Aloo Egg Curry : உருளை முட்டைக்கறி...சப்பாத்தி, தோசைக்கு செம காம்பினேஷன்...ட்ரை பண்ணுங்க..
சுவையான உருளை முட்டைக்கறி செய்வது எப்படி? என பார்க்கலாம்.
முட்டையில் செய்த ரெசிப்பி என்றால் பெரும்பாலும் அனைவருக்குமே பிடிக்கும். அதுவும் உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்தால் சுவை அசத்தலாகத்தானே இருக்கும். அந்த வகையில் உருளை முட்டைக்கறியை ஒரு நாள் சமைத்து பாருங்கள். இது சப்பாத்தி மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். வாங்க இந்த ஆலு முட்டைக்கறி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1 உருளைக்கிழங்கு, 3 முட்டை, 2 பச்சைமிளகாய், 5 சின்ன வெங்காயம், 1 பெரிய வெங்காயம் நறுக்கியது, 1 தக்காளி நறுக்கியது ,1 துண்டு இஞ்சி,4 பல் பூண்டு, கருவேப்பில்லை சிறிதளவு, உப்பு தேவையான அளவு, 2 டேபிள் எண்ணைய் , 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி கலவை தூள், ¼ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் ,½ டேபிள் ஸ்பூன் மிளகு பொடி ,கொத்தமல்லி சிறிது நறுக்கியது.
செய்முறை
முதலில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். கடைசியாக சிறிது கருவேப்பிலை சேர்த்து இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு உருளைக்கிழங்கை குக்கரில் தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைத்து பின் தோல்களை நீக்கி நன்கு மசித்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி முட்டையை அரை பதமாக வேகவைத்து, முட்டையின் ஓடுகளை நீக்கி வைக்கவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பாதி வதங்கியதும் இடித்து வைத்த சின்ன வெங்காயக் கலவையை சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் சாம்பார் பொடி மற்றும் தூள் வகைகளை சேர்த்து கிளற வேண்டும். சிறிது தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்றாக கொதிக்கவிட வேண்டும். பிறகு கரண்டியால் முட்டையை ஒன்றிரண்டாக பொடித்துவிட்டு அதில் சேர்க்கவும். மசித்த உருளைக்கிழங்கையும் சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து நன்றாக கொதித்ததும், கடைசியாக மிளகுப் பொடி, மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி விடவும். இப்பொழுது சுவையான உருளை முட்டைக்கறி தயாராகிவிட்டது. இதை சப்பாத்தி அல்லது தோசையுடன் வைத்து சாப்பிட்டு பாருங்கள் சுவை அசத்தலாக இருக்கும்.