GM Diet | ஒரே வாரத்தில் 3 முதல் 5 கிலோ எடைக் குறைக்கும் GM டயட்.. ப்ளஸ், மைனஸ் என்ன?
அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஜி.எம் டயட் மூலம் ஒரே வாரத்திற்குள் சுமார் 6.5 கிலோ எடையைக் குறைக்க முடியும். இதனைப் பின்பற்றுவதற்கு முன், சில தகவல்களைத் தந்துள்ளோம்.
உணவு டெலிவரி நிறுவனங்களின் வருகைக்குப் பிறகும், பல்வேறு வகைகளிலான ரெஸ்டாரண்ட்கள் ஆங்காங்கே புதிது புதிதாக முளைத்த பிறகும், ஆரோக்கியமான உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் பின்பற்றுவது சற்றே கடினமான ஒன்றாக மாறியுள்ளது. எனினும், தற்போதைய தலைமுறையினர் தாம் உண்ணும் உணவு குறித்து அதிகமாக கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். வெவ்வேறு டயட் திட்டங்கள் நமக்கு இணையத்தில் கொட்டிக் கிடைத்தாலும், ஜி.எம் டயட் மற்ற டயட்களை விட விரைவாக உடல் எடையைக் குறைக்கப் பயன்படுகிறது.
கடந்த 1985ஆம் ஆண்டு, அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தால் தமது பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த டயட் மூலம் ஒரே வாரத்திற்குள் சுமார் 6.5 கிலோ எடையைக் குறைக்க முடியும். இந்த டயட்டைப் பின்பற்றுவதற்கு முன், அதுகுறித்த சில தகவல்களைத் திரட்டி, இங்கே தந்துள்ளோம்.
1. இது உடலின் நச்சுத் தன்மையை நீக்குகிறது
நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளின் மீது இந்த டயட் கவனம் செலுத்துகிறது. எனவே இது உடலை நீரேற்றி வைப்பதோடு, அதிகமாக இருக்கும் கொழுப்பை நீக்கி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை வெளியேற்றுகிறது.
2. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது
இந்த டயட்டைக் கடைபிடிக்கும் போது நாம் உண்ணும் உணவுகள் நார்ச்சத்து அதிகம் கொண்டவையாக இருப்பதால், இவை நம் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியிருப்பதாக மாற்றுகிறது. இதனால் உடலில் உணவு செரிமானமும் மேம்படுத்தப்படுகிறது.
3. இது நடத்தைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது
ஜி.எம் டயட் பெரும்பாலும் குறைந்த கலோரியிலான உணவுகளையே ஊக்குவிப்பதால் இதனால் பல்வேறு பக்க விளைவுகள் நம் நடத்தையில் ஏற்படலாம். தலைசுற்றல், உடல் சோர்வு, பலமின்மை முதலானவையே இந்தப் பக்க விளைவுகள்.
4. பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
ஜி.எம் டயட் என்பது சர்க்கரை, பதப்படுத்தும் உணவு வகைகள் ஆகியவற்றைத் தவிர்க்கும் மிக எளிய உணவு முறை ஆகும். எனவே இதில் அடைக்கப்பட்ட உணவு வகைகளோ, அதிக காலம் பதப்படுத்தப்பட்ட உணவுகளோ அறவே உண்ணாமல் தவிர்க்கப்பட வேண்டும்.
5. உடல் எடை குறைவது தற்காலிகமானது.
இந்த ஜி.எம் டயட் என்பது குறிப்பானதும், மிகக் குறைந்த காலம் மட்டுமே பின்பற்றக்கூடியது ஆகும். எனவே இந்த டயட்டைக் கைவிட்டால் மிக விரைவில் நீங்கள் இழந்த அதே எடையை மீண்டும் பெற வாய்ப்புகள் அதிகம்.
6. இது ஆபத்தாகவும் இருக்கலாம்.
ஒவ்வொரு வாரமும் அரை முதல் 1 கிலோ வரையிலான எடை குறைப்பு என்பது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஜி.எம் டயட்டில் சுமார் 5 முதல் 7 கிலோ வரையிலான எடை ஒரே வாரத்தில் குறைவதால் இது உடல் நலத்திற்கு ஆபத்து விளைவிப்பதாகவும் இருக்கலாம்.
ஒரே வாரத்தில் சுமார் 7 கிலோ குறைவதை ஜி.எம் டயட் உங்களுக்கு அளிக்கலாம். எனினும், தற்காலிகமானது, உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதுமான இந்த டயட்டை விட்டு, ஆரோக்கியமான ஊட்டச்சத்துகளுடன் உடல் எடைக் குறைப்பையும் அளிக்கும் பிற டயட்களைப் பின்பற்றலாம்.