விருதுநகரில் ரூ.38.73 கோடி மதிப்பீட்டில் புதிய டைடல் பூங்கா.. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - மாவட்டத்திற்கு புதிய அடையாளம்!
இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்படும்.- என தெரிவித்தனர்.

விருதுநகரில் ரூ.38.73 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
டைடல் பூங்கா
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(26.02.2026) காணொலி காட்சி வாயிலாக, விருதுநகர் மாவட்டத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மற்றும் டைடல் நிறுவனம் சார்பில் ரூ.38.73 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் மினி டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.
டைடல் பார்க்கில் என்ன, என்ன வசதிகள்
தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பரவலாக்கும் அரசின் கொள்கை முடிவின்படி, விருதுநகர் மாவட்டத்தில் புதிய TIDEL NEO ஐடி பூங்கா அமைப்பதற்கான பணிகளை தமிழக முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். விருதுநகர் வட்டம், கூரைக்குண்டு கிராமத்தில் உள்ள மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் (Master Plan Complex) சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஐடி பூங்கா அமையவுள்ளது. சுமார் ரூ.38.73 கோடி மதிப்பீட்டில், நவீன உள்கட்டமைப்புடன் கூடிய 61,000 சதுர அடி பரப்பளவிலான கட்டிடம் (தரைத்தளம் + 3 மாடிகள்) கட்டப்பட உள்ளது. இந்தத் தகவல் தொழில்நுட்பப் பூங்கா சர்வதேச தரத்திலான தடையற்ற மின்சாரம்(100% ஜெனரேட்டர் (DG) பேக்-அப் வசதி), கட்டடம் முழுவதும் மத்திய குளிரூட்டப்பட்ட (Centralised AC) வசதி, 24/7 சிசிடிவி கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை அமைப்பு (IBMS), சிற்றுண்டிச்சாலை (Cafeteria), விசாலமான வாகன நிறுத்துமிடம் மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு வசதிகளுடன் அமையவுள்ளது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
இந்த TIDEL NEO பூங்கா செயல்பாட்டிற்கு வருவதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐடி பட்டதாரிகளுக்கு தங்கள் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும். மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இப்பகுதியில் தழைத்தோங்க வழிவகுக்கும். இந்த பூங்காவால் இப்பகுதியைச் சுற்றி போக்குவரத்து, உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் சிறு வணிகங்கள் பெருகி, உள்ளூர் மக்களின் வருமானம் அதிகரிக்கும். விருதுநகரில் அமையவுள்ள மெகா ஜவுளிப் பூங்கா மற்றும் இந்த மினி டைடல் பார்க் ஆகிய இரண்டும் இணைந்து மாவட்டத்தை ஒரு மிகப்பெரிய தொழில் மையமாக (Industrial Hub) மாற்றும். விருதுநகர் மாவட்டத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.























