இனிமே 12 மணிநேரம் வேலையா? : 8 மணிநேர பணியின் பின்னால் இருக்கும் தியாக வரலாறு தெரியுமா?
8 மணிநேர வேலை கோரிக்கையே ரஷிய புரட்சிக்கு வித்திட்டு சோவியத் யூனியன் உருவாக காரணமானது
இந்தியாவில் மத்திய அரசின் புதிய வேலை நேர சட்டத்திருத்தத்தின் படி தினசரி 12 மணிநேர வேலையும், வாரம் 3 நாட்கள் விடுமுறையும் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த சூழலில் தற்போது நடைமுறையில் உள்ள 8 மணிநேர வேலைத்திட்டத்துக்கு பின் இருக்கும் தியாக வரலாறு என்ன? விரிவாக காண்போம்.
மே 1-ம் தேதி… உலக தொழிலாளர் தினம். நம்மில் பலரும் ரஜினிகாந்த் நடித்த “உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்குமில்லே…” என்ற பாடலையும், அஜித் நடித்த ரெட் படத்தின் பாடலையும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டசாக வைத்துவிட்டு, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொழிலாளர் தின சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்திருப்போம்.
ஆனால், அன்றைய தினம் கொண்டாட்டங்களுக்கு மட்டுமானது அல்ல. மாறாக உலகின் மிகப்பெரிய இனமான தொழிலாளர்களின் உரிமைகளை நினைவுகூர்வதற்கானது. 16-ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டில் தொடங்கப்பட்ட 8 மணி வேலை நேர இயக்கம் உலகம் முழுவதும் பற்றிப்படர்ந்தது. உலகின் பல நாடுகளில் விடுதலை போராட்டங்களும், இருநாடுகளுக்கு இடையேயான போர்களும் நடந்துகொண்டு இருந்த 1800-ம் ஆண்டுகளில், உலகம் முழுவதும் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடத் தொடங்கினர்.
பிரான்ஸ், அமெரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற பல நாடுகளில் தொழிலாளிகள் 12 முதல் 16 மணிநேரம் வரை மிகச்சொற்பமான ஊதியத்துக்காக கசக்கிப் பிழியப்பட்டனர். இதை எதிர்த்து அந்தந்த நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன. ஆஸ்திரேலியாவில் 1896-ம் ஆண்டு கட்டிடத் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை வேண்டி தொடர்வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றனர். 8 மணிநேர வேலை கோரிக்கையே ரஷிய புரட்சிக்கு வித்திட்டு சோவியத் யூனியன் உருவாக காரணமானது.
அமெரிக்காவில், 1886 மே 3-ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ பேரெழுச்சி ஏற்பட்டது. நேரக்குறைப்பை வலியுறுத்தி மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவன ஊழியர்கள் 3,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிர் நீத்தனர். இதனை கண்டித்தும், நேரக்குறைப்பை வலியுறுத்தியும் அமெரிக்காவின் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனிடையே அமைதியாக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். அதற்காக தொழிலாளர் இயக்கத் தலைவர்கள் 7 பேர் தூக்கிலிடப்பட்டனர். அரசு சதியால் கொல்லப்பட்ட 7 பேரின் இறுதி ஊர்வலத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
அமெரிக்க தொழிலாளர்கள் நடத்திய 8 மணிநேர வேலைக்கான போராட்டமும், அதற்காக உயிர்நீத்த தியாகிகளின் இன்றைக்கு மே 1 உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த படுகொலைகள் 8 மணிநேர வேலைக்கு வித்திட்டது. இச்சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தலைமையில் பாரீசில் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது. உலகம் முழுவதும் 400 பேர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணிநேர வேலைக்குறைப்பை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை கையில் எடுப்பது என்றும், சிகாகோ சதியை வன்மையாக கண்டித்து, 1890 மே 1-ஆம் தேதி அனைத்துலக தொழிலாளர் மாநாடுகளை நடத்திட அழைப்பு விடுக்கப்பட்டது. அன்று முதல் மே 1-ம் தேதி சர்வதேச தொழிலாளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் ஏற்பட்ட புரட்சி உலக தொழிலாளர்கள் அனைவர் மத்தியிலும் 8 மணி நேர வேலை கோரிக்கைக்கு வித்திட்டது. இதன் தொடர்ச்சியாக இந்தியா உட்பட பல நாடுகளில் கம்யூனிஸ்டு இயக்கங்கள், தொழிலாளர் அமைப்புகள் நடத்திய போராட்டங்கள், அதற்காக அவர்கள் செய்த உயிர் தியாகங்களின் காரணமாகவே நாம் இன்று 8 மணிநேர வேலையை செய்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.