Thiruvathirai Kali: சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை களி - வீட்டில் செய்வது எப்படி?
2026ம் ஆண்டு மார்கழி திருவாதிரை ஜனவரி 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. திருவாதிரை நாளில் சிவபெருமானுக்கு உகந்த களியை நாம் வீட்டில் செய்து சிவபெருமானுக்கு படைத்து வழிபடலாம்.

இந்து மதத்தில் சிவபெருமான் முழு முதற் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவருக்கென ஒரு மாதத்தில் ஏகப்பட்ட விசேஷ தினங்கள் வரும். குறிப்பாக திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் அவருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாள் மிகவும் விசேஷமானது. இந்நாளில் நாம் விரதம் இருந்து வழிபட்டால் ஏகப்பட்ட விஷயங்கள் நம் வாழ்க்கையில் நடைபெற்று மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பது நம்பிக்கையாகும்.
மார்கழி திருவாதிரை நாளில் தான் சிவபெருமான் ருத்ர தாண்டவமாடினார் என்பது புராண வரலாறாக பார்க்கப்படுகிறது. இந்த ஆருத்ரா தரிசனம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அந்த நாளில் நடராஜப் பெருமானை தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உள்ளது.
திருவாதிரை களி
இத்தகைய விசேஷம் வாய்ந்த திருவாதிரை நாளில் உளுந்து மாவினால் செய்யப்பட்ட களி சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பின் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்தகைய களியை நாம் வீட்டில் செய்து சிவபெருமானுக்கு படைத்து வழிபடலாம். 2026ம் ஆண்டு மார்கழி திருவாதிரை ஜனவரி 3ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் களி எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
திருவாதிரை களி செய்ய நமக்கு பச்சரிசி 1 கப், தேங்காய் (துருவியது) - கால் கப், முந்திரி, கருப்பு திராட்சை ஆகியவை தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வெல்லம் 200 கிராமும், நெய் கால் கப்பும், கடைசியில் தூவ தேவையான அளவு ஏலக்காய் பொடியும் எடுத்துக் கொள்ளுங்கள்
செய்வது எளிமை
கடாய் அல்லது ஏதேனும் உங்களுக்கு தகுந்த பாத்திரத்தை எடுத்து அதில் பச்சரிசியைப் போட்டு 10 நிமிடம் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அதனை ஆற வைத்து மிக்ஸியின் நன்றாக ரவை பதார்தத்திற்கு திரிக்க வேண்டும். இந்த அரிசியை ஒரு சல்லடையில் போட்டு நன்றாக சலிக்க வேண்டும்.
இப்போது நீங்கள் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின் அதிலிருந்து ஒரு கப் தண்ணீரை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கொதித்த 3 கப் நீரில் அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி பிடிக்காமல் நன்கு கிளற வேண்டும். அடுப்பை மிதமான சூட்டில் வைப்பது மிக மிக அவசியமாகும். அவ்வாறு நீங்கள் கிண்டும்போது களி கெட்டியாக மாறினால் தனியாக எடுத்து வைத்த ஒரு கப் தண்ணீரை பயன்படுத்தலாம்.
அதேசமயம் இன்னொரு பாத்திரத்தில் தண்ணீரை சூடுபத்தில் அதில் வெல்லத்தைப் போட்டு பாகு வரும் வரை கிண்ட வேண்டும். இந்த வெல்ல பாகுவை அரிசி மாவுடன் ஊற்றி கிளற வேண்டும். இரண்டையும் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இதில் தேவைப்படும் பட்சத்தில் ஏலக்காய் பொடி சேர்க்கலாம்.
பின் வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி முந்திரி, கருப்பு திராட்சை, தேங்காய் துருவல் ஆகிய கலவையை 3 நிமிடம் வதக்கி களியுடன் சேர்த்து கிளற வேண்டும். இப்போது உங்கள் முன் சுவையான திருவாதிரை களி தயாராக இருக்கும். அதனை சாமிக்கு படைத்து விட்டு உண்ணலாம்.





















