Chippiparai Dog: ‘மடிந்த காதுகள், நல்ல உடல்வாகு’ உண்மையான சிப்பிப்பாறை நாய்கள் எப்படி இருக்கும்..?
“சிப்பிப்பாறை நாய்கள் நல்ல உடல்வாகு கொண்டவை. மடிந்த காதுகளுடன், சாம்பல் நிறத்துடனும் இருக்கும் இவை கோவில்பட்டி தாலுக்காவில் பரவி இருந்தன”
வேட்டைத்துணைவன் 16
கன்னி / சிப்பிப்பாறை பகுதி -8
Poligar நாய்கள் அதாவது poligar hounds என்று பிரிட்டிஸ்காரர்கள் குறித்து வைத்த நாய்களை அதன் உருவ அடிப்படையில் தொடரின் துவக்கத்தில் இருந்தே ரெண்டு விதமாக பிரித்தே அணுகி வந்திருக்கிறோம் நினைவிக்கிறதா? சின்ன நினைவு கூறல் வேண்டுமாயின், கூர் முக அமைப்பை ஒத்து வரும் poligar hound நாய்களை ஒரு பிரிவாகவும். பெரிய தலையும் நல்ல உடல் கட்டும் கொண்ட பருவட்டு நாய்களை இன்னொரு பிரிவாகவும் எடுத்துக்கொண்டோம் அல்லவா ! அதேதான். ஒரு அளவுக்கு கூர் முக நாய்கள் பற்றி நெருக்கி தேர்த்தி விட்டோம். அடுத்து ஒரு படி கூடுதல் அறிமுகம் இப்போது அதில் ரெண்டாவதாக வரும் பருவெட்டு நாய்களுக்கு.
“இந்த நாய்கள் 27 முதல் 31 அங்குலம் வரைக்கும் உயரம் வரும். அதனுடைய நிறம் சாம்பல் அல்லது அடர் சாம்பல். அதனுடைய தோல் கிட்டத்தட்ட பன்றியின் தோல் போல அடர்த்தியானது” என்று 1927 ஆம் ஆண்டு வெளியான “dogs: Their history and development” புத்தகத்தின் மூலம் பதிவு செய்கிறார் “எட்வார்ட் செசில் ஆஷ்”. மிகத் திருத்தமான பதிவே தான். அவர் குழம்பவே இல்லை. அட இது அந்த நாய் இல்லையே வேறு ஒன்றே என்று நாட்டு நாய் விரும்பிகள் யாரும் குழம்பி நிக்க வேண்டாம். முடிவில் திருத்தமாகச் சொல்லிவிடுகிறேன்.
இப்படி இன்று -ரெண்டு அல்ல ! Poligar hound களில் பருவெட்டு நாய்கள் வரும் போது எல்லாம் இந்த சாம்பல் நிறமும், அழுக்கு வெள்ளை நிறமும் வருகிறது. அழுக்கு வெள்ளை என்றால் “அப்புளேக்கு”.முன்பு ஒருமுறை சிப்பிபாறை என்றஊருக்கு அருகில் உள்ள நக்குளமுத்தன்பட்டி என்ற ஊருக்கு சென்றுருந்த போது சில பருவெட்டு நாய்களை கண்டிருக்கிறேன். அதே மாதிரியான நாய்களை அதன் சுற்றுவட்டாரங்களான முக்கூட்டு மலை, குகன்பாறை, செவல்பட்டி போன்ற ஊர்களிலும் முன்பு கண்டதுண்டு, .நல்ல உடல் கட்டு பெரிய தலை உடன் வெளிசாம்பல் நிறத்துடனான நாய்கள் அவை.
“இந்தாங்க சிப்பிப்பாற.. அந்த பொடி தல நாய்க எல்லாம் மொச புடிக்கத் தான் ஆவும் அதுக ஜாதி நாய்க..” என அந்த வாட்டர பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். முன்பு சில காலம் அங்கு இருந்தமையால் அவர்களுடன் தொடர்பு உண்டு. இன்றும் கூட நீங்கள் எவறேனும் விசியம் தெரிந்தவர்களை அணுகி கேட்டால் ஒரு நொடி பொழுதில் தெரியவரும் கதை இதுதான். ஆனாலும், அதை மட்டுமே சொல்லி வார்த்தைகளில் ஜல்லி அடிக்க முடியாது அல்லவா ! எனவே தான் எழுதப்பட்ட தரவுகளை வேண்டும் எனத் தேடிக்கொண்டு இருந்தேன். அப்படி தேடிய போதுதான் பிரிட்டிஷ் குறிப்பில் இடம் பெற்ற சாம்பல் நாய்கள் கண்ணில் பட்டது. கூடவே 2 சுவாரசியமான நம்மவர்கள் வரிகளும் கண்ணில் பட்டது
“தென்னிந்திய நாய்களில் நான்கு வகைகள் உண்டென்று ஏற்பட்டது. இவைகளில் சிப்பிப்பாறை என்ற ஜாதி எல்லாவற்றிலும் பெரிதாம். ஒரு வித அழுக்கு வெள்ளையாக இருக்குமாம்” இந்த வரியை வேறு எங்கு இருந்தும் எடுக்கவில்லை போன கட்டுரையில் மா. கிருஷ்ணன் கலைமகள் இதழில் எழுதிய “ உள்ளூர் நாய்கள்” கட்டுரையில் சோணாச்சல செட்டியார் வேறு ஒன்றும் சொன்னார் என்று “க்கு “ வைத்துக்கொண்டு நடந்தேன் அல்லவா? அதைத்தான் இங்கு இழுத்து விட்டு இருக்கிறேன்.
1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி வெளிவந்த “The illustrate weekly of india” என்ற இதழில் நமது நாட்டு நாய்கள் குறித்து கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. அது நமக்கு கிடைக்காத போதிலும் அந்தக் கட்டுரைக்கு வந்த வாசகர் கடிதம் கிடைத்தது. அது கட்டுரை வந்த மறுவாரம் அதே இதழில் வெளியானது. அக்கடிதம் சிப்பிப்பாறை படத்தை பதிவிட்டுச் சொல்வதாவது, “சிப்பிப்பாறை நாய்கள் நல்ல உடல்வாகு கொண்டவை. மடிந்த காதுகளுடன், சாம்பல் நிறத்துடனும் இருக்கும் இவை கோவில்பட்டி தாலுக்காவில் பரவி இருந்தன”. இந்தச் செய்தியை பதிவு செய்தவர் பெயர் “டி. டி. இவான்” இவர் இராஜபாளையத்தை சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல். எனக்கு தெரிந்து பழைய சிப்பிப்பாறை நாய்கள் குறித்து வந்த தெளிவான கடைசி குறிப்பு இதுவே..
முதலில் சிப்பிப்பாறை நாய்கள் என்று அறியபட்டவை இதுவே. காலப்போக்கில் அந்த நாய்கள் அங்கு அரிதாகி போனது, ஆனாலும் பேருக்கு பின்னால் உள்ள பிரபலம் அந்த வட்டாரத்தில் அந்த வட்டாரத்தில் தங்கிப்போனது. பின்பு அதே கரிசல் வட்டாரத்தில் கூர் முக நாய்கள் வெளி வர துவங்கியது. அதப் பெயர் ஒரு பொதுப்பெயர் ஆக உருவெடுத்து கூர் முக நாய்களுக்கு எடுத்தாளப்பட்டது என்பதே நிதர்சனம்.
இப்போது அவை இல்லாமல் அழிந்து போனதா? போக இது எல்லாம் மண்டை நாய் என்றும் மந்தை நாய் என்றும் ஒரு கூட்டம் சொல்லி வருகிறதே அது எப்படி? என்ற கேள்வி எழுவது நியாயம் தான். இந்த மண்டை / மந்தை என்ற பெயர்கள் எல்லாமும் வெறும் 5, 6 ஆண்டுகளுக்கு முன்பு முகநூலில் யாரோ பொழுது போக சொல்லி விளையாட உருவான பெயர்கள் என்பது தெரியவந்தால் பலருக்கு மாரடைப்பே வந்துவிட்டும். ஆனாலும் ராமநாதபுரம் நாய்கள் அதை அந்த பெயர் வரக் காரணம் ஒன்று இருக்க வேண்டும் அல்லவா? கண்டிப்பாக விளங்கம் உண்டு.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக சேர்க்கப்படாத தகவல்கள். சொல்லப் படாத உண்மைகள். இப்போது தானே பேசத் துடங்கி இருக்கிறோம்.. கேள்விகளோடு காத்திருங்கள் விடைகளோடு வரும் அடுத்த பகுதிக்கு..