Skin Care Routine : தினமும் பத்து நிமிஷம்.. கருவளையம், சரும பிரச்சனைகளுக்கு இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க..
நாள் தோறும் பத்து நிமிடங்கள் ஒதுக்கி சருமத்தை பாதுகாத்து வரும் பட்சத்தில் மனதுக்கும் உடலுக்கும் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
இந்த அவசர உலகில் தமது முகம் உள்ளிட்ட சரும பராமரிப்பை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்படலாம். இருந்த போதும் சரும பராமரிப்பு என்பது முக்கியமானதாகும் .எப்போதுமே அனைவரும் தங்கள் முகத்தையும் உடலையும் அழகாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க விரும்புவார்கள்.
ஆகவே மிகவும் வேலைப்பளு மிக்க பாடசாலை, கல்லூரி நாட்களில் தங்களது சரும அழகை பேணி பாதுகாக்கும் சில வழிமுறைகளை நாம் பார்க்கலாம்
குறைந்தது வெளியில் கிளம்பும் முன் பத்து நிமிடங்களாவது சரும பராமரிப்புக்கென ஒதுக்கி செயல்பட்டால் வாழ்நாள் முழுவதும் சருமத்தின் அழகு தொடர்ந்து கொண்டே இருக்கும். காலையில் எட்டு மணிக்கே பாடசாலை ,கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக மாணவிகள் தமது சரும பராமரிப்பில் கவனம் செலுத்துவதை தவறவிடுகின்றனர்.
ஆகவே மாணவிகள் தங்களது வேலை பளுவுக்கு மத்தியில் தமது உடலை கவனித்துக் கொள்ள குறைந்தது முப்பது நிமிடங்களாவது ஒதுக்க வேண்டும். சரும பராமரிப்பிற்கு அதிகளவான நேரமோ, பணம் செலவிட வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து மாணவிகள் தங்களது அழகையும், தோலையும் பராமரிக்கலாம்.
இவ்வாறு நாள் தோறும் பத்து நிமிடங்கள் ஒதுக்கி உங்களது சருமத்தை பாதுகாத்து வரும் பட்சத்தில் மனதுக்கும் உடலுக்கும் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
கல்வி, வேலைக்காக வெளியே செல்லும் மாணவிகள், நாள் தோறும் வேலைப்பளு, மன உளைச்சல் அதிகளவான டென்ஷன் என மீண்டும் வீடு திரும்பும் போது முகம் களை இழந்து ,உடலும் புத்துணர்ச்சி அற்றதாக இருக்கும். ஆகவே நாள்தோறும் ஒரு பத்து நிமிடம் உங்களுடைய சருமத்தையும் உடலையும் பாதுகாக்க ஒதுக்கினால் மட்டுமே எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
முதலில் காலையில் எழுந்த உடனே நன்கு குளிர்ந்த நீரால் உங்களுடைய முகத்தை கழுவ வேண்டும். அப்போது தூங்கும் போது சருமத்தில் உற்பத்தியாகிய நச்சுக்கள் ,இறந்த சரும செல்கள், மற்றும் கூடுதலாக இருக்கும் எண்ணெய்கள் போன்றவை அகற்றப்பட்ட விடும்.
கிளென்சர்:
ஒரு நாளை தொடங்க முன் முகம் கழுத்து உடல் முழுவதையும் சுத்தப்படுத்துதல் என்பது, அன்றைய நாளுக்கான ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதாக அமைகிறது. ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது முகம் நன்கு பிரகாசமாகவும் மற்றும் உடல் செயல்பாடுகள் சுறுசுறுப்பாகவும் இருக்கும். முகம் கழுவும்போது நன்கு தரம் வாய்ந்த முகத்திற்கு நன்கு பொலிவு தரக்கூடிய கிளென்சரை பயன்படுத்தவும். விரல் நுனிகளால் முகத்தை நன்கு வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். அப்போது முகத்திற்கான ரத்த ஓட்டம் நன்கு அதிகரித்து முகம் பளபளப்பாகும். பின்னர் டோனரை பயன்படுத்தி முகத்தில் உள்ள அழுக்குகளை சுத்தப்படுத்த வேண்டும்.
