”இந்தப் பெரியவங்களே இப்படித்தான்!” - வீட்டுப் பெருசுகளின் அதீத அலப்பறைகள் லிஸ்ட்
ஒவ்வொரு இந்திய வீட்டிலும் பெரியவர்கள் அனைவரும் பின்பற்றும் சில பொதுவான வித்தியாசமான பழக்கங்கள் உள்ளன.
நம் வீட்டுப் பெரியவர்கள் வயதானவர்கள் என்றாலும் நிறைய விஷயங்களில் அவர்கள் நியாயமற்றவர்களாகவே இருப்பார்கள். அவற்றில் ஒன்று. நீங்கள் ஒரு நடுத்தர வர்க்க இந்திய குடும்பத்தில் வளர்ந்திருந்தால், அர்த்தமே இல்லாத பல வித்தியாசமான நடைமுறைகளை நீங்கள் சந்தித்திருக்கக் கூடும். செவ்வாய்க்கிழமை முடியைக் கழுவக் கூடாது, புதன்கிழமை நகம் வெட்டக் கூடாது, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டைச் சுத்தம் செய்யக் கூடாது.
இப்படிப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். ஒவ்வொரு இந்திய வீட்டிலும் பெரியவர்கள் அனைவரும் பின்பற்றும் சில பொதுவான வித்தியாசமான பழக்கங்கள் உள்ளன. கேட்டால், அவர்களிடம் அதற்கு பகுத்தறிவு விளக்கம் இருக்காது, ஆனால் ’பெரியவங்க சொன்னா சரியாதான் இருக்கும்’ என்கிற பதில் மட்டும் இருக்கும்.
1. பிள்ளைகளை ஒப்பிடுதல்
”அந்த வீட்டுப் பையன் உன்னைவிட எல்லா வகையிலும் சிறப்பா இருக்கான். நாசாவில் வேலை கிடைக்குமா? அவங்க வீட்டுப் பையன் ஏற்கெனவே நிலாவுக்கு சென்றுவிட்டான்” என்பார்கள். பக்கத்துவீட்டு பிள்ளையுடன் ஒப்பிட்டே தனது வீட்டுப் பிள்ளையின் தனித்துவத்தை மறந்துவிடுவார்கள்.
2. விசேஷ நிகழ்வுகளுக்காகவே பாத்திரங்களைச் சேமித்து வைத்தல்
வெள்ளிப் பொருட்கள், வெண்கலப் பாத்திரங்கள், கம்பளங்கள் சிறப்பு விசேஷ நிகழ்வுகளுக்காகவே சேமித்து வைத்த பொருட்கள் எப்போதும் வீட்டில் இருக்கும். அந்த விசேஷ நிகழ்வும் வராது, அந்த பொருட்களையும் உபயோகிக்க மாட்டார்கள்.
3. விருந்தினர்களுக்கு என தனிப் பாத்திரம்
வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு என தனிப்பாத்திரத்தை உபயோகிக்கும் பழக்கம் வீட்டில் பெரியவர்களுக்கு உண்டு. அதில்தான் அவர்களுக்கான டீ காபி எல்லாம். அதை இவர்கள் உபயோகிக்க மாட்டார்கள், அல்லது தொடக்கூட மாட்டார்கள்.
4. உறவுக்காரங்கனாலே இலவச அட்வைஸ்
இந்தத் திருமண வீடுகளுக்குச் செல்லும் சிங்கிள்ஸ் ரொம்ப பாவம். ‘அப்புறம் எப்போ கல்யாணம்?’ என பார்க்கும் அத்தனைப் பெரியவர்களும் கேட்பார்கள். ‘அப்புறம் நீங்க எப்போ போய் சேரப் போறீங்க?’ எனக் கேட்கத் தோன்றும் மனநிலையை அந்த சிங்கிள்ஸ்கள் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகவே தெரியும்.
5. பழைய பொருட்களைப் போட்டு பிஸ்கட் டப்பாக்களை வைத்திருப்பது
நாம் பசியுடன் இருக்கும்போது வீட்டில் பழைய பிஸ்கட் டப்பாக்களை ஆவலாகத் திறந்தால் உள்ளே பழைய ஐட்டம்கள் அத்தனையும் இருக்கும். இப்படிப் பழைய பொருட்களைப் போட்டுவைக்க டப்பா சேர்த்துவைப்பது வீட்டுப் பெரியவர்களின் ஹாபி.
6. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?
’நாலு பேர் என்ன சொல்லுவாங்க?’. சமுதாயம் என்ன சொல்லுமோ என்ற கவலையில் அவர்கள் தங்கள் குழந்தைகளின் உயிரையேப் பணயம் வைக்கத் தயாராக இருக்கிறார்கள். இருப்பினும், மோசமான எதுவும் நடக்கும் போது அந்த சமூகம் அவர்களுக்கு எப்போதும் உடன் இருப்பதில்லை, பிள்ளைகள்தான் இருக்கிறார்கள் என்பதை உணர்வதில்லை.