சுகர் தான் ரிஸ்க்... கொரோனா உயிரிழப்புக்கு வழிவகுக்கும் நீரிழிவு - புள்ளிவிவரம் வெளியிட்ட தகவல்கள்!
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் நீரிழிவு மற்றும் சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு உயிரிழப்பு சாத்தியம் அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது
கொரோனா என்ற வார்த்தை ஒலிக்கத்தொடங்கி ஒரு வருடத்தை கடந்துவிட்டது. ஆனாலும் அதன் வீரியமும், அதன் தாக்கமும் நீர்த்துபோகவில்லை. இரண்டாம் அலை, அதிக வீரியம் என பொதுமக்களை பாடாய்படுத்துகிறது கொரோனா. குறிப்பாக இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரதாண்டவம் ஆடுகிறது. வயது வித்தியாசமின்றி பாதிப்பும் உயிரிழப்பும் ஏற்படுகின்றன. தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு 30ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு சற்று குறைகிறது. தமிழகத்தில் நேற்று 26 ஆயிரத்து 513 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையிலான கொரோனா பாதிப்பு 21 லட்சத்து 23 ஆயிரத்து 29ஆக அதிகரித்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட 910 பேர் நேற்று ஒரே நாளில் தொற்றுக்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை, 31 ஆயிரத்து 673 பேர். இதுவரை 18 லட்சத்து 2 ஆயிரத்து 176 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றும் குறைந்தது. தொற்று குறைவு என்றாலும் உயிரிழப்பு அதே நிலையில் நீடிக்கிறது. கடந்த ஒரே மாதத்தில் கொரோனாவுக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இதுவரையிலான மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 722 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா உயிரிழப்பு தொடர்பான புள்ளிவிவரம் ஒன்றை மீடியாஜர்னல் வெளியிட்டுள்ளது. அந்த புள்ளிவிவரத்தில் சாராம்சம் என்னவென்றால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் நீரிழிவு மற்றும் சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு உயிரிழப்பு சாத்தியம் அதிகம் என்பதுதான்.
>>'லாக்டவுன்ல உங்க ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்' - மறக்கக் கூடாத 5 விஷயங்கள்!
புள்ளிவிவரத்தின்படி, கொரோனா உயிரிழப்பு தொடர்பான ஆய்வுக்காக மே முதல் நவம்பர் 2020 காலக்கட்டத்தில் முக்கிய 4 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. 845 நோயாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டதில் அதில் 423 பேருக்கு நீரிழிவு இருந்துள்ளது. அவர்கள் அனைவரும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 68 பேர் உயிரிழந்தனர். அதில் 10% நீரிழிவு உள்ளவர்கள் தான்.
நீரிழிவை விடவும் சிறுநீரக பிரச்னை இன்னும் அபாயகரமானதாக உள்ளது. சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டால் உயிரிழப்புக்கான சாத்திரம் 3 மடங்கு அதிகம் என்கிறது புள்ளிவிவரம். வயதான கிட்னி பாதிப்புள்ளவர்கள் கொரோனாவுக்காக மருத்துவமனை வந்தால் அதில் பெரும்பாலானவர்கள் இறந்துவிடுவதாக அதிர்ச்சி தகவலை ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஐசியூ எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படும் நோயாளிகளில் 19% நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு பாதிக்கப்பட்டவர்களில் 18% பேர் இன்சுலின் எடுக்கின்றனர். 55.8% பேர் மாத்திரையும், இன்சுலினும் எடுக்கின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள். நீரிழிவால் பாதிக்கப்படாத ஒருவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்தால் 14 பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் இறக்கின்றனர். நிமோனியா, கல்லீரல் பிரச்னை, சிறுநீரக பிரச்னை போன்ற பக்க உடல் பிரச்னைகள் உயிரிழப்பை அதிகப்படுத்துவதாகவும், குறிப்பாக நீரிழிவு உள்ளவர்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
>> உங்கள் கல்லீரலை இயற்கையாகவே சுத்தம் செய்யும் 8 சூப்பர் உணவுகள்!