Menstruation Napkins | பீரியட்ஸ் இருந்தால், எத்தனை முறை நாப்கின் மாற்றவேண்டும்? எந்த நாப்கின் நல்லது?
மாதவிடாய் பற்றி அடிப்படை சந்தேகங்களுக்கு இதோ சில முக்கியமான டிப்ஸ்.
பெண்கள் பூப்பெய்திய நாள்தொட்டு மெனோபாஸ் நிலையை எய்தும் வரையில் மாதவிடாய் நாட்களைக் கடந்த வந்தே தீரவேண்டும். அவரவர் உடல் தன்மையைப் பொறுத்து மாதந்தோறும் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரையிலும் மாதவிடாய் இருக்கும். சிலருக்கு வருவதும் தெரியாது நிற்பதும் தெரியாது என்பதுபோல் மாதவிடாய் நாட்கள் எளிதாகக் கடக்கும். வேறு சிலருக்கோ வாட்டி வதைக்கும் வயிற்று வலி, உதிரப்போக்கு எனப் பாடாய்ப்படுத்தும்.
மாதவிடாய் நாட்கள் எப்படி இருந்தாலும் அந்த நாட்களிலான சுகாதாரப் பேணுதல் குறித்த டிப்ஸ் எல்லாப் பெண்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியானதுதான். அப்படிப்பட்ட பீரியட்ஸ் டிப்ஸ் தான் நீங்கள் இப்போது தெரிந்து கொள்ளப்போகிறீர்கள். முன்பெல்லாம் பீரியட்ஸ் பற்றிப்பேசுவதும் எழுதுவதுமே வேண்டாததாகப் பார்க்கப்பட்டது. அந்த நிலை தற்போது வெகுவாக மாறியிருக்கிறது. பூப்பெய்தும் சிறுமிகளுக்கு இப்போதெல்லாம் நிறைய சரியான தகவல்கள் சென்று சேர்கிறது.
முன்பெல்லாம் தங்கள் சம வயது கொண்ட தோழிகளிடம் அரைகுறை அறிவுரையைப் பெறுவார்கள். இப்போதெல்லாம் அப்படியில்லை. சிறுமிகளுக்கு பீரியட்ஸ் பற்றி சொல்லித்தரவே மென்ஸ்ட்ருபீடியா என்றொரு இணையதளமே உருவாக்கப்பட்டுள்ளது. மாதவிடாய் குறித்த விளக்கங்கள், கேள்வி பதில்கள், பாடல்கள் என இதில் பதிவேற்றப்படுகிறது. இப்படியான முன்னெடுப்புகளுக்கு எப்போதும் வரவேற்பு நல்கவேண்டும். ஆனால், மாதவிடாய் பற்றி நிறைய பேச ஆரம்பித்த பின்னரும் கூட சிலருக்கு அடிப்படைத் தகவல்கள் பற்றிய சந்தேக தேடல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அப்படியான அடிப்படை சந்தேகங்களுக்கு இதோ சில டிப்ஸ்..
* முதலில் மாதவிடாய் காலத்தில் நல்ல தரமான சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்த வேண்டும். நாப்கினை அதிகம் நேரம் பயன்படுத்தாமல் தேவைக்கேற்ப மாற்றிவிட வேண்டும்.
* மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கு, விரைவில் உடலுக்குக் கேடு உண்டாக்கும் தன்மையைப் பெற்றுவிடும். அதனாலேயே அடிக்கடி நாப்கின் மாற்ற அறிவுறுத்தப்படுகிறது. பூஞ்சைத்தொற்றையும் இது தடுக்கும்
* உதிரப்போக்கு அதிகமாக இல்லாவிட்டாலும் கூட அடிக்கடி பேட் மாற்றவேண்டியது அவசியமானது.
* உங்களின் நாப்கின் ஈரமாக இருந்தால் அதுவே உடலுக்குப் பல தீங்கை விளைவிக்கும். சிறுநீர்ப்பாதை தொற்று, சரும வியாதிகள், பிறப்புறப்புத் தொற்று ஆகியனவற்றை ஏற்படுத்தும்.
* ஒவ்வொரு 4 மணிநேரத்திற்கு ஒருமுறை நாப்கின் மாற்றப்பட வேண்டும் என்பதே மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது. சந்தையில் இப்போது சானிட்டரி நாப்கின்கள், டேம்பூன்ஸ் எனப் பலவகை நாப்கின் ரகங்கள் உள்ளன. அதேபோல் ஸ்மால், லார்ஜ், எக்ஸெல் என்று ரகரகமாக உதிரப்போக்குக்கு ஏற்ப நாப்கின்கள் விற்கப்படுகின்றன. இதில் பெரும்பாலும் ப்ளீச் செய்யப்படாத நாப்கின்களாக பார்த்து வாங்கவேண்டும்
* நீங்கள் எந்த வகை நாப்கின்களைப் பயன்படுத்தினாலும் சரி, பயன்படுத்திய பேட்களை காகிதங்களில் சுற்றி அப்புறப்படுத்துங்கள். நாப்கின்களை மாற்றிய பின்னர் கைகளை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும். ஏதேனும் சரும பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.