அன்பும் அறனும் - 2 : குழந்தை உருவாகிடுச்சா? இதில் கவனம் செலுத்துங்கள்
இன்று பெரும்பாலும் நர்ஸிங் ஹோம்களில் காணக்கிடைக்கிற காட்சி என்ன தெரியுமா? கவலை தோய்ந்த முகத்துடன் எதையோ பறிகொடுத்த மாதிரி விட்டத்தையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிற காட்சிதான்.
பிங்க் நிற இரண்டாம் கோடு வந்தவுடன் அடுத்த ஓரிரு நாட்களில் மகப்பேறு மருத்துவரிடம் சென்று உறுதிசெய்து கொள்வதே சிறந்தது. "மூன்று மாதங்கள் போகட்டும்", "அதான் ரெண்டு கோடு வந்துடுச்சே" என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். கரு ஆரோக்கியமாக உருவாகியிருப்பதை மருத்துவர் உறுதிசெய்ய வேண்டும். கருவின் இதயத்துடிப்பை 45 நாட்களிலிருந்து scan மூலம் கேட்கமுடியும். ஒருவேளை ஏதேனும் சிறிய குறைபாடு இருப்பினும் உரிய மருத்துவ வழிகாட்டுதல்கள் நமக்குத் தொடக்கத்திலிருந்தே தேவை.
மருத்துவரை அணுகுதல்
அதேபோல் எந்த நேரத்தில் சிறிதளவு dusky discharge அல்லது உதிரப்போக்குபோல் இருந்தாலும் வீட்டில் சொல்லத் தயங்க வேண்டாம். அது Implantation bleeding என்று செவிவழியாய் உடனிருப்போர் சொல்வதைக் கேட்டு இருந்துவிடக்கூடாது. சிறிய கவனக்குறைவு ஒருவேளை Miscarriage க்கு இட்டுச்செல்லலாம். குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்து மாத்திரைகளையும் தொடக்கத்திலிருந்தே எடுத்துக்கொள்ள மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டும். ஒரே மருத்துவரைத் தொடர்ந்து பார்ப்பது நல்லது. கொஞ்சம் இயல்பாகப் பேசக்கூடிய மருத்துவராக இருந்துவிட்டால் மாதாந்திர பரிசோதனைகளுக்கு பயமின்றிச் செல்லலாம்.
இன்று பெரும்பாலும் நர்ஸிங் ஹோம்களில் காணக்கிடைக்கிற காட்சி என்ன தெரியுமா? கவலை தோய்ந்த முகத்துடன் எதையோ பறிகொடுத்த மாதிரி விட்டத்தையே வெறித்துப் பார்த்தபடி மலர்ச்சியற்ற கண்களோடு கருவுற்ற பெண்கள் அமர்ந்திருக்கிற காட்சிதான். சோகமும் கவலையும் ஓடிவந்து அப்பிக்கொள்கிற அளவுக்கு ஏதோ சிந்தனையிலேயே இருக்கிறார்கள். மருத்துவமனையில் காத்திருப்பதால் நோயாளிபோன்ற மனநிலையோடே இருக்கிறார்கள். கொஞ்சம் திட்டமிடலும் முயற்சியும் இருந்தால் இந்நாட்களை அழகாக எதிர்கொள்ளலாம்.
புத்தகங்கள் எடுத்துச் செல்லுதல்
ஒவ்வொருமுறை பரிசோதனைக்குச் செல்லும்போதும் ரிப்போர்ட்ஸோடு கூடவே சுவாரஸ்யமான புத்தகங்களை எடுத்துச் செல்வதை நான் வழக்கமாக வைத்திருந்தேன். (சுத்த அபத்தம்- ராமானுஜம், பால காண்டம்- நா.முத்துக்குமார், சூரியனின் கோபம்- உதயசங்கர் இப்படியான புத்தகங்கள்). எல்லாரும் கவலையோடு ஸ்கேன் செய்ய அமர்ந்திருக்க நான்மட்டும் புத்தகத்தில் மூழ்கிப்போய் கண்கள் விரிய 'கெக்கே பெக்கே'வெனச் சிரித்துக் கொண்டிருந்த நாட்களவை.
"அப்படி எதைப் படித்து இப்படிச் சிரிக்கிறாங்களோ" என அடுத்த இருக்கையில் அமர்ந்திருப்பவர் எட்டிப்பார்த்த நாட்களுமுண்டு. சில நேரங்களில் ஸ்கேன் அறைக்குள் நுழையும்முன் பக்கத்திலிருப்பவர் விருப்பத்தின்பேரில் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தினை அவரிடம் கொடுத்துச் சென்றதுமுண்டு. இதயம் கனக்கிற புத்தகங்களை இந்த நாட்களில் மறந்தும் தொடவே இல்லை என்பது கூடுதல் தகவல். மகப்பேறு மருத்துவமனைகளின் காத்திருப்பு அறைகளில் புத்தக அலமாரிகள் இருக்குமாறு மருத்துவமனைகள் ஏற்பாடு செய்யலாம். வாராந்திர, மாதாந்திர இதழ்களும் இலகுவான சில புத்தகங்களும் ஆங்கே இடம்பெறலாம்.
அய்யோ கழிப்பறையிலிருந்து அப்பாடா கழிப்பறைக்கு!
கருவுற்ற காலத்தில் தூய்மையான கழிப்பறையைப் பயன்படுத்துவது மிகமிக அவசியமானது. இல்லையெனில் எளிதில் நோய்த்தொற்று ஏற்படும். எனவே, மாதாந்திர பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்லும்போது toilet seatஐ சுத்திகரிப்பு செய்கிற சேனிடைஸர் ஸ்ப்ரே, stand and pee disposable urinals போன்றவற்றைக் கைப்பையில் எப்போதும் வைத்திருந்து பயன்படுத்தலாம். இவை ஆன்லைனில் கிடைக்கின்றன. தொற்றுக்கு ஆட்பட்டு அவதிப்பட்டு பிறகு அதற்கென மருந்து மாத்திரை எடுப்பதிலிருந்து தவிர்க்க மேற்சொன்ன பொருள்கள் நிச்சயம் உதவும்.
மனம் விட்டு பேசுதல்
கருவுற்ற முதல்மூன்று மாதங்களில் (first trimester) Sleeping sickness இருக்கும். காலை விழிப்பதில் அயற்சியும் சோர்வும் ஏற்படும். நமக்கு என்ன செய்கிறது என்பதை நம்மவரிடம் நாம் மனம்விட்டுப் பேசலாம். அவரே புரிந்துகொள்வார் என்று நாம் நினைத்துக்கொள்வது இருவருக்குமே சிரமம். முடிந்தவரை இயல்பாகவும் இலகுவாகவும் இந்நாட்களை எதிர்கொள்ள இணைகள் இருவரும் பேசிக்கொண்டாலே போதும். தாயின் மகிழ்ச்சியான மனநிலை சிசுவின் அறிவுவளர்ச்சியிலும் ஆளுமையிலும் பெரும்பங்காற்றுகிறது என்கிறது அறிவியல். எனவே, மகிழ்வோடு எதிர்கொள்ளுங்கள் மகப்பேறு நாட்களை!
அன்பும் அறனும் - 1 : குழந்தைக்கு திட்டமிடும் தம்பதியர் இதை படிங்க
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )