Egg Curry: அசத்தல் சுவையில் முட்டை கிரேவி; எளிதாக செய்யலாம் - இதோ ரெசிபி!
Egg Curry: சுவையான முட்டை கிரேவி செய்வது எப்படி என்று காணலாம்.
எளிதாக காலை உணவில் சேர்க்கக்கூடிய ஒன்று முட்டை. வேக வைத்தோ அல்லது ஆம்லெட் செய்தோ சாப்பிடலாம். நமக்கு கிடைக்கும் சத்தான உணவுகளில் முட்டையும் ஒன்று. அவை புரதம் நிறைந்தவை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள், கலோரிகள் குறைவாக உள்ளன. ஒரு வார முட்டை உணவுத் திட்டமானது, தண்ணீர், சர்க்கரை அல்லாத திரவங்கள் மற்றும் பிற கார்போஹைட்ரேட் உணவுகளுடன் முட்டை உணவை உள்ளடக்கியது. காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு முட்டைகளை சாப்பிடுவது உடல் எடையை குறைப்பதோடு, உடலுக்கு சரியான அளவு புரதத்தையும் வழங்குவதாக பல்வேறு வடிவங்களில் கூறப்படுகிறது.
காலை உணவாக முட்டைகளை சாப்பிடுவது உங்கள் அன்றைய நாளை தொடங்குவதற்கான சரியான வழியாக இருக்கலாம். ஆம்லெட், போச்டு எக், பொரியல் முட்டை என பல வகையாக முட்டைகளை உணவில் சேர்த்து கொள்ளலாம். தேங்காய் எண்ணெய்யில் உள்ள கொழுப்பு உடலுக்கு நல்லது. அதற்காக அதிகமான அளவு எடுத்துகொள்ள வேண்டும் என்றில்லை. இனி ஒவ்வொரு முறையும் முட்டை சமைத்தால் அதைத் தேங்காய் எண்ணெய் ஊற்றி சமைத்துப் பாருங்கள். சுவையும், மனமும், பலனும் கூடுதலாக இருக்கும். தேங்காய் எண்ணெயும் அளவோடு சாப்பிடுவது உடலுக்கும் நல்லது
என்னென்ன தேவை?
முட்டை - 6
வெங்காயம் - 4
தக்காளி -3
தேங்காய் துருவல் - ஒரு கப்
முந்திரி - 20
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீ ஸ்பூன்
மல்லி தூள் - ஒரு டீ ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
தயிர் - ஒரு கப்
உப்பு - சிறிதளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
முதலில், முந்திரியை தண்ணீரில் ஊற வைக்கவும். முட்டைகளை நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். முட்டை தோல் உரித்து தனியாக ஒரு பாத்திரத்தில் உப்பு, மிளகாய் தூள்,மஞ்சள் தூள், சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்றாக கலக்கி 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
இந்த கிரேவிற்கு தேவையான தேங்காய் அரைத்து வைக்கலாம். ஊற வைத்த முந்திரி, துருவிய ஒரு கப் தேங்காயை நன்றாக அரைத்து தனியே வைக்கவும். இப்போது, மிளகாய் பொடி தூவி கலந்து வைத்துள்ள முட்டைகளை கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி எடுத்து வைக்கவும்.
இன்னொரு கடாயில், தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். தக்காளி சிறிதளவு வதங்கியதும் அதில், மஞ்சள், மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக வதக்க வேண்டும்.
இப்போது வெங்காயம் நன்றாக வதங்கியதும், ஒரு கப் தயிர் சேர்த்து, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கலக்கவும். இப்போது அரை கப் தண்ணீர் சேர்த்து, வறுத்த முட்டைகளை இதோடு சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால் முட்டை கிரேவி தயார்.