TNPSC EXAM: டி.என்.பி.எஸ்.சி தேர்வு தொடங்குவதில் சிக்கல்.. பல இடங்களில் தாமதம்: குளறுபடி காரணமா?
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்குவதில் பல இடங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் 2 ஏ ஒருங்கிணைந்த தேர்வு தொடங்குவதில் பல இடங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்வர்களின் பதிவு எண் மாறி இருப்பது உள்ளிட்ட காரணங்களால், பல இடங்களில் சரியான நேரத்திற்கு தேர்வு தொடங்கவில்லை. சென்னை, கடலூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களில் தேர்வு தொடங்குவது தாமதமாகியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சுமார் ஐயாயிரம் பணியிடங்களுக்கு 50 ஆயிரம் பேர் தேர்வு எழுத விண்னப்பித்துள்ளனர். 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு, 10 மணிக்கு பிறகும் சில இடங்களில் தேர்வு தொடங்கவில்லை.
புதுக்கோட்டையில் 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய குரூப்-2 முதன்மை தேர்வில், ஜேஜே கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் மாணவர்களுக்கான வினாத்தாள் மாறியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையிலும் துரைப்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களிலும், குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு தொடங்கப்படவில்லை. இதனிடையே, எந்தெந்த மையங்களில் தாமதமாகத் தேர்வு தொடங்குகிறதோ, அந்த மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. உறுதி அளித்துள்ளதாக தகவல் அளித்துள்ளது.