சீரம்:
பின்னர் ,மாய்ஸ்சரைசர்களை விட சீரம் முகத்திற்கு சிறந்த பலனை தருவதால் சருமத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும்.
முகத்தை டோனிங் செய்த பிறகு, சருமம் கொஞ்சம் ஈரமாக இருக்கும்போதே சீரம் தடவ வேண்டும். இது சருமத்தில் ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. விரல் நுனியில் இரண்டு அல்லது மூன்று துளிகள் சீரம் தடவி அதை மெதுவாகத் முகம் கழுத்து முழுவதும் பூச வேண்டும்.
கண்களின் பராமரிப்பு:
கருவளையம் போக்குவதற்கு இயற்கை மருத்துவத்தில் தயிர் சிறந்த பொருளாக இருக்கிறது.பன்னீரை பஞ்சில் தோய்த்து கண்களை சுற்றி நன்கு மசாஜ் செய்து வர நாளடைவில் கருமை நீங்கி கண்கள் பளிச்சென்று இருக்கும். கஸ்தூரி மஞ்சள் ,தயிர், சந்தனம் , பன்னீர் கலந்து தினமும் கண்ணுக்கு அடியில் தடவி 5 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கருவளையம் நீங்கிவிடும். மேலும் அருமையான இயற்கை மருந்தான வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும் என கூறப்படுகிறது. அலோவேரா ஜெல்லும் கண்களை சுற்றி மசாஜ் செய்ய சிறந்த மருந்தாகும்.
அதேபோல் உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி சருமம் பளபளப்பாகும். அதேபோல் தரமான Under Eye க்ரீம்களை பயன்படுத்துவதன் மூலம் கண்ணைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்கி கண்கள் நன்கு பளிச்சென தெரியும்.
குறைந்தது ஒரு நிமிடமாவது ஓய்வெடுக்க வேண்டும்:
முகத்தை சுத்தம் செய்துவிட்டு , சீரம் பயன்படுத்திய பின்னர், கண்களுக்கும் மசாஜ் செய்த பின்னர் குறைந்தது ஒரு சில நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும். அப்போதுதான் முகத்திற்கு செய்த சிறிய ஃபேசியல் நல்ல பயனைத் தரும். முகத்தில் உள்ள தோல்களில் அவை ஊடுருவி நன்கு பளபளப்பை ஏற்படுத்தும்.
இரண்டு நிமிடங்களில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும்:
சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் சருமத்தை ஈரப்பதமாக்க வேண்டும். இதற்கு உங்கள் சருமத்திற்கு உகந்த நன்கு தரமான மாய்ஸ்சரைசரை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு முகத்திற்கு நன்கு மாய்சரைசரை பயன்படுத்தும் போது வறட்சி எண்ணெய்த்தன்மை போன்றவை நீங்கி நன்கு ஈரப்பதத்துடன் சருமம் மிளிரும்.
இறுதியாக சிறியதாக உங்கள் முகத்தை அழகுப்படுத்திக்கொள்ளலாம். சிறந்த தோல் பராமரிப்பு செய்துள்ளதால் அதிகளவான மேக்கப் சருமத்திற்கு தேவையில்லை. வெளியே செல்லும் முன் முகத்தை சூரிய கதிர் வீச்சில் இருந்து பாதுகாக்க SPF இருக்கும் கிரீமை பயன்படுத்தலாம். இதனை அடுத்து லிப்பாம், கண்களுக்கு மஸ்காரா போன்றவற்றால் சிறிய அளவில் முகத்தை அழகு படுத்திக்கொள்ளலாம்.
பொதுவாகவே இயற்கை முறையிலான அழகுசாதனப் பொருட்கள் நம்மை நன்றாக உணரவும், அழகையும், தன்னம்பிக்கை உணர்வையும் ஏற்படுத்தும்.
முகத்தில் பொலிவு, அழகு ஏற்படும் பட்சத்தில் ஒரு நம்பிக்கை தானாகவே கிடைக்கும். ஆகவே ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் சருமத்தை கவனித்துக்கொள்ள நேர ஒதுக்குவது புத்துணர்ச்சியை அளிக்கும். இதன் மூலம் தமது அன்றாட கடமைகளை தொடங்க சுறுசுறுப்பையும் மகிழ்ச்சியையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளலாம்.