அன்பும் அறனும் -5: அழகான கர்ப்பகாலம்.. 5 மாதங்களுக்கு பிறகான கவனமும்! தேவையும்!
நிறைய தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி இயற்கை அழைப்புகள் இருக்கும். அடிக்கடி எழுந்துசெல்ல அலுப்பாக இருப்பதால் தண்ணீர் குடிப்பதைக் குறைத்துவிட வேண்டாம்
- கருவுற்றதைப் பதிவுசெய்தீர்களா?
கருவுற்று முதல் ஐந்து மாதங்கள் முடிவடைந்தவுடன் நாம் செய்யவேண்டிய முக்கியமான வேலை - PICME எண் பெறுவது. இதற்கு நமக்கு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகவேண்டும். கருவுற்ற தாய், தந்தை, வீட்டுமுகவரி, ஆதார் எண் போன்ற அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து கொடுத்து PICME எண் பெறுவதற்குப் பதிவுசெய்ய வேண்டும். பதிவு செய்த ஓரிரு வாரங்களில் அந்த எண் கிடைக்கும். பேறுகாலத்தை தனியார்/ அரசு மருத்துவமனை எங்கு பார்ப்பதாக இருந்தாலும் இந்த எண் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
- வலியே! வலியே!
இரண்டாம் காலாண்டின் பிற்பகுதியில் கைகள் கால்களில் லேசான வீக்கம் அவ்வப்போது வந்துபோனது. நெடுநேரம் நிற்கும்போதோ கால்களைத் தொங்கபோட்டபடி அமரும்போதோ கால்களில் வீக்கம் ஏற்பட்டது. அதனால் இரவு படுக்கும் முன், கால்கள் தாங்கும்படியான சூட்டில் வெந்நீரில் சிறிதுநேரம் கால்களை வைத்து அமர்ந்திருப்பதை வழக்கமாக்கியிருந்தேன். இப்படிச் செய்வது கால்களுக்கு இதமாக இருந்ததோடு வலியில்லாத உறக்கத்தையும் தந்தது.
- இயற்கை அழைப்பா?!
நிறைய தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி இயற்கை அழைப்புகள் இருக்கும். அடிக்கடி எழுந்துசெல்ல அலுப்பாக இருப்பதால் தண்ணீர் குடிப்பதைக் குறைத்துவிட வேண்டாம். எப்போதெல்லாம் தண்ணீரின் அளவைக் குறைக்கலாம் என்ற எண்ணம் வருகிறதோ, அப்போதெல்லாம் கருவில் இருக்கிற குழந்தையை நினைத்துக் கொள்ளுங்கள். கழிப்பறை பயன்படுத்துவதில் எந்த வெட்கமும் சோர்வும் வேண்டாம். நம் பாட்டியும் அம்மாவும் அத்தையும் சித்தியும் உடன்பணிபுரிவோரும்கூட இதேபோல் எல்லாவற்றையும் கடந்துவந்திருப்பார்கள். அடிக்கடி எழுந்துபோனால் யாரும் எதுவும் நினைப்பார்களோ என்கிற கவலையெல்லாம் வேண்டாம். அதே நேரத்தில் ஈரமான உள்ளாடைகள் தொடர்ந்து உடலோடு இருப்பது தொற்றுக்கு வழிவகுக்கும் என்பதால் உலர் துண்டு ஒன்றை கழிப்பறையில் வைத்திருந்து பயன்படுத்துங்கள். வேலைக்கு செல்லும் பெண்களும் உலர் டிஷ்யூஸ் பயன்படுத்துங்கள்.
- மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகளுக்கு 'நோ'
கருவுற்றிருக்கிற நேரத்தில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மாத்திரையையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். தனிப்பட்ட முகவர்கள் விற்பனை செய்கிற சத்து மாத்திரைகள், குழந்தைக்கான வளர்ச்சி மாத்திரைகள் என எவ்வகை மருத்து மாத்திரைகளையும் தவிர்த்துவிடுங்கள். அதேபோல், காய்ச்சல் சளி தலைவலி போன்ற உடல்நலக்குறைபாடுகளுக்கு மருந்தகங்களில் தனிப்பட்ட முறையில் கேட்டு மாத்திரைகள் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிருங்கள்.
குழந்தையைச் சுமப்பதால் வயிற்றுப்பகுதி விரிவடையும். அதனால் மேற்புறத்தோலில் லேசான கோடுகள் போன்ற தழும்புகள் தெரியும். இது குழந்தை பிறந்தபிறகு நாளடைவில் சரியாகும் ஒன்று. அல்லது குழந்தை பிறப்புக்குப் பின்னர் சரிசெய்யவேண்டியது. வயிற்றில் குழந்தை இருக்கும்போது மருத்துவர் ஆலோசனையின்றி சந்தைகளில் கிடைக்கிற க்ரீம், திரவம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.
- எதிர்பார்க்காதீர்கள்; கேளுங்கள்
எந்த சந்தேகமானாலும் மருத்துவரிடம் தயங்காமல் கேளுங்கள். எல்லாவற்றையும் மருத்துவரே திருவாய் மலர்ந்து சொல்லவேண்டுமென எதிர்பார்க்காதீர்கள். மருத்துவரும் நம்மைப்போன்ற மிகச்சாதாரண மனிதரே. தினம் பல கர்ப்பிணிகளைப் பார்க்கிற மருத்துவருக்கு, நம்மிடம் எதைச் சொன்னார் சொல்லத்தவறினார் என நினைவிருக்க வாய்ப்பு குறைவு. எனவே, மாதாந்திர பரிசோதனைக்கு செல்லும்போது கேட்கவேண்டிய சந்தேகங்களை முன்பே செல்போனில் குறித்துவைத்துக் கொள்ளுங்கள். உணவு, பழங்கள், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என எதுவானாலும் அவர் சொல்வார் என எதிர்பார்க்காமல் நீங்களாகவே கேட்கலாம். தவறில்லை. கேட்பதை சுருக்கமாகவும் தெளிவாகவும் கேளுங்கள். நல்ல வழிகாட்டல் கிடைக்கும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )