’இலக்கே குறி’ எரி ஈட்டி போலப் பாயும் நாய்கள்..!
இந்தியாவின் வளங்களை உண்டு கொழுக்கத்தடங்கிய பிரித்தானியர்கள், விளையாட்டுக்கும் கேளிக்கைக்கும் இடம் தேடியபோது உதயமானதுதான் இந்த “hunts club “
வேட்டைத் துணைவன் - 9
கன்னி – சிப்பிப்பாறை பகுதி - 1
இலக்கை குறிவைத்து எரி ஈட்டி போலப் பாயும் கூர் முக அமைப்பு கொண்ட வேட்டை நாய்கள் அத்தனையும் சட்டென முதல் பார்வையில் எவர் கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்க வல்லது. கூர் தீட்டிய முகம், இறங்கிய நெஞ்சு, ஒட்டிய வயிறு, சாட்டை வால், துடைத்து எடுத்தது போன்ற ரோமம் என எல்லாமும் சேர்ந்த அதன் தோற்றம் வலுவானதோர் பெரு விலங்கின் எலும்பு சட்டம் போன்றது. அதனுடைய ஒவ்வொரு அசைவிலும் மிக லாவகமானதோர் உடல் மொழியைக் காட்டவல்லது. கன்னி என்றும் சிப்பிப்பாறை என்றும் அதற்கு இப்போது பெயர் ( அது சரியா இல்லையா, அல்லது அது மட்டுமேதான் பெயரா என்பதை பின்னர் விரிவாகப் பார்க்கவிருக்கிறோம்)
எந்தப் பழந்தமிழ் இலக்கியமும் இவை பற்றிப் பாடவில்லை, எந்தச்சிற்பியும் இதை வடிக்கவில்லை, நம் முன்னோரில் எந்த ஓவியரும் இவற்றைத் தீட்ட வில்லை. இருந்தும், இவை தென்தமிழக கிராமங்களில் சிலர் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்ததான் செய்திருக்கிறது. (காரணங்கள் உண்டு இல்லாமல் எப்படி! – அடுத்தடுத்து வரும் ) இந்த இனத்தின் தாக்கத்தை பெருக்கத்தை திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என்ற நாங்கே மாவட்டத்தில் அடக்கி விடலாம். கொஞ்சம் முன்பு வரையறை செய்தோமானால் அன்றைய திருநெல்வேலி மற்றும் முகவை மாவட்டத்தில் கொஞ்சமும் என்று சொல்லிவிடலாம்.
“வெள்ளக்கார போலீஸ்க்காரன் ஒரு ஆளு எங்கிட்டோ இருந்து இந்த நாயக் கொண்டாந்து தூத்துக்குடி துறைமுகத்துல எறக்கி விட்டுட்டு போய்ட்டான். அப்பறோம் நம்ம ஊரு நாட்டுல வேட்டைக்கு போற ஆள்க, அந்த நாய்ல நம்ம நாய்களப் போட்டு ஒடச்சு ( கலந்து – இனவிருத்தி செய்து ) உருவாக்குவதுதான் இந்த நாய்க எல்லாம்” என்ற கதைதான் என் குருநாதர் வாயிலாக நான் கேட்ட வேட்டை நாய் குறித்தான முதல் வரலாறுச் சித்திரம். நல்ல சேவல்கட்டாரிகளுக்கு, கெடா முட்டுக்காரர்களுக்கு, மாடு புடி வீரர்களுக்கு குருநாதர் இருப்பது போல வேட்டை நாய் பிரியர்களுக்கும் உண்டு. வெவ்வேறு கொத்துக்கு தகுந்தபடி அவர்களின் கணக்கு, நாய் தேர்வு எல்லாம் சிற்சில மாறுதல்களுக்கு உட்பட்டது.. கதைகளும் கூட அப்படியே.
இன்று காசு போட்டு புக்கிங் செய்தால் நாய்கள் வீடு தேடி என்ற காலகட்டத்தில் அப்படி ஒரு இனம் ( குருநாதர் ) குன்றிப் போவதில் பெரியதோர் ஆச்சர்யம் எதுவும் கிடையாது இல்லையா ! சரி நம் கதைக்கு வருவோம் வெள்ளைக்காரன் வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்து நமது ஊரில் எறக்கி விட்டதாகவே இருக்கட்டும்.
