Wheat Appam: கலோரி கம்மியா டிஃபன் செய்யணுமா? பொசு பொசுன்னு கோதுமை அப்பம்.. இதை ட்ரை பண்ணுங்க..
சுவையான கோதுமை அப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, உப்பு – ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் – கால் கப், பழுத்த வாழைப்பழம் – ஒன்று, பொடித்த வெல்லம் – ஒரு கப், தண்ணீர் – ஒன்னே கால் கப்.
செய்முறை
கோதுமை அப்பம் செய்வதற்கு ஒரு கப் கோதுமை மாவை எடுத்துக் கொண்டு, அதனுடன் கால் கப் அளவிற்கு அரிசி மாவு சேர்க்க வேண்டும். பின்னர் வாசனைக்கு அரை ஸ்பூன் அளவிற்கு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் ஒரு சிட்டிகை அளவு சமையல் சோடா சேர்க்க வேண்டும். அப்போதுதான் அப்பம் நன்றாக உப்பி வரும். மேலும் இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
துருவிய தேங்காய் அரை கப் அளவிற்கு இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு பிசைந்து கூழாக்கிய வாழைப்பழத்தை இதனுடன் சேர்க்க வேண்டும்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் வெல்லம் சேர்க்க வேண்டும். வெல்லம் உருகியதும் அடுப்பை அணைத்து விட்டு அதை சிறிது நேரம் ஆற விட வேண்டும்.
ஐந்து நிமிடத்திற்கு பின்னர் இந்த வெல்ல கரைசலை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள மாவுடன் வடிகட்டி சேர்க்க வேண்டும்.
கால் கப் அளவிற்கு தண்ணீரை சிறிது, சிறிதாக மாவில் சேர்த்து கலந்து விட வேண்டும். அப்பம் சுடுவதற்கான பதத்தில் இந்த மாவு இருக்க வேண்டியது அவசியம்.
மாவில் தண்ணீர் அதிகமாகவோ குறைவாகவோ இருக்க கூடாது. அப்படி இருந்தால் அதிக எண்ணெய் குடிக்க அல்லது வேகும் போதே உடைந்து விட வாய்ப்புள்ளது.
அடுப்பில் கடாய் வைத்து அதில் அப்பத்தை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்
எண்ணெய் சூடானதும் தீயை மிதமாக வைத்து ஒவ்வொரு குழி கரண்டி மாவை எடுத்து எண்ணெயில் ஊற்ற வேண்டும். அப்பம் ஒருபுறம் வெந்து மேலே எழும்பும் போது, மறுபுறம் திருப்பி விட்டு வேக விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கோதுமை அப்பம் தயார்.