Health: ஜிம்முக்கு போறீங்களா..? அப்போ இதெல்லாம் கவனத்தில் வைச்சுக்கோங்க!
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அளவுக்கு மீறிய உடற்பயிற்சியும் உடலுக்கு ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்றைய காலத்தில் உடற்பயிற்சி செய்து எடை குறைக்க வேண்டும் என்ற பெரும்பாலானோரின் எண்ணமாக இருக்கும். ஆனால், நவீன காலத்தில் மாறி வரும் வாழ்வியல் முறைகளால் உடல் பருமன் பிரச்சனை அதிகமாகி வருகிறது. எடை குறைப்பிற்கு மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் சில சமயங்களில் ஆபத்தாக முடிந்துவிடுகிறது.
சீரான உடற்பயிற்சி மூலம் மட்டுமே உடல் எடையை குறைக்க வேண்டும் என்றும் குறைந்த காலத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
ஜிம் செல்வது என்று திட்டம் இருக்கிறதா? இதை கொஞ்சம் கவனிங்க..
நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:
உடற்பயிற்சிக்காக ஜிம் செல்கிறீர்கள் என்றால் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீர்ச்சத்து இருந்தால் தான் உடல் எடை சீராக இருக்கும். அன்றாடம் 8 முதல் 10 க்ளாஸ் தண்ணீர் அருந்துங்கள்.
புரதச்சத்து அவசியம்:
உணவில் புரத சத்து நிறைந்திருப்பது முக்கியமான ஒன்றாகும். நம் உடலில் ஒவ்வொரு செல்லும், திசுக்களும், சதையும், ரத்தமும் புரதத்தினால் ஆனது. உங்கள் ஹார்மோன், என்சைம், நோய் எதிர்ப்பு செல்களும் உருவாக அடிப்படை தேவை புரதமே. புரத சத்து சரியான அளவு இருந்தால் மட்டுமே நம்மால் இயங்க முடியும்.
ஆனால் சமீப காலமாக ஜிம், ஒர்க் அவுட், ப்ரோட்டீன் ட்ரிங் என்பதெல்லாம் ரொம்பவே பிரபலமாகிவிட்டது. அதிகமான அளவில் புரதத்தை உட்கொண்டால் அது பல்வேறு உபாதைகளுக்கும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே உணவிலேயே புரதச் சத்தைப் பெற முற்படுங்கள். அதுவும் அளவு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கார்போஹைட்ரேட் உணவை முற்றிலுமாக தவிர்க்க கூடாது
அதிகாரப்பூர்வ ஆராய்ச்சிகளின்படி, கார்போஹைட்ரேட் குறைவான உணவுமுறை என்பது, தினசரி அளவில் 130 கிராமுக்கும் குறைவான அளவில் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்வதாகும். ஆனால் பலரும் ஜிம் செல்ல ஆரம்பித்தால் கார்போஹைட்ரேட் உணவை முற்றிலுமாக தவிர்த்து விடுகின்றனர்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்:
பதப்படுத்திய உணவுகள் என்பவை அதிக காலம் கெடாமல் இருக்க அல்லது அதிக சுவை தருவதற்காக மாற்றம் செய்யப்பட்டவை. பொதுவாக உப்பு, எண்ணெய், சர்க்கரை அல்லது நொதித்தல் முறையை பயன்படுத்தியிருப்பார்கள்.
``அல்ட்ரா பதப்படுத்திய உணவுகள்'' தொழிற்சாலைகளில் அதிக பதப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவை. இவற்றில் அடங்கியுள்ள பொருட்கள் என அவற்றின் பாக்கெட் மீது பெரிய பட்டியல் இருக்கும். கூடுதலாக சேர்க்கப்பட்ட பதப்படுத்தல் பொருட்கள், இனிப்பூட்டிகள் அல்லது நிறமேற்றிகள் என அதில் இருக்கும். இவற்றை அதிகமாக உட்கொண்டால் உடலுக்கு பல்வேறு உபாதைகள் வரும்.