10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு - எங்கே தெரியுமா?
மயிலாடுதுறையில் 10 ஆயிரம் பேருக்கு பணி வழங்கும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் தலைமையில் முன்னேற்பாடு கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் மார்ச் 29 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்
இம்முகாமில் சென்னை, கோவை, திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பெருநகரங்கள் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட வேலை தேடுநர்களை தேர்வு செய்ய உள்ளன.
மாவட்ட ஆட்சியர் தகவல்
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் கூறியதாவது: "வேலை தேடும் இளைஞர்களுக்காக மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) ஆகியவை இணைந்து வருகின்ற மார்ச் 29 -ம் தேதி காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 5-ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகள் வரை உள்ளோர் இதில் கலந்து கொண்டு பயனடையலாம். பங்கேற்பவர்களுக்கு திறன் பயிற்சி, வங்கி கடன் வசதி, அயல்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் அரசு போட்டித் தேர்வுகள் குறித்து இலவச வழிகாட்டுதல் வழங்கப்படும்." என்றார்.
தேவையான ஆவணங்கள் மற்றும் பதிவு செய்யும் வழிமுறைகள்
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலை தேடுநர்கள் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் முன் அனுபவச் சான்றுகள் ஏதேனும் இருப்பின் ஆகியவற்றுடன் நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் (வேலைவாய்ப்பாளர்கள்) www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 04364-299790 / 94990 55904 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம். இந்த நிகழ்வில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல், மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

