வீட்டில் தானே இருக்கிறோம் என்று கண்டநேரத்தில் சாப்பாடு என்பதை தவிர்க்க வேண்டும். சாப்பாடு நேரத்தை சரியாக பின்பற்ற வேண்டும். அதேபோல அவ்வப்போது பழச்சாறுகள், தண்ணீர் என நீர் ஆகாரத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நண்பர்களுடன் இணைந்தே இருங்கள்:
வீட்டில் இருந்தே வேலை என்ற சூழல் அலுவலக சூழலுக்கு நேர் எதிரானது. அலுவலகம் சென்றால் நண்பர்களை பார்ப்பது, வேலை தொடர்பான ஆலோசனைகள், கேலி அரட்டைகள் என ஒரு சூழல் இருக்கும். ஆனால் வீட்டில் தனிமை சூழலே பொதுவாக இருக்கும். எனவே வீட்டில் இருந்தே வேலை பார்த்தாலும் செல்போன் அழைப்புகள், வீடியோ கால், மீட்டிங் செயலிகள் என எதாவது ஒரு வழியில் நண்பர்களுடன் அவ்வப்போது இணைந்தே இருக்க வேண்டும். இது நம்மை வேலை தொடர்பான அப்டேட்டிலேயே வைத்திருக்கும்.
வேலை நேரம்:
வீட்டில் இருந்தே வேலை என்றாலும் வேலை நேரத்தை கணக்கிட்டுக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கிறோம் என்பதற்காக அலுவலகம் சார்ந்தே இருக்கவும் கூடாது. நமக்கான, நம் குடும்பத்தினருக்கான நேரம் மிக முக்கியம். தினமும் கூடுதல் நேரம் வேலை பார்ப்பது உடல் அளவிலும், மனதளவிலும் நம்மை சோர்வாக்கும். வேலை மீதான ஆர்வம், நமக்கான நேரம் என்ற எல்லையை சரியாக வகுத்துக்கொள்ள வேண்டும்.
சரியான தூக்கம்:
வீட்டில் இருந்தே வேலை என்றாலும் சரியான நேரத்திற்கு தூங்கி சரியான நேரத்திற்கு கிளம்ப வேண்டும். தூக்கம் உணவைப் போலவே ஆரோக்கியம் சார்ந்த விஷயம் என்பதால் அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.