அன்பும் அறனும் 9 | உங்கள் செல்ல குழந்தையை பூமிக்கு வரவேற்கத் தயாராகுங்கள்.. வெல்கம் பொருட்கள் இதோ..
குழந்தைகளின் துணிகளை தனித்தனியே வெதுவெதுப்பான நீரில் கிருமிநாசினி கொண்டு அலசி உலர்த்தி மடித்துவைத்துக் கொள்வதால் பாதுகாப்பாக இருக்க முடியும்.
ஏழாம் மாதத்தின் இறுதியிலிருந்தே குழந்தையின் முகம்காணும் எதிர்ப்பார்ப்பு கூடிக்கொண்டே இருக்குமல்லவா?! முழுக்க முழுக்க அந்த உணர்வுகளை அனுபவியுங்கள்.
தூய்மைப் பொருள்கள் தயாரா?!
தாயின் பை ஓரளவு தயாராகி இருக்கும். முந்தைய பகுதிகளில் குறிப்பிட்டதோடு கூடவே தூய்மை செய்யும் பொருள்களான பற்பசை, பல்துலக்கி, சோப்பு போன்றவற்றை எடுத்து வையுங்கள். சேனிடரி நேப்கின்கள் மென்மையான அதேசமயம் அதிகம் உறிஞ்சக்கூடியதாக கிடைப்பவற்றை வாங்குங்கள். மருத்துவமனைகளில் பயன்படுத்துகிற முடி அகற்றும் ரேசர் தரமாக இருப்பதில்லை என்பதால் நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் பிராண்ட்டில் வாங்கி எடுத்துச் செல்லுங்கள். பிங்க் நிற வீனஸ் ரேசர் நன்றாகவே இருக்கிறது.
இவை தவிர, பாத்திரம் கழுவ சோப்பு, தேய்க்கும் நார், கைகழுவும் திரவம், சேனிடைசர், பிளாஸ்க், தட்டு, டிஸ்போஸ் செய்யும் கப், சர்க்கரை, உப்பு போன்ற பொருள்களை தனியாக ஒரு பையில் எடுத்து வையுங்கள். இரண்டு போர்வைகள், பிள்ளையின் துணிகளை அலச கெமிக்கல் குறைவான சலவை திரவம், தேய்க்க பிரஷ் என எனக்கான ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து நானே எடுத்துவைத்தேன். மருத்துவமனையில் உடன்தங்கவிருப்பவருக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் இருக்க இந்தத் தயாரிப்பு உதவும்.
குழந்தைக்கான முதல் பர்சேஸ்!
பஞ்சுபோன்ற விரல்களோடும் குட்டிக்குட்டிக் கண்களோடும் ங்ங... ங்ங... என்ற முதல் ஒலியோடு நம் கைகளில் கொடுக்கப்படுகிற இந்தப் பத்துமாதக் காத்திருப்பின் பலனான நம் பிஞ்சுக்குழந்தையைப் பற்றி ஆயிரமாயிரம் கனவுகளும் ஆசைகளும் நமக்கிருக்கும்.
குழந்தைக்கு முதல் உடையாய் எதை உடுத்துவது? என்ன சோப் பயன்படுத்துவது? எந்த டயாபெர் குழந்தைக்கு ஓரளவு உகந்தது? Baby essentials என்று சந்தையில் விற்கப்படும் அத்தனையும் அவசியமா? மருத்துவமனைக்கு செல்லும்போது தயார்நிலையில் வைத்திருக்க வேண்டியவை எவை எவை? எனப் பார்க்கலாம்.
எதையுமே சேனிடைஸ் செய்து பயன்படுத்தும் இன்றைய சூழலில், குழந்தைக்கான பொருள்களை மட்டும் பிறந்தபின் தான் வாங்கவேண்டும் என்கிற எண்ணங்களை விடுத்து முன்கூட்டியே வாங்குவதே நல்லது.
- முடிச்சு போடுகிற மேல்சட்டைகள் (நல்ல பருத்தியாலானது) -15
- நாடா வைத்து இடுப்பில் முடிகிற வகையிலான இடை ஆடைகள் ( நல்ல பருத்தியாலான உடைகள் தைத்தபடியே கடைகளில் கிடைக்கிறது) - 15 பழைய துணியெல்லாம் வேண்டாம். அந்தத் துணியைப் பயன்படுத்தியவருக்கு ஏதும் தோல் ஒவ்வாமை இருந்தால் அது பிஞ்சு சருமத்தை சிரமப்படுத்திவிடக்கூடும்.