வந்திறங்கிய ரெண்டு மூன்று நாய்கள் இவ்வளவு எண்ணிக்கைக்கு நிச்சியம் வித்தாக அமைந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அதே நேரம் இதில் துளியும் உண்மை இல்லையென்று ஒதுக்கி விடவும் முடியாது. இந்தக் கதையைக் கேட்டுச் சுமார் எட்டு வருடங்களுக்குப் பின்னர் வரலாற்றில் ஏதோ ஒரு புள்ளி அதில் ஒட்டுவதை என்னால் உணர முடிந்தது.
இந்தியாவின் வளங்களை உண்டு கொழுக்கத்துடங்கிய பிரித்தானியர்கள், விளையாட்டுக்கும் கேளிக்கைக்கும் இடம் தேடியபோது உதயமானதுதான் இந்த “hunts club “. நமது காடுகளில் நரி, மான், மிளா போன்றவற்றை வேட்டையாடுவதற்காகவே பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்டது அது. Madras hunts club, ootacamund hunt club போன்றவை அப்படி உருவானவையே. இங்கு கோடையானால் அங்கும் அங்கு குளிர் ஏறினால் இங்கும் வேட்டை நடந்தது. நடத்துபவர்கள் எல்லாம் வெள்ளைக்கார வீர்ர்கள், இராணுவ – போலீஸ் அதிகாரிகள். நவம்பர் முதல் மார்ச்சு வரையிலான காலகட்டம் வேட்டைக்கு ஏற்ற பருவமாகக் குறிக்கப்பட்டு வாரம் இரு முறை வேட்டை நடந்தது இருக்கின்றது.
1926 ஆம் ஆண்டு H. H. Dodwell எழுதி வெளியான “The nabobs of madras” புத்தகத்தில் madras hunt உடைய தடம் 1751 வாக்கிலேயே தெரிகிறது எனக் குறிப்பிடுகிறார். சுகத்திரத்திற்கும் – பிரிவினைக்கும் பின்னான இந்தியாவில் கிட்டத்தட்ட டில்லி, பம்பாய், பெஷாவர் என 12 இடங்களில் hunt club கள் விரிவாக்கம் செய்யபட்டு இருந்ததை அறிய முடிகிறது.
Madras hunt club பை பொறுத்த வரையில் நரி வேட்டையே பிரதானம். இங்கு அந்த நேரத்தில் அவை பஞ்சம் இல்லாமல் கிடைத்தும் கூட! அதை வேட்டையாட நாய்கள் வேண்டுமே ! அவர்களுக்கு நரி வேட்டையாட உள்ள நாய்களிள் தெரிந்ததும் கிடைத்தது English foxhound கள் தான். English Foxhound, terrier வகை நாய்களை கடல் கடந்து இங்கு கப்பல்களில் கொண்டு வந்தனர். ஒன்று ரெண்டு அல்ல! நூற்றுக்கணக்கில், ஆரியக்கணக்கில் கொண்டு வந்தனர். குறிப்பாக madras hunt club க்கு ! சராசரியாக 1000 பவுண்டுகள் அந்தக் காலகட்டத்தில் அந்நாய்களை பராமரிக்க பிரித்தானியர்கள் செலவு செய்தனர்.
( படித்துப் பார்க்கவும் : Ten years in india : or, the life of a young officer vol. 2)
இவ்வளவு செலவு செய்து நாய்களைத் தருவித்தனரே அவை இங்கு நிலைத்ததா? என்றால் அங்குதான் விழுந்தது ஒருபோரடி! நாள் ஒன்றுக்கு 2, 3 நாய்கள் இங்கு இறக்கத் துடங்கின.. இந்த சூழல் பயணம், நோய் ஏதோ ஒன்றுக்கு அவை தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறி இறந்தது. இந்த hunt club களை நாய்கள் இல்லாமல் என்ன செய்ய என்ற இருள் மண்டிய போதுதான் மதியக் கிழக்கு நாடுகளில் ஒரு ஒளி தெரிந்தது. பெரும் தேடல் துடங்குவதற்கு ஆதாரமான ஒளி, மிகுந்த பிரகாசத்துடன் வீசி வெள்ளை தோல் காரர்களை பாலைவனத்துக்கு அழைத்தது. பின்னர் நடந்ததுதான் பெரிய பெரிய மாற்றங்கள். பார்க்கலாம்..!