11ஆயிரம் காலிப்பணியிடங்களை அறிவித்த டிஎன்பிஎஸ்சி: குரூப் 1 முதல் குரூப் 4 வரை முழு விபரம் இதோ!
டிஎன்பிஎஸ்சியின் முந்தையத் தேர்வுகள் போல் இல்லாமல் 2022 ஆம் ஆண்டு குரூப் 2 தேர்விற்கு குரூப் 4 க்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை விட அதிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குரூப் 1 முதல் குரூப் 4 வரை வருகின்ற 2022 ஆம் ஆண்டில் 11 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இளைஞர்கள் பலரின் கனவு எப்படியாவது தேர்வில் வெற்றிப்பெற்று அரசுப்பணியில் சேர வேண்டும் என்பது தான். இதற்காக ஏதாவது ஒரு டிகிரியை முடித்துவிட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் தேர்விற்கு தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள். இந்த தேர்வுகளில் தேர்ச்சிப்பெற்றால் மட்டுமே அரசுப்பணியில் அவர்கள் சேர முடியும். இதனால் தமிழகத்தைப்பொறுத்தவரை குரூப் 1 ,குரூப் 2, குரூப் 4 என்ற வகையில் நடத்தப்படும் இந்த தேர்வை ஆண்டுதோறும் லட்சக்கணக்காக மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என பலரும் எழுதி வருகின்றனர். ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்படாமல் இருந்தது மாணவர்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, டிஎன்பிஎஸ்சி தலைவர் 2022 ஆம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை வெளியிட்டதோடு, எப்போது தேர்வு என்பது குறித்து பின்னர் முழுமையாக அறிவிப்பு தெரிவிக்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 1 தேர்விற்கு 49 இடங்களும், குரூப்2 தேர்விற்கு 101 இடங்களும், குரூப்2 A தேர்விற்கு 5730 இடங்கள் மற்றும் குரூப் 4 தேர்விற்கு 5255 இடங்கள் என மொத்தம் 11 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வை எதிர்நோக்கி இருக்கும் இளைஞர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 2022 ஆம் ஜனவரி மாதம் முதல் தேர்வுகள் நடைபெறும் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்விற்கான தேதி இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தப்போதும் ஒவ்வொருவரும் டிஎன்பிஎஸ்சி தேர்விற்குத் தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக முந்தைய தேர்வுகள் போல் இல்லாமல் 2022 ஆம் ஆண்டு குரூப் 2 தேர்விற்கு குரூப் 4 க்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை விட அதிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதோடு தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த அறிக்கையின்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தமிழில் தாளில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்த தமிழ் தேர்வில் குறைந்த பட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் பதாளில் தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே தேர்வரின் மற்ற தாள்கள் திருத்தப்படும் என்றும், தமிழ் தாளிலில் தோல்வியடைந்தால்,மற்ற தாள்கள் திருத்துவதற்கு கணக்கில் எடுத்துக்ககொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வேலை தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும் என்பதைக்கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.