Obesity and Hair Loss : என்னது உடல் பருமனுக்கும், தலைமுடி உதிர்வுக்கும் தொடர்பு இருக்கா? எப்படி?
இடுப்பின் அளவு அதிகமாக அதிகமாக, நம் ஆயுளின் அளவு குறையும் என்பது இயற்கையின் நியதி.
இடுப்பின் அளவு அதிகமாக அதிகமாக, நம் ஆயுளின் அளவு குறையும் என்பது இயற்கையின் நியதி. அப்படி இடுப்பளவு அதிகரித்தால் அவர்களுக்கு உடல் பருமன் நோய் ஏற்பட்டுள்ளது என்பது அறிகுறி. இது முன்பெல்லாம் அரிதாக இருந்தது.
ஆனால் அண்மைக்காலமாக அப்படியான பருத்த இடுப்புடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் அதிக அளவிலானோரை காண முடிகிறது. அதற்குக் காரணம் ஆரோக்கியமற்ற உணவுமுறை, உடற்பயிற்சியின்மை, சீரற்ற தூக்கம் போன்ற பழக்கவழக்கங்கள்.
அதனால்தான் ஒபீஸிட்டி என்பது லைஃப்ஸ்டைல் அதாவது வாழ்க்கை முறை நோய் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
உடல் பருமன் ஒரு சங்கிலி தொடர் மாதிரி நீள்கிறது. சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் என பல நோய்களுக்கு வழிவகுக்கிறது. மேலும் முடி உதிர்தல் போன்ற ஆரம்பகட்ட சில அறிகுறிகளையும் ஏற்படுத்துகிறது. உங்களுக்கு முடி உதிர்தல் அதிகமாகும்போது ஊட்டச்சத்து பிரச்சனையையும் உடல் பருமன் பிரச்சனையையும் ஒன்றாகவே கவனியுங்கள். மருத்துவர் ஆலோசனையுடன் உடல் பருமனில் இருந்து மீளுங்கள். சீரான டயட், எக்ஸர்சைஸ், தூக்கம் ஆகியனவையே உடல் பருமனை சீராக்கிவிடும்.
சரி இபோது உடல் பருமனால் ஏற்படும் முடி உதிர்தல் பிரச்சனையை எப்படி சரி செய்வது என்பதற்கான ஐந்து டிப்ஸ்களைப் பார்ப்போம்.
* ஆரோக்கியமான உணவுமுறை என்பது சரியான முடி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். முடி வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் முக்கியமானவை. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது முடி உதிர்தலை தவிர்க்க உதவுகிறது.
* போதுமான மணி நேரம் தூங்குவது கூட முடி உதிர்வை குறைக்க உதவிகிறது. சரியான தூக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கும். அதுமட்டுமல்லாமல் கார்டிசோல் ஹார்மோனின் உற்பத்தியைக் குறைக்கும். தியானம், யோகா போன்ற மற்ற மன அழுத்தத்தை குறைக்கும் உத்திகளை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்ப்பதும் ந்ல்லதே.
* தலை அல்லது உச்சந்தலையில் மசாஜ் செய்வது உங்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும். ஏனெனில் இது hair follicles இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. சிறந்த முடிவுகளுக்கு தேங்காய் எண்ணெய் அல்லது வேறு ஏதேனும் எண்ணெயைப் பயன்படுத்தவும்.
* உங்கள் தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு இன்னமும் சிறந்த முடிவுகள் வேண்டுமா? உங்கள் எடை இழப்பு பயணத்தை இப்போதே தொடங்குங்கள். முடி உதிர்வுக்குக் காரணம் உடல் பருமன் மற்றும் எடை அதிகரிப்பு என்பதால், எடையைக் குறைப்பதே சிறந்த தீர்வாகும்.
* உங்கள் முடி சேதமடைவதைத் தடுக்க ஹேர் ட்ரையர் போன்ற வெப்பமூட்டும் கருவிகளைப் பயன்படுத்துதலை தவிர்க்கவும். வெப்பமூட்டும் கருவிகளை நாம் எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறோமோ, அவ்வளவு அதிகமாக நம் முடிக்கு சேதம் ஏற்படுகிறது.
இந்தியாவில் ஒபீஸிட்டி (Obesity) எனப்படும் உடல் பருமன் நோய் அதிகரித்து வருவதாக அண்மையில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இன்னமும் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும் கூட உடல்பருமன் நோயும் அதிகரித்து வருகிறது எனக் கூறுகிறது தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய பெண்கள், ஆண்கள் மத்தியில் உடல்பருமன் நோயானது 4% அதிகரித்துள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வீல் 2.1% ஆகவே இருந்தது.