(Source: ECI/ABP News/ABP Majha)
Vada Gravy: சாதத்துக்கு பக்கா காம்பினேஷன்! வடை குழம்பு இப்படி செய்து அசத்துங்க - சீக்கிரம் காலியாகிடும்
சுவையான வடை குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
முதலில் 100 கிராம் கடலைப் பருப்பை தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும். இதை அரை மணி நேரம் ஊற விடவும்.
இப்போது ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்னெய் சேர்த்து, அரை டீஸ்பூன் சோம்பு, அரை டீஸ்பூன் சீரகம், ஏலக்காய் 2, கிராம்பு 1, அன்னாசி பூ 1, சின்ன துண்டு பட்டை, கொஞ்சம் கல்பாசி சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் பொரிந்ததும் 5 பூண்டு பற்களை பொடியாக நறுக்கி சேர்க்கவும். ஒரு பச்சை மிளகாயை கீறி சேர்த்துக் கொள்ளவும்.
சிறிது கறிவேப்பிலை, இரண்டு நறுக்கிய வெங்காயம், 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடிப்பதம் வரும் வரை வதக்க வேண்டும். மூன்று நறுக்கிய தக்காளிகளை இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் தக்காளி சீக்கிரம் வதங்கி வரும்.
தக்காளி மசிந்ததும், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலா பொடி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். இப்போது இதனுடன் ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு உப்பு பதத்தை சரி பார்த்து தீயை மிதமாக வைத்து 5 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
இப்போது ஊற வைத்த கடலைப் பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் இரண்டு பூண்டு பல், இரண்டு வர மிளகாய், அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இப்போது இந்த மிக்ஸி ஜாரில் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து அலசி இந்த தண்ணீரை கிரேவியில் சேர்த்து கலந்து விட்டு மீண்டும் இதை மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
நாம் அரைத்து எடுத்த கடலைப்பருப்பு விழுதுடன் ஒரு வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். அரை ஸ்பூன் கரம் மசாலா, அரை ஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட்டு வைத்துக் கொள்ளவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து அதில் 50 கிராம் அளவு எண்ணெய் சேர்த்து நாம் தயார் செய்து வைத்துள்ள மாவை சிறு சிறு வடைகளாக தட்டிப் போட்டு அல்லது சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.
இப்போது பொரித்தெடுத்த இந்த வடையை கிரேவியில் கலந்து விட்டு நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி கொள்ள வேண்டும். இதை ஒரு 5 நிமிடம் மூடிப்போட்டு வைத்து பின் பரிமாறலாம்.