(Source: ECI/ABP News/ABP Majha)
Wheat Dosa: கோதுமை தோசை சுவையா, அசத்தலா செய்வது இப்படித்தானா...!
கோதுமை மாவில் மொறு மொறு தோசை எப்படி செய்வதென்று கீழே விரிவாக பார்க்கலாம்.
கோதுமை தோசை என்றாலே அதிகமானோருக்கு பிடிக்காது. காரணம் அந்த தோசை கைகளில் பிசு பிசுவென ஒட்டிக்கொள்ளும். சாப்பிடுவதற்கும் அதிகம் சுவையாக இருக்காது. பெரும்பாலானோர் கோதுமை தோசையை வெறுப்பதற்கு இது தான் காரணம். ஆனால் மொறு மொறுவென கோதுமை தோசையை கொண்டு வந்து கொடுத்தால் யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா? தற்போது நாம் சுவையான மொறு மொறு கோதுமை தோசையை எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதில் நமக்கு தேவையான தோசை அளவிற்கு கோதுமை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக 1/4 கப் அரிசி மாவை அதனுடன் சேர்க்க வேண்டும்.
தேவையான அளவு உப்பையும் சேர்த்து மாவை நன்றாக கைகளால் மிக்ஸ் செய்து விட வேண்டும். ஒரு கப் அளவு கோதுமை மாவிற்கு 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து கோதுமை மாவை கட்டி இல்லாமல் முதலில் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
கரைத்து வைத்திருக்கும் கோதுமை மாவில், பொடியாக நறுக்கிய 1 வெங்காயம் , பொடியாக நறுக்கிய 1 பச்சை மிளகாய், சீரகம் 1/4 ஸ்பூன், மிளகாய்த் தூள் - 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகுத்தூள் 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை சேர்த்து நன்றாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதனையடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்றாக சூடு ஆன பின்பு, எண்ணெய் தொட்டு வெங்காயத்தால், நன்றாக தோசை கல்லில் தேய்த்து விட வேண்டும். பின் தயார் செய்து வைத்திருக்கும் மாவை கரண்டியால் எடுத்து, தோசை கல்லை சுற்றி ஊற்ற வேண்டும். இந்த கோதுமை மாவை சாதாரணமாக தோசை சுடுவது போன்று கரண்டியால் ஊற்றி தேய்க்க கூடாது.
மாவை தோசைக்கல்லில் பரவலாக ஊற்றும் போது, ஓட்டை ஓட்டையாக தோசை மாறும். அதன் பின்பு தோசையின் மேல் நன்றாக எண்ணெய் ஊற்றி, மொறுமொறுவென்று தோசையை சிவக்க வேக விட வேண்டும். இப்போது தோசையை திருப்பி போட்டு எடுத்து விடலாம். இந்த தோசை சாப்பிடுவதற்கு மொறு மொறுவென சுவையாக இருக்கும். இதனுடன் தேங்காய் சட்னி அல்லது காரசட்னி வைத்து சாப்பிடலாம். இந்த தோசை சைடிஷ் இல்லாமல் சாப்பிட்டாலும் சுவையாகவே இருக்கும்.
மேலும் படிக்க
TN Assembly: அக்டோபர் 9ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை - சபாநாயகர் அப்பாவு
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )