’கூர்முக வேட்டை நாய்கள்’ தமிழ்நாட்டிற்கு வந்தது எப்படி..?
துர்கிய, ஆப்கானிய படை எடுப்புகளில் வந்தது அவர்கள் மட்டுமே அல்ல, அவர்களில் கலாச்சாரம், உணவு, விலங்குகள் என்று அத்தனையும்தான் !
வேட்டைத்துணைவன் – 11
கன்னி / சிப்பிப்பாறை நாய்கள் – பகுதி 3
கடந்த ரெண்டு தொடர்களையும் வாசித்துவிட்டு ஒரு வழியாக இந்தக் கன்னி நாய் வகையறாக்கள் எல்லாம் ஏதோ ஒரு தூர தேசத்தில் இருந்து பிரித்தானியர்கள் மூலம் கப்பலில் கொண்டு வரப்பட்டு இந்த மண்ணில் பரப்பப்பட்டவை என்ற முடிவுக்கு நீங்கள் வந்திருந்தீர்களானால் அதை இத்தோடு அழித்துவிட்டு மேற்கொண்டு வாசிக்கத் துவங்குங்கள்.
முதல் கட்டமாக கடல் தாண்டி வந்திறங்கிய நாய்கள் நம் மண்ணில் பிழைத்துக் கிடப்பதே பெரும்பாடான கதையை நாம் அறிந்தோம் ! சரி நாடே -காடே என்றலைந்து பாலைவனத்தின் இன்டு இடுக்கு சுத்தி வெள்ளைக்காரர்கள் இரண்டாவதாக கொண்டு வந்து சேர்த்த நாயினமாவது பெயர் சொல்லக் களமாடியதா? என்றால் அதுவும் கிடையாது என்றே நடந்தவை சொல்கிறது. ஆக, நாலு நாடு சுத்தி இப்போது hunt clubs க்கு வந்து சேர்ந்த இரண்டாவது சிக்கலைத் தீர்க்க வேண்டிய இடத்தில் பிரித்தானியர்கள் நின்ற போதுதான், நம்முடைய poligar hound களின் நியாபகம் அவர்களுக்கு வந்தது. ஆம் கூர்முக அமைப்பு உடைய poligar hound களேதான்.
“எங்களிடம் persian greyhound கள் இருந்தன, ஆனால் அவைகளால் இந்த சீதோசனத்தை தாக்குப் பிடிக்க இயலாமல் காயப்பட்டன அல்லது இறந்து போயின. அதே வேலை poligar hound கள் மிகச் சிறப்பாக செயல்பட்டது” என்ற செய்தியை w. Gordon cumming எழுதிய “wild man and wild beast” புத்தகத்தில் காண முடிகிறது.. இப்போது இந்தச் சிறந்த வேட்டை நாய்களையும் பயன்படுத்த வேண்டும் அதே வேளையில் கடல் தாண்டி வந்த நாய்களை பாதிக்குப் பாத்தி என்ற அளவிலாவது பயன்படுத்த வேண்டும் என்றபோது தான். அந்த அரபு / பெர்சிய / இங்கிலிஷ் greyhound வகை நாய்களையும் நமது கூர் முக அமைப்பு கொண்ட poligar hound களையும் மிகப்பெரிய அளவில் கலப்பு செய்யத் தொடங்கினர்.
1829 ஆம் ஆண்டுவெளியான “Twelve year’s military adventure in three quarters of the globe” புத்தகத்தில் இங்கிலிஷ் greyhound நாய்களும் poligar hound களும் ஒரே இனம் ஆனால் அவற்றின் கலப்பில் வரும் நாய்களோ அதீத பலமும், ஆக்ரோஷமும் உடையவை” எனக் குறிப்பிடுகிறது . உண்மையில் இங்கு நடந்தது இங்கிலிஷ் grey hound என்று சொல்லப்படும் பண்டைய எகிப் வேட்டை நாய்களுக்கும் – poligar hound என்று சொல்லப்படும் அரேபிய / பெர்சிய நாய்களுக்கும் இடையே நடந்த கலப்புகள் தான். மேலும் இவற்றுடன் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விசியம் என்னவென்றால் தோற்ற அடிப்படையில் இவைகள் ரெண்டும் ஒன்றே என்ற எண்ணமும் பிரித்தானியர்கள் சிலரிடம் இருந்து என்பதைத்தான்.
