Milk products and Acne : பால், பால் சார்ந்த பொருட்களால் முகத்தில் பருக்கள் ஏற்படுமா?
பால், பால் சார்ந்த பொருட்களால் முகத்தில் பருக்கள் ஏற்படுமா என்ற சந்தேகம் எழுவது இயல்பு தான். பால் காரணமாக சருமத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்வோம்.
பால், பால் சார்ந்த பொருட்களால் முகத்தில் பருக்கள் ஏற்படுமா என்ற சந்தேகம் எழுவது இயல்பு தான். பால் காரணமாக சருமத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்வோம். பொதுவாக பருக்கள் பெண் பிள்ளைகள் பூப்பெய்தும் போது வரும். இதற்குக் காரணம் சருமத்தில் உள்ள துளைகளில் அடைப்பு ஏற்படுவது. சருமத்தில் உள்ள எண்ணெய், சீபம் ஆகியன இறந்த செல்களுடன் சேர்ந்து சருமத்தில் அடைப்பை ஏற்படுத்தும் அந்த இடத்தில் பருக்கள் உருவாகும். இவ்வாறாக பருக்கள் உருவாகும்போது அதில் பாக்டீரியாக்கள் தோன்றும். அதனால் வலி ஏற்படும்.
க்யூட்டிபேக்டீரியம் ஆக்னே அல்லது சி ஆக்னே என்பது சிவந்து வலியை உண்டாக்கும். நாம் என்ன உண்கிறோமோ அது சருமத்தில் பிரதிபலிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பால் அருந்துபவர்களுக்கு பருக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.
2019ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பால் அருந்துவது என்பது பருக்கள் ஏற்படக் காரணமாக இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் தயிர், சீஸ் ஆகியன பருக்களை ஏற்படுத்துவதில்லை என்று ஆராய்ச்சிகள் கூறின. ஆனால் ஓராண்டுக்கு முந்தைய ஆய்வுகளில் பால் போல் பால் சார்ந்த பிற பொருட்களினாலும் பருக்கள் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹார்மோன்கள் காரணம்:
பாலில் உள்ள ஆண்ட்ரோஜென் ஹார்மோன் பருக்கள் ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பதாக அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன் பருக்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. டெஸ்டோஸ்டீரான் டிஎச்டி எனப்படும் டைஹைட்ரோடெஸ்டோஸ்டீரான் என்பதை சுரக்கிறது. இது செபேஸியஸ் சுரப்பிக்களை தூண்டுகிறது. இதனால் சருமம் எண்ணெய் பிசுக்கு மிக்கதாகிறது. இதன் தொடர்ச்சியாக பருக்கள் ஏற்படுகிறது.
IGF-1 ஹார்மோன்
IGF-1 ஹார்மோன் என்ற வளர்ச்சி ஹார்மோன் பதின்ம வயதில் அதிகரிக்கிறது. அதிகமாக பால் உட்கொள்ளும்போது IGF-1 ஹார்மோன் அதிகமாகும் இதனால் பருக்களும் அதிகமாகும்.
பால் புரதங்கள்
பாலில் உள்ள புரதங்களாலும் பருக்கள் ஏற்படும் என்று அறியப்பட்டுள்ளது. வே, கேஸைன் என்பன தான் பாலில் உள்ள முக்கிய புரதங்கள். வே ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. கேஸைன் IGF-1 ஹார்மோன் சுரப்பதை அதிகரிக்கிறது. இவை இரண்டுமே பருக்களை உருவாக்கக் கூடும்.
எனவே நம் உணவிற்கும் சரும ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பது இதன் மூலம் உறுதியாகிறது.
பருக்களை போக்க வீட்டிலேயே க்ரீம் செய்யலாம்:
வீட்டிலேயே செய்யக்கூடிய பியூட்டி டிப்ஸ் நிறைய உள்ளன. நேரம் இருந்தால் இது போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு தேவைக்கேற்ப அவ்வப்போது மசாஜ் க்ரீம்களை செய்யலாம். இதுவும் அப்படி ஒரு க்ரீம் தான். இரண்டரை டேபிஸ் ஸ்பூன் அரிசியை எடுத்துக்கொள்ளவும். அதை நன்கு அலசி ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊறினால் சிறப்பு. பின்னர் காலையில் அதை சிறிய ஆட்டுக்கல்லில் சிறுக சிறுக தண்ணீர்விட்டு ஒரு மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அந்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துவிட்டு கால் கப் தேங்காய் துருவிக் கொள்ளவும். நல்ல நெத்துக் காயாகப் பார்த்து அதிலிருந்து பூ துருவிக் கொள்ளவும். அந்தப் பூவை அரைத்து விழுதாக்கி அதிலிருந்து ஒரே முறையாக பால் எடுக்கவும். அந்தப் பாலை வடிகட்டி அரைத்து வைத்த மாவுடன் சேர்க்கவும். இந்தக் கலவையை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும். இல்லவிட்டால் அடி பிடித்துவிடும். மிக முக்கியமாக அடி கனமான பாத்திரத்தில் இதைப் பயன்படுத்த வேண்டும்.
க்ரீமைக் கிளறிக் கொண்டே இருக்கும் போது ஒரு கட்டத்தில் நல்ல க்ரீம் பதத்திற்கு வரும். அந்த நேரத்தில் இதை அடுப்பிலிருந்து இறக்கி விடவும். அடுப்பிலிருந்து இறக்கிய பின்னர் அப்படியே முழுமையாக சூடு ஆறவிடவும். அந்த வேளையில் மேலே எதுவும் மூடி போட்டுவிடக்கூடாது. திறந்து வைத்து க்ரீமை முழுமையாக ஆற விடவும். க்ரீம் நன்றாக ஆறிய பின்னர் அதில் ஏதேனும் எசன்ஷியல் ஆயில் ஊற்றிக் கொள்ளலாம். ரோஸ் எண்ணெய், லேவண்டர் எண்ணெய், வெட்டிவேர் எண்ணெய், சந்தன எண்ணெய் என எதை வேண்டுமானாலும் உங்களின் விருப்பப்படி சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு டீஸ்பூன் அளவு இதனை சேர்த்தால் போதும். இந்த ஸ்டேஜில் க்ரீமை கைப்படாமல் ஈரம் அற்ற நன்றாக உலர்ந்த கன்டெய்னரில் மாற்றிக் கொள்ளவும். அதை அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளவும். 4 நாட்கள் வரை இதனைப் பயன்படுத்தலாம். இந்த க்ரீம் ஒருவகை மசாஜ் க்ரீம். இதை மசாஜ் செய்ய மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இதில் இருக்கும் அரிசி தோலை இறுக்கமாக்கும். நீங்கள் இந்த க்ரீமை அப்ளை செய்து அப்படியே விட்டால் இறுக்கமாகும். ஆனால் அதேவேளையில் மசாஜ் க்ரீமாக பயன்படுத்தினால் சருமம் புத்துணர்ச்சி பெறும்.