அரியலூர் டூ அமேசான்... டோர்டெலிவரியில் மண்புழு உரம் : அசத்தும் விவசாயி மகள் அழகு தீரன்!
மண்புழு உரம் தயாரிப்பில் மகத்தான வருவாய் ஈட்டி, 5 மகளிர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தியுள்ள அழகு தீரன் அவரது தொழிற்பயணம்
உழவனின் 'நண்பேன்டா' மண்புழு. ஆனால் இன்றோ விளை நிலங்களில் அரிதாக காணப்படும் உயிரினமாகிவிட்டது. அதன் விளைவாய், மண்வளம் குறைந்து, மகசூல் குறைந்து, விளைப்பொருள்களின் தரம் குறைந்துவிட்டது. இதைத் தவிர்க்க 'மண்புழு உரம்' தயாரிப்பு புதிய தொழில்நுட்பமாக உருவெடுத்து புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதே நம்பிக்கையோடு மாற்றத்தினை எதிர்நோக்கி மண்புழு உரம் தயாரித்து வருகிறார் அழகு தீரன்.
மண்புழு உரத்தின் மகிமையை நன்கு உணர்ந்த விவசாயியின் மகளான அழகுதீரன், எம்.காம், பி.எட் முடித்த பட்டதாரி. விவசாயிகளை இயற்கை உரம் பயன்படுத்த வைக்கவும், மக்களுக்கு ஆரோக்கியமான உணவு சென்றிட வேண்டும் என்ற முனைப்பில் கடந்த இரு ஆண்டுகளாய் 'கறுப்பு தங்கம்' ஆன மண்புழு உரத்தினை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
அரியலுார் மாவட்டத்தில் உள்ள கோட்டியாள் எனும் சிறு கிராமத்தில் வசிப்பவர் அழகு. அச்சிற்றுாரில் வசித்தாலும் பெங்களூர், மும்பை என இந்தியாவின் பெருநகரங்களுக்கு அவருடைய மண்புழு உரத்தினை அமேசான் மூலம் விற்பனை செய்து, உள்ளூர் விவசாயிகளிடமும் மாற்றத்தை விதைத்துள்ளார்.
மண்புழு உரம் தயாரிப்பில் மகத்தான வருவாய் ஈட்டி, 5 மகளிர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தியுள்ள அழகு தீரன் அவரது தொழிற்பயணத்தை பகிர்ந்துக் கொண்டார்.
"என்னுடைய குடும்பச் சூழல் மற்றும் குழந்தைகளுக்காக நான் பணிக்குச் செல்லவில்லை. வீட்டிலேயே இருந்து ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்தேன். விவசாயத்தில் ஆர்வம் இருந்தாலும், அதற்கான சூழல் எனக்கு இங்கில்லை. சோழமகாதேவி எனும் இடத்தில் மத்திய அரசின் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி கழகம் இருக்கிறது. அங்கு, அடிக்கடி நடைபெறும் விதை நேர்த்தி, விதை உற்பத்திச் செய்தல், காளான் உற்பத்தி செய்தல் போன்ற பயிற்சிகளில் கலந்துகொள்வேன். அப்போது தான்,
“மண்புழு உரம் தயாரிக்கலாம் என்று தோன்றியது. அப்பா வீட்டிலே மண்புழு உரம் தயாரித்து, பயிர்களுக்கு பயன்படுத்தினார். மண்புழு உரம் பயன்படுத்தியப் பிறகு, நல்ல விளைச்சல் இருந்தது. காய்கறிகளும் ப்ரெஷ்ஷா, டேஸ்ட்டா இருந்தன. அதனால், மண்புழு உரம் தயாரிக்கலாம் என்ற எண்ணத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு 'சாயில் ஸ்பிரிட்' (SOIL SPIRIT) எனும் பெயரில் தொழிலைத் தொடங்கினேன்,” என்றார்.
ரூ.50,000 முதலீட்டில், சின்ன அளவுலதான் உற்பத்திக்கூடத்தை ஆரம்பிச்சேன். படிப்படியா, உரத்தை சலிப்பதப்பதற்கு சல்லடை, வெயிட் மிஷின், பேக் செய்வதற்கான தையல் மிஷின், பிரின்டர் என ஒவ்வொன்றாய் தேவைக்கேற்றாற் போன்று வாங்கி விரிவுபடுத்திக் கொண்டேன்.
மண்புழு உரத்தினை படுக்கை முறையில் தயாரிப்பதற்கு முதலில் அதற்கான பேக் வாங்கி அமைக்க வேண்டும். படுக்கையின் அடிப்பாகத்தில் தென்னை மட்டையை கவுத்திப்போட்டு ஒரு அடுக்கினை உருவாக்கவேண்டும். அதன் மேல் மணல் பரப்ப வேண்டும். பிறகு, மாட்டுச்சாணம், இலைத்தழை, காய்ந்த சருகுகள் மற்றபிற இயற்கைக் கழிவுகளை போட வேண்டும்.
அதன் மேல் தொழுவத்திலிருந்து கிடைக்கும் வைக்கோலை விட வேண்டும். இவ்விரு அடுக்குகளையும் மாறி மாறி அமைத்து, படுக்கையினை நிரப்பவேண்டும். இடையில் இருமுறை சாணக்கரைசலுடன் வெள்ளத்தினை கரைத்து தெளித்து கொள்ள வேண்டும்.
படுக்கையினை தயாரித்த பிறகு கோழி, எலிகளிடமிருந்து காக்க தென்னை அல்லது வாழை சருகுக் கொண்டு மூடி வைக்க வேண்டும். 10 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் விடவேண்டும். எருவின் சூட்டினை குறைப்பதற்காகத் தான், தண்ணீர் விடுகிறோம். 10 நாட்களில் சூடுக்குறைந்து குளிர்ச்சியாகிவிட்டதா என்பதை படுக்கையின் மேற்பரப்பைத் தொட்டு பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். அதன்பிறகு, 12*3 அடி பைக்கு 4 முதல் 5 கிலோ மண்புழுக்களை விடவேண்டும்.
ஆர்கானிக் கழிவுகளை உணவாக உட்கொள்ளும் மண்புழு வெளியேற்றும் கழிவுகளே உரமாகக் கிடைக்கும். மண்புழுவினை விட்டதிலிருந்து 45 முதல் 60 நாட்களுக்குள் மகசூல் கிடைக்கும். உடனே முழு பெட்டிலிருந்து மண்புழு உரத்தினை பெற்றிட இயலாது. மேற்புறத்திலிருந்து ஒவ்வொரு அடுக்காக உரத்தினை எடுத்துக் கொண்டே வரவேண்டும். முழுவதுமாக ஒரு பெட் கழிவுகளை உரமாக சேகரிக்க 90 முதல் 120 நாட்கள் வரையாகும்.
சேகரிக்கும் உரத்தைச் சல்லடைகளில் சலிக்க வேண்டும். சலிக்கும்போது உரத்தில் உள்ள குச்சி, கல் போன்ற பொருள்கள் தனியாகப் பிரிந்துவிடும். பிரித்து எடுத்த உரத்தைப் பைகளில் நிரப்பி விற்பனையைத் துவங்கலாம். ஆனால், எனக்கு தொடக்கத்தில் விற்பனையே இல்லை. விற்பனையைப் பெருக்க பல முயற்சிகளும் எடுத்தேன்.
பெருநகரங்களில் உள்ள நர்சரிகளுக்கு போன் செய்து எனது தயாரிப்பை பற்றி எடுத்துக்கூறினேன். ஆனாலும், பெரியதாக எந்த வியாபாரமும் நடக்கவில்லை. தொழில் தொடங்கிய 2 ஆண்டுகளிலே, 3 முறை முயற்சியை கைவிட்டுவிடலாம் என்று யோசித்துள்ளேன். ஆனால், அந்த சமயங்களில் எல்லாம் பல்க் ஆர்டர் கிடைக்கும். உள்ளூரில் உரம் வாங்கியவர்கள், மகசூல் நல்லாயிருக்குனு மற்ற விவசாயிகளுக்கு பரிந்துரைக்க, அவர்கள் வந்து வாங்கி செல்வார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஊக்கத்தை அளிக்கும்.
ஆரம்பக்காலத்தில், நான் பயிற்சி எடுத்துக் கொண்ட வேளாண் அறிவியல் கழகம் நிறைய ஆர்கானிக் விவசாயிகளுக்கு எனது தயாரிப்புகளை பரிந்துரைந்து, ஆதரவு அளித்தனர். அவர்கள் மூலம் எனக்கு நிறைய ஆர்டர்கள் கிடைத்துள்ளது. இருப்பினும், எதிர்பார்த்தப்படியான விற்பனை நடக்கவில்லை. முதல் பெட்டிலிருந்து கிடைத்த உரத்தினை விற்பனை செய்வதற்கு மட்டும் 4 முதல் 5 மாதங்களாகியது.
விற்பனை ரீதியில் மட்டுமின்றி, உற்பத்தியிலும் சில சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. மண்புழு உரம் தயாரிக்க எப்போதும் நிழல், ஈரப்பதம், குளிர்ச்சி நிறைந்து இருக்கவேண்டும். அதற்காகவே நிழல் வலை கொண்டு கூரை அமைத்துள்ளோம். வெளிச்சம் அதிகம் படக்கூடாது.
எறும்பு, எலிகள் போன்றவற்றின் தொந்தரவு இல்லாமல் கவனித்துக் கொள்வது அவசியம். குளிர்ச்சியான இடங்களுக்கு எறும்பு எளிதில் வந்துவிடும் என்பதால், அவ்வப்போது பராமரித்து கொள்ளவேண்டும். ஆனால், இவையனைத்தையும் அனுபவத்தின் வாயிலாகவே கற்றுக்கொண்டேன். தொடக்கத்தில் இந்த பிரச்சினைகளை எல்லாம் சந்தித்துபின், ஒவ்வொன்றிற்கும் தீர்வினை கண்டறிந்து செயல்படுத்தினேன்.
தொழிலை மேம்படுத்த, விற்பனை விகிதம், வாடிக்கையாளர்களின் தேவை, தயாரிப்புகளில் தரம் உயர்த்துதல் என பல கோணங்களில் சிந்தித்தேன். அப்போது, என்னுடைய தயாரிப்புகளை பெரும்பாலும் வெளியூர்களில் உள்ள விவசாயிகளே வாங்கிச் செல்கின்றனர் என்பதை கணித்தேன். கிராமங்களுடன் தொடர்புப்படுத்துகையில், சிட்டியிலுள்ள விவசாயிகள் ஆர்கானிக் உரத்திற்கு மாறி வருகின்றனர்.
விவசாயிகள் மட்டுமின்றி, மாடித்தோட்டம் வைத்து வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை விளைவித்து கொள்பவர்களுக்கு, மண்புழு உரம் பயனுள்ளதாக அமையும். நானும் கிராமப்புறத்தில் வசிப்பதால், வீட்டுத் தேவைகளுக்கு சில சமயம் ஆன்லைன் வணிகத்தளங்களையே நாடுகின்றேன். நம்முடைய புரோடெக்டையும் ஆன்லைனில் அமேசானில் விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்து, அதற்கு வேண்டிய ஆவணங்களைத் தயாரித்தேன்.
அமேசானில் எப்படி பதிவு செய்வது, நம்முடைய தயாரிப்புகளை எப்படி தொடக்கத்திலே காட்ட செய்வது? என்று கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக்கொள்வதற்குள் ஒரு வழியாகிவிட்டது.
அமேசான் சப்போர்ட்டிங் டீமே எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்ற வழிமுறைகளை கற்றுக் கொடுத்தனர். கடந்த 2 ஆண்டுகளில், ஆண்டுக்கு 10 டன் மண்புழு உரம் மட்டுமே தயாரித்து விற்பனை செய்துள்ளேன்
கடந்த மாதம் மட்டும் 10 டன்னுக்கும் அதிகமான மண்புழு உரம் விற்பனையாகி ரூ.50,000 வருவாய் கிடைத்தது. மண்புழு உரத்தின் விலை 15ரூபாய். மொத்தமான ஒரு டன்னில் கொள்முதல் செய்தால் ஒரு டன் ரூ.12,000. இப்போது கிடைக்கும் ஆர்டர்களுக்கு ஏற்ற அளவில் உற்பத்தி செய்ய முடியவில்லை. கிராமத்தில் உள்ள கஷ்டப்படக்கூடிய 5 பெண்களுக்கு மண்புழு உரம் தயாரிக்கக் கற்றுக்கொடுத்து, அதற்குத் தேவையான மூலப்பொருட்களை அளித்துள்ளேன்.
வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் வைத்துள்ள பெரும்பாலானோர் மண்புழு உரத்தை பயன்படுத்துகின்றனர். அதனால் மண்புழு உரத்தை தொடர்ந்து, தேங்காய் நார், செம்மண், மண்புழு உரம் மற்றும் பயோ பாக்டீரியாக்களான பாஸ்போ பாக்டீரியா, அசோஸ்பைரில்லம், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றை சரியான கலவையில் கலந்து அனைத்து விதமான செடிகளுக்கும் ஏற்ற தரமான மண்கலவையை செய்து விற்று வருகிறேன்.
செடிகளில் பூச்சியரிக்காமல் இருப்பதற்காகவும், எறும்புகள் வராமலும் தடுக்க உதவும் வேம்பில் தயாரித்த நீம் கேக் பவுடர், பஞ்சகாவ்யம் மற்றும் சில பயோ பாக்டீரியத் தயாரிப்பையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.
சாயில் ஸ்பிரிட் என்ற பிராண்ட்டின் பெயர் வெளியில் தெரியத்துவங்கிய பின், பல நர்சரிகளும் ரீசேல் செய்வதற்காக எங்களுடைய மண்புழு உரங்களை வாங்கிச் செல்கின்றனர். விவசாயிகளும் டன் கணக்கில் மண்புழு உரங்களை வாங்குகின்றனர். கடந்தமாதம் ஒரே விவசாயிக்கு 2 டன் வரை பார்சல் செய்து அனுப்பினோம்.
அதற்குள், அமேசானில் எங்களுடைய பிராண்ட் பெயரிலே விற்பனை துவங்கியுள்ளார் ஒருவர். அதை நன்முறையில் செய்தால் கூட பரவாயில்லை. எடை குறைந்தும், தரம் குறைந்த அவர்களது மண்புழு உரத்தை வாங்கி எங்களது வாடிக்கையாளர்கள் ஏமாறிவிடுகிறார்கள். அமேசானில் எங்களது தயாரிப்புகளை வாங்குபவர்கள், தயாரிப்பின் விவரங்கள் பட்டியலில் உற்பத்தியாளராக அறிவு ஏஜென்சி என்று குறிப்பிட்டிருந்தால் மட்டும் வாங்கவும், என்று கூறி அவர் கடந்துவந்த பாதைகளை நினைவுகூர்ந்தார் அழகு.