இப்போது நமக்கு வெள்ளைக்காரன் தேடிப்பிடித்து கொண்டு வந்த நாய்களின் தோற்றத்தை ஒத்த கூர்முக வேட்டை நாய்கள் நம்மிடத்தில் எப்படி ஏற்கனவே இருந்தது என்ற கேள்வி எழுகிறது அல்லவா? பதில் வேண்டும் என்றால், ஆம் இங்கு இருந்தது என்று ஒரு வரியில் முடிக்கலாம். எப்படி என்றால் கொஞ்சம் விளக்க வேண்டியது வரும். வெள்ளையர்களுக்கு அரபு / பெர்சிய வேட்டை நாய்கள் அறிமுகமாவதற்கு முன்னரே இங்கு அவை நன்கு அறிமுகமாகி இருந்தது என்பதுதான் உண்மை. இந்த இடத்தில் bombay civil service அதிகாரியான sir Charles warre malet 1790 களின் வாக்கில் தொகுத்த படங்களை நினைவில் கொள்ள வேண்டும். அதில் குறிப்பிட வேண்டிய விசியம், மராத்தியை சேர்ந்த ஓவியர் கங்காராம் ஓவியமும் அதில் அடக்கம் என்பதுதான். அதை இங்கு சொல்லக் காரணம் உண்டு, அந்த ஓவியத்தில் ரெண்டு நாய்கள் படமும் இடம் பெற்று இருந்தது ஒன்று ரோமம் உள்ள சாலுக்கி வகை, ரெண்டாவது ரோமம் இல்லாத கருப்பு – வெள்ளை நிறமுடைய வேட்டை நாய். ஏகதேசம் நமது வட்டச் செம்மறை வழி நாய்களில் வரும் கருமறை போன்ற தோற்றம் ( என்னது செம்மறை – கருமறை என்று குழம்ப வேண்டாம் அது ஒரு நிறக் குறி பின்பு அதையும் பார்ப்போம் ) இந்த ரெண்டு படங்களுமே ஓவியர் கங்காராமால் 1770 களில் வரையப்பட்டவை. ஆம் hunt club க்கு, விக்டோரியா மஹாசாசனத்துக்கு முந்தியதுதான்.
வட இந்தியாவில் நடந்த இஸ்லாமிய அரசுகளின் வருகையே இந்த வகையான நாய்களின் வரவுக்கு வித்தாக அமைந்தது. துர்கிய, ஆப்கானிய படை எடுப்புகளில் வந்தது அவர்கள் மட்டுமே அல்ல, அவர்களில் கலாச்சாரம், உணவு, விலங்குகள் என்று அத்தனையும்தான். நீங்கள் முகலாய மன்னர்களின் ஓவியத்தில் நிறையவே இந்த கூர்முக அமைப்பு உடைய நாய்களைப் பார்க்கலாம். அதுவும் மேலே குறிப்பட்ட கங்காராமின் ஓவியத்தில் இடம் பெற்ற நாய்களும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இங்கு வந்து இந்த சீதோசனத்துக்கு பழகி, இங்கே உற்பத்தியாகி மேலும் இங்கு உள்ள பிற நாய்களுடன் கலந்து உருவானவை தான் வட இந்திய hound இனமான கேரவன் hound. தொடர்ந்து அதனோடு grey hound கள் கலந்து உருவானவைதான் ராம்பூர் hound. Maratta hound உட்பட மராத்தியர்கள் பயன்படுத்திய நாய்களின் முன்னோர்கள் எல்லாமும் அவைதான்.
இஸ்லாமிய மன்னர்களின் வருகையின் பின்னர் வட இந்தியா வந்த நாய்கள் எல்லாமே ஒரே அச்சு வார்ப்பு அல்ல ( முத்திய கட்டுரையில் பிரித்தானியர்கள் அரபு தேசம் சுத்தி சிற்சில வேறுபாடுகளுடன் கூர்முக வேட்டை நாய்களைக் கொண்டு வந்த்ததை நினைவில் கொள்க )அவற்றுக்குள்ளும் மாறுபாடுகள் உண்டு. குறிப்பாக ரோமாக்கட்டில் ஆம், ரோமம் உள்ள சாலுக்கியும், இல்லாத sloughi நாய்களும் வந்திருக்கும் அல்லவா! ரோமம் இல்லதைவையே அதிகம் என்பதை நடப்பு நாய்களை வைத்து அறிய முடிகிறது.காரணம் கால் பாதத்தில் அதிக ரோமங்கள் உள்ள சாலுக்கி நாய்கள் பாலைவனப் பகுதியில் கால் புதையமல் ஓடத்தான். நமது இந்திய மண்ணுக்கு அல்ல. ஆனாலும் சில வித்துக்கள் வருவதுண்டு உண்டு ( உதாரணம் இன்று கேரவன் ஹவுண்ட் நாய்களுடன் காணப்படும் pashmi hound கள் / தன் பண்பு மாறாது இருக்கும் afghan hound கள்..)
இவ்வாறான நாய்கள் இஸ்லாமிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் எல்லாம் நிறைந்து போலவே தக்கணத்திலும் பரவியது. சரி அப்படியானால் தமிழகத்துக்கு எப்படி வந்தது? இங்கு குறுகிய காலமே தாக்குப் பிடித்த மதுரை சுல்தான்கள் காலத்திலா? அப்படியானால் இவை மதுரையில் அல்லவா பெருகி இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லையே ! இவை அதற்கும் தெற்கில் அல்லவா சுருங்கி இருந்தது! சுத்தி சுத்தி இப்போது poligar hound கள் பற்றிய ஆரம்பக் கட்டுரைக்கு வந்து விட்டோம். ஒரு முறை அங்கே கூட சென்று வாருங்கள் தவறில்லை! விரிவாகப் பார்க்க விருக்கிறோம் என்று விட்ட இடம் எல்லாம் இனிதான் விரியப் போகிறது. பார்க்கலாம் அடுத்து அடுத்த தொடர்களில்.