- பருத்தித் துண்டு- 6
(குழந்தையைக் குளிக்கவைத்தபின் துடைக்க மட்டுமே பயன்படுத்துவதற்காக)
- Hooded towel எனப்படுகிற தலையையும் காதையும் போர்த்துகிற தொப்பிபோன்ற அமைப்புகொண்ட துண்டு -3 இது கதகதப்பான உணர்வையும் உறக்கத்தையும் தரும்.
- வாய் துடைக்க துணி- 15
(சிறிய அளவில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு கடைகளில் கிடைக்கிறது. 100% காட்டன் washcloth என்று கேட்டால் கிடைக்கும். குழந்தை நிறைய பால் எடுக்கும். அதைத் துடைக்க மட்டும்.)
- கையுறை, காலுறை -4 செட் (கருவறையைப்போன்ற கதகதப்பு குறைந்தபட்சம் ஓரிரு வாரங்களுக்கேனும் குழந்தைக்குத் தேவை)
- கொசுவலையுடன் கூடிய மெத்தை
(மெத்தையில் பருத்திப் பஞ்சு பயன்படுத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்க)
- Baby carrying nest என்று சொல்லப்படுகிற, பிறந்த குழந்தையைத் தூக்கிச் செல்ல உதவும் zip வைத்த படுக்கை. இது தலைநிற்காத பிஞ்சுக்குழந்தை யார் தூக்கினாலும் குழந்தைக்குப் பாதுகாப்பாக இருக்கும்.
- இரண்டு அல்லது மூன்றடுக்கு மஸ்லின் துணியாலான மெல்லிய போர்வை -1 (குழந்தைக்கென்றே கிடைக்கிறது)
- dry sheets எனப்படுகிற ஈரத்தை உரிஞ்சும் ஷீட்டுகள் ( small, medium, large என வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. M அளவில் வாங்கி இரண்டாக நறுக்கிக் கொண்டால் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்)
- தெர்மாமீட்டர்
(பின்நாட்களில் தடுப்பூசி போடும்போது காய்ச்சலின் அளவைத் தெரிந்துகொள்ள)
பேபி நெயில் கட்டர்
(குளிக்கும்போது கடித்துவிடலாம் என்று பலர் சொன்னாலும் இந்நாட்களில் அப்படிக் குழந்தையின் விரல்களை நம் வாயருகே கொண்டு செல்ல வேண்டாம் என்பதற்காக)
இவைதவிர நீங்கள் விரும்புகிற அல்லது மருத்துவமனையில் பரிந்துரைக்கிற சோப், ஷாம்ப்பூ, பவுடர், டயாபெர், வைப்ஸ் போன்றவையும் அடக்கம்.
துணிகளை தனித்தனியே வெதுவெதுப்பான நீரில் கிருமிநாசினி கொண்டு அலசி உலர்த்தி மடித்துவைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைப்பிறந்தவுடன் கொடுக்க வேண்டியவை- ஒரு சட்டை, துடைக்கத் துண்டு, தலையோடு காதையும் போர்த்தும் துண்டு, சோப் இவ்வளவுதான். இதைத் தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
குழந்தைக்கான பட்டியல் சற்று பெரிதுபோலத் தெரியலாம். இவை குழந்தை பிறப்பு தொடங்கி முதல் மூன்று நான்கு மாதங்கள் வரை போதுமானது. எங்கள் குழந்தை பிறந்த மறுநாளிலிருந்து ஊரடங்கு நீட்டிப்பு தொடங்கியது. கடைகள் ஏதும் இல்லாத சூழலில் இந்த முன்தயாரிப்பு மட்டுமே எங்களுக்குப் பெரிதும் உதவியது. நீங்களும் தயாராகுங்கள்.
பகிர்வு தொடரும்..
முந்தைய தொடர்களை படிக்க...
அன்பும் அறனும் - 1 : குழந்தைக்கு திட்டமிடும் தம்பதியர் இதை படிங்க
அன்பும் அறனும் - 2 : குழந்தை உருவாகிடுச்சா? இதில் கவனம் செலுத்துங்கள்
அன்பும், அறனும் 3: இது அன்னையின் காலம்.. கர்ப்பகாலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
அன்பும் அறனும் -4: குட்டித் தொப்பையாய் கர்ப்பகாலம்.. அழகான இரண்டாம் காலாண்டு பருவம்!
அன்பும் அறனும் -5: அழகான கர்ப்பகாலம்.. 5 மாதங்களுக்கு பிறகான கவனமும்! தேவையும்!
அன்பும் அறனும் - 6: அழகான கர்ப்பகாலம்.. 7வது மாதமும்.. தேவை கவனமும்!
அன்பும் அறனும் 7: கர்ப்ப காலத்தில் என்னவிதமான ஆடைகளை அணிய வேண்டும்?